
இட ஒதுக்கீடு பிரச்னைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சமுதாய ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்கள் குறித்து அறிந்து கொள்ளவும், பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து திட்டமிடவும் அவர்கள் குறித்த கணக்கெடுப்பு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இப்போது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிரான வழக்கிலும் இந்தக் கருத்தை அறிவுறுத்தல் என்ற வகையில் இல்லாமல், மாநில அரசின் கட்டாய கடமையாக உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்ற தீர்பு இருந்தாலும் இடஒதுக்கீடு சலுகையைப்பெறும் மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் இட ஒதுக்கீட்டின் அளவையும் 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்திக் கொள்ளலாம் என்பதற்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு சலுகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளனரா? என்பதை உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மாநில அரசு அளிக்க வேண்டும். இது இட ஒதுக்கீட்டு பிரச்னையில் புதிய திருப்பம். இந்த வாய்ப்பை தமிழக அரசு நழுவ விட்டு விடக்கூடாது. இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் தாய்வீடு என்று தமிழகம் அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்கே அதிகபட்சமாக 69 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் 73 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
இதற்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு அவகாசம் அளித்திருக்கிறது. ஆனால் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஓராண்டு அவகாசம் தேவையில்லை. வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களைக் கொண்டு இந்தப் பணியை குறைந்த செலவில் ஒரு மாதத்தில் முடித்து விடலாம். தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து அதற்கேற்ப பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்துக் கொள்ள உதவும். எந்த அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை மத்திய அரசு முடிவு செய்கிறது என்ற கேள்விகளுக்கும், அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக