கண்ணமங்கலத்தில் பா.ம.க. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

கண்ணமங்கலம்:

           கண்ணமங்கலம் புதிய பஸ்நிலைய திடலில் பா.ம.க. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல். ஏ. எதிரொலி மணியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர்
டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:-

            தமிழகத்தில் 44 ஆண்டுகளாக ஆண்டு வரும் திராவிட கட்சிகள் தமிழக மக்களுக்கு இலவசங்களை கொடுத்து பிச்சைக்காரர் ஆக்கியதுதான் சாதனை. இன்றைக்கு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் ஏராளமானோர் குடிகாரர்களாகி வருகின்றனர். உழைக்கும் மக்கள் தாங்கள் பெறும் கூலியை டாஸ்மாக் கடைக்கு செலவிட்டே உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளது.  மக்களுக்கு இலவச கல்வி, இலவச வைத்தியம் கொடு என்று நாங்கள் பல முறை கூறியும் கண்டு கொள்ளவில்லை. டாக்டர் அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது ஜனாதிபதிக்கு கிடைக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும், ஏழை பாமரனுக்கும் கிடைக்க வழி செய்யும் படி கூறினேன். அதன்படியே அவரும் செய்து ஏராளமான விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றார்.

            இன்று தமிழ்நாட்டில் ஏராளமானோர் குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஆகியவற்றுக்கு அடிமையாவதைக் கண்டு எங்கள் மனம் பதறுகிறது. விவசாயிகள் இன்று வாழ்வதா? சாவதா? என்ற நிலைக்கு வந்துள்ளனர். விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காததால் இன்று அவலநிலை உள்ளது. எனவே திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்து, பா.ம.க. ஆட்சி மலர உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள்.

             விவசாயிகளுக்காக நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் விவசாய பட்ஜெட் போட்டு அரசிடம் சமர்ப்பித்தும் கண்டு கொள்ளவில்லை. அந்த பட்ஜெட் நிறைவேறினால், விவசாயிகள் வாழ்வு மலரும். வருகிற 2016-ம் ஆண்டு சட்டமன்ற பா.ம.க. ஆட்சிக்கு வரும். இனிமேல் நாங்கள் யாருடனும் கூட்டு சேரப் போவதில்லை. கட்சி வேட்பாளர்களை எதிர்த்து, சுயேட்சையாக நிற்கும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றி பெற மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

0 கருத்துகள்: