பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுடன் சந்திப்பு


சென்னை:
 
       பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

               தமிழ்நாட்டில் இலவசங்களை தந்து வறுமையை ஒழிக்கப்போவதாக கூறுகிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் இலவச திட்டங்களுக்காக ரூ.70 ஆயிரம் கோடியை வீணாக செலவழித்தார்கள். அப்படியும் ஓட்டு பெற முடியவில்லை.  புதிதாக வந்துள்ள அரசும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், ஆடு, மாடு என்று ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை செலவிட உள்ளது. 27 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.   இந்த விகிதம் குறைய வில்லை. ஆனால் இலவசங்கள் அதிகரித்து வருகிறது.

             மதுவின் மூலம் வருமானம் இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி என்கிறார்க்ள. இது தான் வளர்ச்சியா? கல்வி, சுகாதாரம், விவசாயம் இவற்றுக்குத்தான் அரசு இலவசமாக தரவேண்டும். சமச்சீர் கல்வியில் முத்துக்குமரன் பரிந்துரையில் பல அம்சங்கள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. பொது பாடத்திட்டம் மட்டும்தான் நிறைவேறியுள்ளது. ஆங்கிலோ இந்தியன் ஓரியண்டல், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியங்களை கலைக்க வேண்டும். ஒரே வாரியத்தின் கீழ் கல்வித்துறை செயல்படவேண்டும். 
 
         தமிழ் நாட்டிற்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் தேவையில்லை. அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்துள்ள ஆரக்ஷன் திரைப்படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான காட்சிகளை நீக்கி விட்டு திரையிட அனுமதிக்கலாம். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் பா.ம.க. சார்பில் மதுக்கடையை மூடும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். நானே தலைமை தாங்கி மதுக்கடைகளுக்கு பூட்டு போடுவேன்.

             எங்கள் கட்சியின் கொள்கைகளை போல் வேறு எந்த கட்சிக்கும் கொள்கைகள் இல்லை. திராவிட கட்சிகளோடு சேர்ந்த காரணத்தால் பா.ம.க.வால் வளர முடியவில்லை. இனி அந்த தவறை செய்ய மாட்டேன். மன்னிப்பு கேட்கிறேன் நாங்கள் இணைந்து திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  கடந்த 44 ஆண்டுகளாக அரசியல் கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் திராவிட கட்சிகள் சீரழித்து விட்டன. இனி எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் சேர மாட்டேன். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக முதன்மை அணியாக செயல்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

             தகுதி இல்லாத எத்தனையோ பேர் வாரிசுகள் என்பதால் அரசியலுக்கு வந்தது அனைவருக்கும் தெரியும். அன்புமணி ஆனால் அன்புமணிக்கு தகுதி இருந்ததால் மத்திய மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. சிறந்த முறையில் பணியாற்றி உலக அளவில் 3 விருதுகளையும் பெற்றார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அன்புமணி போட்டியிடுவார். புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் சட்டம்- ஒழுங்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அன்னாஹசாரே இவ்வளவு நாளும் எங்கிருந்தார். இப்போதுதான் புதிதாக வந்துள்ளார். அவரது போராட்டத்துக்கு ஏதோ உள்நோக்கமும், பின்னணியும் உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

       பேட்டியின்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, பசுமை தாயகம் அருள், ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 

0 கருத்துகள்: