வந்தவாசி மற்றும் போளூரில் பா.ம.க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு


திருவண்ணாமலை: 

           வந்தவாசி மற்றும் போளூரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

வந்தவாசியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:

            கடந்த 10 ஆண்டாக கட்சிகள் தனியாக போட்டியிட வேண்டும் என்று கூறி வந்தோம், ஏனெனில் கூட்டணி என்றால் கூடி பா.ம.க.,வை காலை வாருவதுதான் வாடிக்கையாக வைத்திருந்தார்கள்.அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சென்னையில் கூடி ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்று ஒப்பந்தம் போட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் சேவை மனப்பான்மை உடைய நல்லவர்கள் வெற்றி பெறுவர்.வரும் 2016ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வருவோம். அப்போது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் அனைத்து பதவிகளுக்கும் பெண்கள் மட்டுமே வரமுடியும் என்ற சட்டம் கொண்டு வருவோம். இதன் மூலம் பெண்கள் நல்ல நிலைக்கு உயர்ந்துவிடுவர்.

           ஆண்கள், பெண்களுக்கு தலா 50 சதவீத ஒதுக்கீடு வழங்குவோம். இதன் மூலம் பா.ம.க., வித்தியாசமான கட்சிதான் என்ற உண்மையை அனைவரும் உணர்வர். தேர்தலில் வெற்றி பெறும் பா.ம.க., வினர் அலுவலக தூசியை கூட தங்கள் வீட்டுக்கு எடுத்து வரக்கூடாது அந்த அளவுக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.

போளூரில் ராமதாஸ் பேசியது:

          உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தாருங்கள். திராவிட கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. ஆனால், பா.ம.க, மற்ற கட்சிகளை காட்டிலும் உயரிய கொள்கை உடையது.இது வரை திராவிட கட்சிகளை மாறி மாறி பா.ம.க., ஆதரித்து வந்தது. இனி எந்த திராவிட கட்சியையும் ஆதரிக்காது. எதிர்காலத்தில் பா.ம.க., ஆளுங்கட்சி அந்தஸ்து பெறும். ஓட்டுக்களை பணம் கொடுத்து வாங்கும் கலாச்சாரம் பெருகிவிட்டது. அதுபோன்ற வேலைகளை பா.ம.க., ஒரு போதும் செய்யாது.இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்: