கள்ளக்குறிச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி:

        கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 05.08.2011 அன்று மதியம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

           கடந்த மாதம் 27ந் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்றும், இனிமேல் தனித்துநின்று போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நமது கொள்கை விரும்பி, மக்களுக்காக போராடும் கட்சி மற்றும் சங்க அமைப்புகள் நமது கூட்டணிக்கு வந்தால் தேர்தலில் போட்டியிடுவோம். இங்கு பேசிய ஒருவர் பா.ம.க. தான் சிறந்த கட்சி என்று கூறினார். இதைத்தான் 3 ஆண்டுகளாக நான் சொல்லிவருகிறேன்.

             மக்களை நம்பி தான், நான் 1989 ல் கட்சியை தொடங்கினேன். ஒரு கட்சி தொடங்குவது மற்றொரு கட்சியை ஆட்சியை அமர்த்துவதற்கு அல்ல. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நாம் ஆட்சியில் அமர்த்தி வந்தோம். இனி இதுபோன்று கூடாது. எனவேதான் தனித்துப்போட்டியிடுவது என்று முடிவு எடுத்தோம். இதை நல்லவர்கள், படித்தவர்கள், நடுநிலையார்கள், உயர்அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

               தனித்து போட்டி என்ற முடிவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் தற்போது நாம்தான் ஆட்சி நடத்துவோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11 சதவீதம் புதிய வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இவர்கள் அ.தி.மு.க.வை விரும்பி வாக்களிக்கவில்லை. தி.மு.க. வரக்கூடாது என்ற எண்ணத்தில்  3 வது அணி இல்லாத காரணத்தால் வாக்களித்தனர். அப்படி 3வது அணியாக நாம் இருந்திருந்தால் நமக்குத்தான் அந்த வாக்குகள் கிடைத்திருக்கும் என்றார்.

0 கருத்துகள்: