ஈரோட்டில் பா.ம.க. நகர செயலாளர் குத்திக்கொலை: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை

 
ஈரோடு:


         ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). சூரம்பட்டி நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்து வந்தார். இவர் தனது வீடு அருகே 2 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சத்யா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

             இவர்களில் சத்யா திண்டிவனத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சந்தோஷ் பிளஸ் 2 படித்து முடித்துள்ளார்.   நேற்று மாலை செல்வம் தனது ஒர்க்ஷாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று 2 மோட்டார் சைக்கிளில் சுமார் 4 பேர் அவரது ஒர்க்ஷாப்பிற்குள் வந்தனர். அவர்களை பார்த்ததும் சந்தேகம் அடைந்த செல்வம் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ஆனால் எதுவும் பேசாமல் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வத்தை கத்தியால் குத்தினர்.

              இதில் செல்வத்தின் நெஞ்சு அருகே கத்தி கத்து விழுந்தது. இதை அவர் தடுக்க முயன்ற போது அவரது கையிலும் கத்தி குத்து விழுந்தது””. இதனால் ரத்த வெள்ளத்தில் செல்வம் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து 2 சக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். சற்று நேரத்தில் செல்வத்தின் மகன் சந்தோஷ். அங்கு வந்தார். தனது தந்தை கத்தி குத்து காயங்ளுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

               அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மயங்கி கிடந்த செல்வத்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் செல்வம் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்துக்கு சூரம்பட்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். செல்வத்திடம் உள்ள செல்போனில் உள்ள போன் எண்களை வைத்து கடைசியாக அவரிடம் பேசியது யார்? அவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

               கொலையாளிகள் 4 அல்லது 5 பேர் இருக்கலாம் என்றும், அவர்களுக்கு 20 வயது முதல் 23 வயதுக்குள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. செல்வம் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.  

                செல்வத்தை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சிலரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள். சூரம்பட்டி நகர பா.ம.க. செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



0 கருத்துகள்: