பா.ம.க. சார்பில் அரசியல் கட்சிகளும், தேர்தல் செலவுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கு

          http://www.dailythanthi.com/images/news/20110725/ram.jpg



         சென்னையில் பா.ம.க. சார்பில் அரசியல் கட்சிகளும், தேர்தல் செலவுகளும் என்ற தலைப்பில் 24.07.2011 அன்று கருத்தரங்கு ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடந்தது. 

இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது

             மேலோட்டமாக பார்த்தால் தேர்தலில் செலவு எதுவும் இல்லை என்று தோன்றும். ஆனால் வாக்குச்சாவடி செலவு என்பது மூன்று கட்டமாக செலவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை ஒவ்வொரு கட்சியிலும் செலவு செய்கின்றனர். பல்வேறு செலவுகளுக்கு பணம் தராவிட்டால் வேலை செய்ய முடியாது என்ற சூழ்நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

             தேர்தல் வந்துவிட்டாலே அந்த திருவிழாவில் டாஸ்மாக் கடைகளில் இருந்து, பிரியாணி கடைகள் வரை பணம் கொழிக்கிறது. தேர்தல் செலவு என்ற பெயரில் கறுப்பு பணப்புழக்கம் அதிகமாகிவிட்டது. ஒரு இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் வரையும், இன்னொரு இடைத்தேர்தலில் ரூ.10 ஆயிரம் வரையும் பணம் கொடுத்தார்கள். பென்னாகரம் இடைத்தேர்தலில் ரூ.75 கோடி வரை செலவு செய்தார்கள். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது?

             1962 ல் காஞ்சீபுரம் தேர்தலில் தோல்வி அடைந்த அண்ணா, காங்கிரசார் பணத்தினால் தன்னை தோற்கடித்தார்கள் என்றார். காங்கிரசை குறை கூறிய திராவிட இயக்கங்கள் எதிர்காலத்தில் அதனை மாற்றிக்காட்டினார்களா? என்றால் இல்லை. தேர்தலில் செலவுகள் என்பது இனி இருக்கக்கூடாது. இனி நாங்கள் கட்சியினருக்கு வாக்குச்சாவடி செலவு கொடுக்கப்போவதில்லை என்று எல்லா அரசியல் கட்சிகளும் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று அனைத்து கட்சிகளும் அறிக்கைகளாக வெளியிட வேண்டும்.

             இந்த பிரகடனத்தை உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் செய்து காட்டுவோம். இனி வருகின்ற தேர்தலில் ஆடம்பர மேடைகள் கூடாது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையமே பிரசார செலவை செய்ய வேண்டும். பின்னர் அந்த கட்சிகளிடமிருந்து அந்த செலவை திரும்ப பெறலாம். தேர்தல் செலவுகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றார்.


விழாவில் டாக்டர் ராமதாசுக்கு ஏராளமான தொண்டர்கள் பொன்னாடை அணிவிக்க வந்தனர். 

அவற்றை ஏற்க மறுத்த டாக்டர் ராமதாஸ்,

           இந்த பொன்னாடைகள் வேண்டாம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதற்கு பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்குங்கள். அதுவும் இல்லாவிட்டால் கைகொடுத்து வாழ்த்துங்கள், அதுபோதும். இந்தப் பொன்னாடைக்கு பதிலாக உங்கள் குழந்தைகளுக்கு துணிமணிகளை வாங்கித் தாருங்கள். இனி பொன்னாடை அணிவிக்க வேண்டாம், வெடி வெடிக்கவும் வேண்டாம் என்றார்.

0 கருத்துகள்: