முற்றுகையிடும் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முற்றுகையிடும் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டுவராவிட்டால் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

சேலம்:

             சேலத்தில் திறப்பு விழா செய்யப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஓராண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்தார். 

சேலத்தில்  வியாழக்கிழமை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:

               பாமகவை சேர்ந்த வேலு மத்திய இணையமைச்சராக இருந்தபோது சேலத்துக்கு ரயில்வே கோட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கோட்டம் வந்த பிறகு எந்தப் பணிகளுமே நடைபெறவில்லை. இத்தனைக்கும் இந்த கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாநில அமைச்சர்கள் 7 பேர் உள்ளனர். 

            இதுவரை ரயில்வே கோட்டத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அலுவலகம், குடியிருப்புகள் கட்டப்படவில்லை. இதேபோல் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது சேலத்துக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது. அண்மையில் நடைபெற்ற விழாவில் மாநில அமைச்சரே இதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்த மருத்துவமனை முழு அளவில் செயல்பட ஓராண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. 

                  ஓர் ஆண்டுக்குள் இந்த மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்றால் இதைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபடுவோம். கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் வகையில் பாமகவில் இளைஞர்களை சேர்த்து, அரசியல் பயிற்சி கொடுத்து வருகிறோம். எங்கள் கட்சியில் பொறுப்புகளில் உள்ள யாரும் மது, போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவராக இருந்தால் அவர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும். சேலம் அருகே ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்று உண்மைகள் வெளியே வர வேண்டுமானால் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.


திருநள்ளாற்றில் குடிநீர்த் தட்டுப்பாடு: போராட்டம் நடத்த பாமக முடிவு

             திருநள்ளாற்றில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்யாத பொதுப் பணித் துறை நிர்வாகத்தைக் கண்டித்து, அதன் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.    

              காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க. தேவமணி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் வியாழக்கிழமை பொதுப் பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் ஆர். சந்திரசேகரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.    

பின்னர் காரைக்கால் மாவட்ட பாமக செயலர் தேவமணி கூறியது:    

            திருநள்ளாறு அருகில் உள்ள அகலங்கண்ணு கிராமத்தில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.     ஆனால், தற்போது திருநள்ளாற்றிலேயே ரூ. 3 கோடியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. இதனால் மக்களும் எந்த பயனும் இல்லை.      தனியார் ரசாயன ஆலைக்கு அருகில் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து உவர் நீர் உறிஞ்சப்பட்டு, இந்தத் தொட்டியில் தேக்கி, திருநள்ளாறு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 

                இதனால் உள்ளூர் மக்களும், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களும் தொகை கொடுத்து கடைகளில் குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு பொதுப் பணித் துறை  அதிகாரியை வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை இல்லையெனில், ஆக. 1ஆம் தேதி காரைக்கால் பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.