உள்ளாட்சி தேர்தலில் ஈரோட்டில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/3b085abc-f5be-4781-8db4-d4ea4c372429_S_secvpf.gif
 
ஈரோடு:

          பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

அப்போது பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
கூறியது:-

           இந்த உள்ளாட்சி தேர்தல் ஊழல் கட்சிகளுக்கும், நல்ல, நேர்மையான, வித்தியாசமான கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியாகும். தமிழ்நாட்டை கடந்த 44 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து சின்னாபின்னமாக்கி சீரழித்து விட்டன. இந்த திராவிட கட்சிகளின் அத்தியாயத்தை முடிக்கவே பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது.  இந்த முடிவை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் 50 முதல் 60 வரை சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.   இனிமேல் எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடன் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது. 
 
          இந்த கட்சிகளை வேரறுத்து, ஒழித்து தமிழகத்தில் இந்த கட்சிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே பா.ம.க.வின் வருங்கால செயல்பாடுகளாக அமையும். திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு கொள்கையும் கிடையாது.  இவர்களின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பதுதான். இளைஞர்களுக்கு மதுவை கொடுத்து 4 தலைமுறைகளாக இந்த நாட்டை சீரழித்து விட்டார்கள். இலவசங்களை கொடுத்து மக்களின் சுயமரியாதையை இழக்க செய்து விட்டார்கள்.   மிக்சி, கிரைண்டர் வழங்கு வதால் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு விடாது. வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் தரமான கல்வியும், தரமான இலவச மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

             44 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகளால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை. முதலில் மக்களின் வறுமையை ஒழிப்போம் என்று கூறியவர்கள் தற்போது வறுமைக்கு என்ற அளவுகோல் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.   திராவிட கட்சிகளும், அவர்களின் குடும்பத்தினரும் நடத்தும் தொலைக்காட்சிகளில் தமிழ் கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறது. தமிழகத்தை சீரழித்த இவர்கள் மீது நீதிமன்றம் தண்டனை கொடுப்பது உடனே முடியாது. மக்கள் மன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.  திராவிட கட்சிகளை இந்த மண்ணில் இருந்து வேரறுக்கும் பொறுப்பை தமிழக மக்கள் எங்களிடம் ஒப்படைத்து உள்ளனர். எனவே பா.ம.க.வுக்கு நீங்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ.சோதனை செய்யும் நடவடிக்கை என்பது காலதாமதமான நடவடிக்கை. சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம் வடிவேல், வன்னியர் சங்க செயலாளர் ஸ்டீல்ரவி, மாநில துணை தலைவர் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: