தருமபுரி:
மது அருந்தும் பழக்கத்தை தொழிலாளர்கள் கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக பாட்டாளி கட்டட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ச.ராமதாஸ் பேசியது:
பாட்டாளிகள், தொழிலாளர்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி பாமக. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்ததும் பாமகதான். எவ்வளவு கூலி வாங்கினாலும் தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. இதற்கு முக்கிய காரணம் மதுப்பழக்கம்.
ஒரு கட்டட மேஸ்திரி தினமும் ரூ.400 ஊதியம் பெறுகிறார் என்றால் அதில் ரூ.300-க்கும் மேல் மதுவுக்காக செலவு செய்கிறார். இந்த பழக்கத்தில் இருந்து தொழிலாளிகள் விடுபட்டால்தான் வாழ்வில் முன்னேற முடியும். தன்னுடைய பிள்ளைகள் முன்னேற பெற்றோர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளில் இருந்து அதிக வருவாய் ஏற்படுத்ததான் முயற்சி எடுக்கிறது. அந்த பணத்தில் இருந்து தான் கலர் டிவி, ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் போன்றவற்றை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது.
புயல் காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல, மழை காலங்களில் கட்டடத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
இதில், பாமக தலைவர் ஜி.கே.மணி, சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.சம்பத், பொதுச்செயலர் பி.ரவி, பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை மாநில பொதுச்செயலர் அ.ஞானசேகரன், முன்னாள் எம்.பி. ரா.செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்:
கட்டுமானப் பொருள்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கேரளம், கர்நாடக மாநிலங்கள் போல கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கடன் வழங்க வேண்டும். மாநில பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென தனி நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக