127 தொகுதிகளில் வென்றால் ஆட்சி: டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம்:
 
               வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்து வாக்களித்தால் 127 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பாமக விக்கிரவாண்டி தொகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் கெடாரில் சனிக்கிழமை நடைபெற்றது.
 
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது: 
 
                  வன்னியர் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களித்தால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தனித்தே ஜெயிக்கலாம். தமிழகத்தில் 100 தொகுதிகளில் ஜெயிக்கலாம். ஆட்சியை பிடிக்க கூடுதலாக 17 பேர் தேவை.இந்நிலையில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்து வாக்களித்தால் 127 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கலாம்.
 
                 உத்தரப்பிரதேசத்தில் 20 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்து வாக்களித்து 5-வது முறையாக மாயாவதி முதல்வராக உள்ளார். அந்த மக்கள் அப்படியே ஓட்டு போட்டார்கள். ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி கொடுத்தாலும் அவர்கள் மாற்றிப் போடமாட்டார்கள்.அதுபோல நீங்களும் வாக்களித்தால்தான் ஆட்சியை பிடிக்க முடியும். நீங்கள்தான் என்னை போயஸ் தோட்டத்துக்கும், கோபாலபுரத்துக்கும் அனுப்புகிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் இந்த நிலை ஏன் எனக்கு ஏற்படப்போகிறது?
 
                  பாமக ஆட்சிக்கு வந்தால் 3 வேளை உணவு, உடைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். வீடு இல்லையென்று பட்டா கேட்டு மனு தரும் நிலை இருக்காது. கழிப்பறை இல்லாத வீடுகள் இருக்காது. அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும், குடும்பம் தவறாமல் அரசு வேலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். சாராயம் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம், ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம். அப்போது அனைத்து மக்களுமே நம்மை ஆதரிப்பார்கள் என்றார்.
 
                   கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் கோ.க. மணி ஆகியோர் பேசினர். எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் சு.நடராஜன், காணை ஒன்றியச் செயலர் சு.துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்: