திருநள்ளாற்றில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்யாத பொதுப் பணித் துறை நிர்வாகத்தைக் கண்டித்து, அதன் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க. தேவமணி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் வியாழக்கிழமை பொதுப் பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் ஆர். சந்திரசேகரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் காரைக்கால் மாவட்ட பாமக செயலர் தேவமணி கூறியது:
திருநள்ளாறு அருகில் உள்ள அகலங்கண்ணு கிராமத்தில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திருநள்ளாற்றிலேயே ரூ. 3 கோடியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. இதனால் மக்களும் எந்த பயனும் இல்லை. தனியார் ரசாயன ஆலைக்கு அருகில் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து உவர் நீர் உறிஞ்சப்பட்டு, இந்தத் தொட்டியில் தேக்கி, திருநள்ளாறு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதனால் உள்ளூர் மக்களும், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களும் தொகை கொடுத்து கடைகளில் குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு பொதுப் பணித் துறை அதிகாரியை வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை இல்லையெனில், ஆக. 1ஆம் தேதி காரைக்கால் பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக