பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை சந்தித்து மனு அளித்தார்

சென்னை:
         
           வாக்கு எண்ணிக்கையின்போது புதிய முறையைக் கையாளாமல் வாக்குச் சாவடி வாரியாக எண்ண வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.  
 
                பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர். வேலு, வழக்கறிஞர் பாலு ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.  
 
இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியது: 
 
            வாக்கு எண்ணிக்கையில் புதிய முறையை கையாளப்போவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை சந்தித்து வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பாமக சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.  ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு முடிந்ததும் 17-சி என்ற படிவம் வேட்பாளர்களின் முகவர்களுக்குத் தரப்படும். அதில் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் போன்ற விவரங்கள் தேர்தல் அலுவலர், முகவர்களின் கையெழுத்துடன் இருக்கும். அதில் ஒரு படிவம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும். 
 
            அந்தப் படிவத்துடன், வேட்பாளர்களின் முகவர்களிடம் இருக்கும் படிவத்தை ஒப்பிட்டு சரிபார்த்த பிறகே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவார்கள். அப்போதுதான் தவறுகளை தடுக்க முடியும்.  எனவே, புதிய முறையைப் பின்பற்றாமல் வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்.  ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும். அதில் வேட்பாளர்களின் முகவர்கள் சந்தேகம் எழுப்பினால் அதற்குத் தீர்வு கண்ட பிறகே அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.  வேட்பாளர்களின் தலைமை முகவர் முன்னிலையில்தான் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும். 
 
              இது தொடர்பாக 234 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்தார் என்றார் ஜி.கே. மணி.

0 கருத்துகள்: