தமிழகத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

              இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இலங்கைக்கு வழங்கப்பட இருந்த ரூ.65 கோடி நிதி உதவியையும் அமெரிக்க அரசு ரத்து செய்திருக்கிறது.

           இலங்கைப் போரில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறை மனநிம்மதி அளிக்கிறது. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு கவலையும், வேதனையும் அளிக்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

              இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மத்திய அரசு தவறிவிட்டது. மாறாக இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை பலநூறு கோடி ரூபாய் செலவில் சீரமைத்து தர இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அத்துடன் நிற்காமல் போர்க் குற்றவாளிகள் என்று அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய இலங்கை ராணுவ அதிகாரிகளை தமிழகத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கிறது.

          இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த பயிற்சி இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களிலாவது இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை கைவிட வேண்டும்.

           ஈழத் தமிழர்களின் நலனை பாதுகாப்பதில் அமெரிக்காவை விட இந்தியாவிற்குதான் அதிக பொறுப்பு உள்ளது. இலங்கையில் போர்க் குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என ஐ.நா. வல்லுனர் குழு அறிக்கையில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா இனியும் காத்திருக்காமல் இலங்கை அரசுக்கு எதிராக பன்னாட்டு விசாரணை நடத்தவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             இந்த விசாரணை முடியும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதார தடையால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய நிதியைக் கொண்டு 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: