இரண்டரை கோடி வன்னியர் இருந்தும் என் பேச்சை கேக்கலையே! - ராமதாஸ்

விழுப்புரம்: 

            தமிழகத்தில் வன்னியர்கள் இரண்டரை கோடி பேர் இருந்தும் என் பேச்சை யாரும் கேட்காததால் பா.ம.க. ஆட்சிக்கு வர முடியவில்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

                 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கெடார் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 



கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், 


                    "விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒண்ணேகால் லட்சம் பேர் வன்னிய சமூத்தினர். இதில் 60 ஆயிரம் பேர் நம்முடைய வேட்பாளருக்கு வாக்களித்தாலே போதும். நாம்தான் ஜெயிப்போம். மாவட்டம் முழுவதிலும் உள்ள 11 தொகுதிகளிலும் வன்னியர்கள் மாம்பழத்திற்கு ஓட்டுப் போட்டார்களேயானால் 11 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.

படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம்!

                       அதேபோல் தமிழகம் முழுவதும் வன்னியர்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் 100 தொகுதியில் கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆட்சி அமைக்க 17 தொகுதிதான் தேவை. அப்போது யாராவது தானாகவே முன்வந்து ஆதரவு கொடுப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம்.

என் பேச்சை கேட்கவில்லையே...

                         உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இனத்தின் மாயாவதி 5-வது முறையாக முதல்வராக பணியாற்றி வருகின்றார். அங்கு 20 முதல் 27 சதவீதம்தான் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். இங்கு நாம் 2 1/2 கோடி பேர் வன்னியர்கள் இருந்தும் நாம் ஆட்சி செய்ய முடியவில்லை. காரணம் எனது பேச்சை யாரும் கேட்பதில்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் முன்னேறுவதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளோம்.

                    நீங்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் நான் ஏன் ஜெயலலிதாவின் தோட்டத்திற்கும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கும் செல்கின்றேன். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கான சட்ட திருத்தத்தில் முதல் கையெழுத்தையிடுவோம். ஒரு தடவை பா.ம.க.விற்கு வாய்ப்பு கொடுத்தால் பின்னர் ஆட்சியை பார்த்து தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை இருக்க செய்வீர்கள். பா.ம.க. ஆட்சி வருவது இளைஞர்கள், இளம்பெண்களான உங்கள் கையில்தான் உள்ளது..." என்றார்.

0 கருத்துகள்: