
செங்கல்பட்டு:
காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கூடுவாஞ்சேரியில் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் என்.எஸ். ஏகாம்பரம் வரவேற்றார். மோகனசுந்தரம், அரங்க நாதன், கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-
மக்களை நம்பித்தான் பா.ம.க.வை துவங்கி உள்ளோம். சமச்சீர் கல்வியை 20 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவர நான் போராடினேன். அதை நிறைவேற்றுவதை நான் வர வேற்கிறேன். தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு மதுக்கடைகளை திறந்து இளைஞர்களை குடிமகன்களாக்கி வருகிறது. விதவைகள் அதிகரிக்க இதுவே காரணம்.
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. 75 கோடியை இறைத்து வெற்றி பெற்றது. ஆனால் நாம் 42 ஆயிரம் ஓட்டுகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தோம். அங்கு தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துவிட்டது. மறைமலைநகர் அருகே துணை நகரம் கொண்டுவர நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதையும் மீறி தமிழக அரசு இங்கு உள்ள விளை நிலங்களை வெளி நாட்டினருக்கு தாரைவார்த்தது. ஏரி மாவட்டமாக இருந்த காஞ்சீபுரம் மாவட்டம் சோறு போடும் மாவட்டமாகவும் இருந்து வந்தது. தொழிற்சாலைகள், வீட்டு மனைகள் என்ற பெயரில் காஞ்சி மாவட்டத்தையே தமிழக அரசு காடாக மாற்றிவிட்டது.
ஆடு, மாடுகள் மேய்ந்து வந்த மேய்ச்சல் நிலங்கள் காணவில்லை. விவசாயிகள் நாங்கள் வாழ்வதா சாவதா என அரசை கேள்வி கேட்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட உள்ளது. அதற்காக கட்சியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் இன்று முதல் மக்களிடம் சென்று மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து போராட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் வ.கோ.ரங்கசாமி, மாசிலாமணி, ஒன்றிய குழு தலைவர் வாசு, மறைமலைநகர் நகரமன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக