

கும்பகோணம்:
தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை நடை பெற்றது.
மாநில துணைப் பொதுச் செயலாளர் கோ.ஆலயமணி தலைமை தாங்கினார். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் கோ.ரவிச்சந்திரன், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் ரா.கனகராஜ், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.செந்தில்நாதன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ப.தியாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி ஏ.பொன்னுசாமி, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் த.அறிவுச்செல்வன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பானுமதி சத்தியமூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் மா.ராஜசேகர், மாநில விவசாய சங்க துணை செயலாளர் தி.ஜோதிராஜ், இளைஞர் சங்க செயலாளர் கே.ஆர்.வெங்கட்ராமன், மாநில மாணவர் சங்க துணை செயலாளர் சா.கி.ரவிச்சந்திரன்,மாவட்ட அமைப்பு செயலாளர் துரை.கா.ராஜேந்திரன், அமைப்பு சாரா தொழிற் சங்கதலைவர் பந்தல்கணேசன், கட்டுமான தொழிற்சங்க தலைவர் க.சரவணன், மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் எஸ்.பி.குமார், கே.பி.சி.குமார், மா.வேல்வேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஒன்றிய செயலாளர் எம்.கலியமூர்த்தி, டி.எஸ்.சாமிநாதன், ஜெட்.டி.ரமேஷ், எம்.ஏ.குமார், டி.பக்கிரிசாமி, ஏ.பி.எஸ்.கோபு, எம்.கருணாகரன், அ.சி.பன்னீர்செல்வம், குமரேசன், ஜெகதீசன், வடுவையா, ராஜசேகர், மோகன்ராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் தங்க.சின்னதுரை, அ.கருணாகரன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சங்கர், மாவட்ட பொருளாளர் ஈ.மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர்.கும்பகோணம் நகர செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகளும், திராவிட கட்சிகள் 44 ஆண்டுகளும் ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால் தமிழக மக்கள் எதிலும் முன்னேற்றம் அடையவில்லை. தமிழக மக்களுக்கு கல்வி கொடுப்பதற்கு பதில் சாராயத்தை கொடுத்தார்கள். இதனால் நாடும், நாட்டு மக்களும் கெட்டு போனார்கள். தமிழக மக்களுக்கு இலவசமாக பல்பொடி வழங்குவதில் தொடங்கி இன்று ஆட்டுகுட்டியில் வந்து நிற்கிறது. இந்த இலவசங்களை நாங்கள் எதிர்க்கிறோம். இதை எதிர்க்க ஒரு தெம்பு, துணிச்சல் வேண்டும்.
திராவிட கட்சிகளோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை, இனிமேல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி தான் ஏற்படும். நமது தலைமையில் தான் கூட்டணி அமையும். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான கட்சி தான் பா.ம.க. சாதி கட்சிதான் என்று சிலர் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். எல்லா சமுதாய மக்களுக்கும் பா.ம.க. பாடுபட்டு வருகிறது. தமிழக மக்கள் நலனில் கடந்த அரசுகளுக்கு அக்கறை இல்லை. உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க இடம் என கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர். ஆனால் கல்வி, பொருளாதாரம், ஆகியவற்றில் நாம் வளர்ச்சி பெறவில்லை.
கேரள மாநிலம் 93 சதவீத கல்வி வளர்ச்சி பெற்றுள்ளது. கல்வி கண் தந்த காமராஜருக்கு பிறகு வந்தவர்கள் எல்லாம் குடிப்பதை கற்று கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இதுதான் வளர்ச்சியா, பண்பாடா? இந்த தமிழ் சமுதாயம் எப்படி பாழ்பட்டு இருக்கிறது. ஆனால் இதைப்பற்றி யெல்லாம் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கவலைப்படவில்லை. தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றால், பக்கத்து மாநிலத்தில் உள்ளது என்கிறார்கள், குஜராத்தில் மட்டுமே எப்படி மதுவை ஒழித்தார்கள்? அந்த மாநிலத்தின் அருகில் மட்டும் இதர மாநிலங்கள் இல்லையா? ஒருமாதம் நான் சொல்வதை இந்த அரசு கேட்டால் போதும், நான் கடந்த அரசிடமும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன்.
காமராஜர் படிக்க சொன்னார். மற்றவர்கள் குடிக்க சொன்னார்கள். பிறகு தமிழகம் எப்படி முன்னேறும்? தமிழகத்தில் ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர் என மூன்று விதமானோர் உள்ளனர். தரமான கல்வி எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும், சமமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். கடந்த 2005-ல் ஆக.5,6,7 ஆகிய தேதிகளில் 3 நாள் கருத்தரங்கம் சென்னையில் நடத்தினோம். அதில் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், 22 முன்னாள் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். அதில் இன்றைய தேவைக்கு ஏற்ப கல்வி, அது சமச்சீர் கல்வி என்பதை கொண்டு வந்தோம்.
நாம்தான் முதன்முதலில் சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும் என்று குரல் கொடுத்தோம். மற்ற கட்சிகளுக்கு இந்த கொள்கை உண்டா என்றால் இல்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான காவிரி பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர்கள் இருவர்தான். 2 பேரால்தான் காவிரி பிரச்சினை தீரவில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள், ஆனால் தம¤ழர்களின் வறுமை ஒழிந்ததா, மாற்றம் வந்ததா எதுவுமே நடக்கவில்லை. திராவிட கட்சிகள் காலத்தில் தான், தமிழன் எலிக்கறி சாப்பிடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரிசியில் தான் அரசியல் நடத்துகிறார்கள்.
முன்பு ஒரு ரூபாய்க்கு மூன்று படி என்றார்கள் பின்பு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ என்றார்கள். இப்போது இலவசம் என்கிறார்கள். இவர்கள் அரசியல் நடத்தவில்லை. தமிழக மக்கள் யார் கேட்டார்கள்? இலவச பொருட்கள், அதற்கு பதில் தரமான கல்வி, விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை கொடுத்தால் அதன்மூலம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார்கள். அதனால் தான் கடந்த அரசு தோற்றது. இனி கடலில் நீர் உள்ள அளவும், வானத்தில் மேகம் உள்ள அளவும் பா.ம.க. யாரோடும் கூட்டு வைக்காது.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு நம் பலத்தை நிரூபிப்போம். தமிழகத்தில் பா.ம.க. வால் மட்டுமே கல்வி புரட்சி, தொழில்புரட்சி, விவசாய புரட்சி ஆகியவற்றை ஏற்படுத்த முடியும். சீர்கெட்டுள்ள தமிழகத்தில் சமூக புரட்சி, சமுதாய புரட்சி என மாற்றக்கூடிய வல்லமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
1 கருத்துகள்:
ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் இல்லையெனில் எதுவும் இயங்காது. இவர்கள் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் அரசு எதுவும் செய்யவில்லை இன்று விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருப்படியாக அரசு செய்யவில்லை. அதேபோல் தொழிலாளர் நல திட்டங்களான ESI , PF , Graduity போன்றவைகள் பல தொழிற்சாலையில் அமல்படுத்தவில்லை. தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சியும், வியர்வையை குடிக்கும் தொழிற்சாலைக்கு சொந்தக்காரரான பண முதலைகள், ஏகாதிபத்திய முதலாளிகள் உள்ளனர். ஒரு தொழிற்சாலையோ, கடையோ, அல்லது ஓட்டலிலோ குறைந்தது 10 பேர் வேலை செய்தால் ESI , PF , Graduity , வார விடுமுறை, தேசிய விடுமுறை கொடுக்க வேண்டும் . இது தொழிலாளர் சட்டம். ஆனால் பல தனியார் நிறுவன முதலாளிகள் இதை கொடுக்காமல் ஏப்பம் விடுகின்றனர். (குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலையில் ESI , PF , Graduity , வார விடுமுறை, தேசிய விடுமுறை இல்லை) (நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டை கிராமத்தில்
ஜெகன் ஸ்பின்னிங் மில் (பழைய பெயர் சம்பூர்ண லட்சுமி ஸ்பின்னிங் மில்)
satellite view ( http://wikimapia.org/6870927/ta/Jagan-Spinning-Mill
) கடந்த 25 வருடமாக இயங்கி வருகிறது. இங்கே பகல்,இரவு ஷிப்ட் என கிட்டதட்ட 300 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு தொழிலாளர் நலதிட்டங்களான ESI , PF இதுவரை அமல் படுத்தவில்லை. மேலும் வார விடுமுறை ,
அரசு விடுமுறை என எதுவும் தருவதில்லை. அதற்கான சம்பளமும் தருவதில்லை). அதேபோல் ஒரு நாட்டின் கண்கள் பெண்கள். இன்று பெண்கள் முன்னேற்றம் கேள்விக்குறி. ஏனென்றால் இன்று மது, போதைபொருட்கள் (கஞ்சா, பான்பராக், குட்கா) , சூதாட்டம் (லாட்டரி, கிரிக்கெட்) நாட்டை கெடுக்கிறது. விவசாயிகள் ,தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் போராடும் ஒரே கட்சி பாமகதான். மற்ற கட்சிக்கு நாதி இல்லை. பேசவும் மாட்டார்கள். அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்த்தது ஓட்டு வாங்கிவிட்டு , ஏப்பம் விடுகின்றவர்கள். எனவே விவசாயிகள் ,தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திக்கும், உரிமைக்கும் போராடும் பாமக கட்சியின் பின் விவசாயிகள் சங்கம் மற்றும் அமைப்புகள் ,தொழிலாளர் சங்கம் மற்றும் அமைப்புகள் ,மாதர் சங்கம் மற்றும் பெண்கள் அமைப்புகள் அணி திரள வேண்டும். பாமக ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம்.
கருத்துரையிடுக