சென்னை:
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை தனியாகப் பிரித்து தமிழ் ஈழம் அமைப்பதற்கான பணியை ஐக்கிய நாடுகள் சபை தொடங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் இறுதி கட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா. குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் மக்களை இடம்பெயரச் செய்து குண்டு வீசிக் கொன்றது, மருத்துவமனை மீது குண்டு வீசியது, உணவு கிடைக்காமல் தடுத்தது, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது என இலங்கை படையினர் செய்த அனைத்து போர்க் குற்றங்களையும் ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கை படைகளின் இந்தப் போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரிக்க வேண்டும். இல ங்கை பிரச்னைக்கு காரணமான அம்சங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. விசாரணைக் குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால், இலங்கை அரசும், ஐ.நா. சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளும் ஒப்புக் கொண்டால் மட்டுமே இலங்கை அரசு மீது விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்காகத்தான் ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது உறுதியாக தெரிந்த பிறகும் அதுகுறித்து விசாரணை நடத்த தயங்குவது, ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும். சூடான், தர்பர், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் இனப் படுகொலைகள் நடத்தியதற்காக அந்நாடுகளின் தலைவர்கள் பன்னாட்டு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டனர். அதுபோலவே, தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் இனச் சிக்கலுக்கு காரணமான பிரச்னைகளைத் தீர்க்க இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இலங்கை அரசின் செயல்பாடுகள் எதுவுமே நம்பத்தகுந்ததாக இல்லை என்று ஐ.நா. குழு கூறியுள்ளது. எனவே, இனியும் இலங்கை அரசுக்காக காத்திருக்கக் கூடாது. இலங்கை இனச் சிக்கலுக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழம் அமைத்து தருவதுதான். இதனை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. சபையும், உலக நாடுகளும் தொடங்க வேண்டும். கிழக்கு பாகிஸ்தானில் வசித்த மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்து கொள்ள முடியாத இந்திய பிரதமர் இந்திராகாந்தி, வங்கதேசம் என்ற தனிநாட்டை ஏற்படுத்தித் தந்தார்.
அதேபோல், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து, தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான முன்முயற்சிகளை இந்தியா எடுக்க வேண்டும். ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்னையிலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் முயற்சிகளை இந்தியா எடுத்தால், அதனால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும். தமிழர்கள் நலனிலும், இலங்கையைத் தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வர்த்தக உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக