மயிலாடுதுறை:
ராஜீவ் காந்தி கொலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக்கு ரத்து செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில் பாமக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் க. அகோரம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் த. கலியமூர்த்தி, மாவட்ட அமைப்புச் செயலர் தங்க. அய்யாசாமி, முன்னாள் மாவட்டச் செயலர் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலர் க. அகோரம் பேசியது:
கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தலின் பேரில், தமிழக சட்டப்பேரவையில் தூக்குத் தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய, முதல்வருக்கு கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இதன் தொடர்ச்சியாக அரசியல் அமைப்பு சட்டம் 161-ம் பிரிவின் கீழ் மாநில அமைச்சரவையிலும் தூக்குத் தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மு. க. பெரியசாமி, தமிழர் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் நா.க. ரகுபதி, தமிழர் உரிமை மீட்பு இயக்க மாநில அமைப்பாளர் ரா. முரளிதரன், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலர் செ. ரூபா, மாவட்ட அமைப்புச் செயலர் காசி. பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் ரா. அமரஜோதி ராஜகிரி, மயிலாடுதுறை ஒன்றியச் செயலர்கள் வி.சி.கே. காமராஜ், சக்திவேல் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல, கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் சி. கணேசன் தலைமையில் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக