சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வன்னியர் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் கே. விஜயன், வி. தாமோதரன், ஜானகிராமன், சேலம் மாரியப்பன், நடராஜன் ஆகியோரைக் கொண்ட காங்கிரஸ் வன்னியர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ., உ. பலராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி., பி.ஆர்.எஸ். வெங்கடேசன், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம. சுகந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களை மாநிலத் தலைவர் தங்கபாலு புறக்கணித்து வந்தார். அதனால் தான் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தங்கபாலு, தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் ஆகியோர் தான் தேர்தல் தோல்விக்கு காரணம். எனவே, அவர்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கபாலு ராஜிநாமா செய்துள்ளதால் புதிய மாநிலத் தலைவராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக