மயிலாடுதுறையில் பா.ம.க வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம்

மயிலாடுதுறை:

          அதிமுகவிற்கு ஆதரவாக மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.   

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அளித்த பேட்டி:    

            ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரின் தண்டனைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களை காப்பாற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவருக்கு வெளிப்படையாகக் கடிதம் எழுத வேண்டும்.   சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்த ரூ. 200 கோடி மதிப்பிலான நிலம் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டதாகவும், அந்த இடம் தற்போது தாரை வார்க்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கும் புகார் குறித்து முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.  

            தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. மும்முனை மின்சாரம் குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யப்படுகிறது.   நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும் புகார்கள் வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டம் தயார் செய்யப்பட்டும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்தும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   

          மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கும், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும் தமிழக அரசை பாமக வலியுறுத்துகிறது.   உள்ளாட்சித் தேர்தலில் பாமக போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். எந்தக் காரணத்தைக் கொண்டும் திராவிடக் கட்சிகளுக்கு பாமகவின் ஆதரவு கிடையாது.   

           கடந்த திமுக ஆட்சியில் 40 பேரும், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 5 மாதங்களில் 8 பேரும் போலீஸ் காவலில் கொல்லப்பட்டுள்ளனர்.    தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்றார் ராமதாஸ்.   கட்சியின் மாநிலத் தலைவர் ஜி. கே. மணி, மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ. ஐயப்பன், முன்னாள் துணைப் பொதுச் செயலர் மு.க. பெரியசாமி,  மாநில துணைச் செயலர் க. அகோரம், மாநில செயற்குழு உறுப்பினர் த. கலியமூர்த்தி, ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அமைப்பு செயலர் தங்க. அய்யாசாமிஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்: