பா.ம.க. தொடர் முழக்கப் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை:
 
              ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. சார்பில் செப்டம்பர் 18-ம் தேதி நடத்தவிருந்த தொடர் முழுக்கப் போராட்டம் செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
 
                 சமூக நீதிக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த தடையாக உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இக் கோரிக்கையை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்கவும், அதன் அடிப்படையில் தேவைப்பட்டால் இட ஒதுக்கீட்டின் அளவை புதிதாக முடிவு செய்து, சட்டம் இயற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
                  இட ஒதுக்கீட்டு சலுகை பெறும் தகுதியுடையவர்கள் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் அதிகாரம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில் இப்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். நமது மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி, இடஒதுக்கீட்டின் அளவை 69 சதவீதத்துக்கும் அதிகமாக முடிவு செய்து சட்டம் இயற்ற அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை தமிழக அரசு தவறவிடக் கூடாது. 
 
                  எனவே, தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி பா.ம.க. சார்பில் செப்டம்பர் 18-ல் மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் இப் போராட்டம் இம்மாதம் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: