மனிதன் அழிவிற்கு மதுவே காரணம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

      பாமக நிர்வாக குழுக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

           தமிழ்நாட்டில் மதுக்குடிப்பதே குற்றம் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு குடிப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இந்து, இசுலாம், கிறித்தவம், சமணம், புத்தம் போன்ற மதங்களும் அண்ணல் காந்தியடிகள், மூதறிஞர் இராஜாஜி, தந்தை பெரியார், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்ற வழிகாட்டி தலைவர்களும் வள்ளலார், திருவள்ளுவர் போன்றோரும் மதுவின் தீமையை தடுத்து மக்களை பாதுகாக்கும்படி வலியுறுத்தினார்கள்.

              ஆனால், இன்றோ எல்லா பகுதிகளிலும் (டாஸ்மாக்) திறக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என அனைவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் கொடுமை அதிகரித்து வருகிறது. திருமணம், பிறந்த நாள், சமயவிழாக்கள், கோயில் திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள், பள்ளி கல்லூரி விழாக்கள் என 10 பேர் கூடும் எந்த நிகழ்வாக இருந்தாலும், அதில் விருந்து என்ற பெயரில் குடிக்காதவர்களைக் கூட மது குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கும் கொடுமையும் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் சீரழிவும் மேலோங்கி வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிக்காத இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

                குடிப்பழத்தால் உடல்நலன் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே குடிகார கணவர்கள் இறப்பதால் இளம்பெண்கள் விதவையாவது தமிழகத்திலும் புதுவையிலும்தான் அதிகம். குடிக்கு அடிமையான கணவர்களின் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்வதும், குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் நடக்கும் கணவன், மனைவி சண்டையால் சூழல் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் கல்வி அடியோடு பாதிக்கப்படுவதும், குடிப்பழக்கத்தால் வேலையிழந்து சொத்துக்களை விற்று வறுமையில் வாடும் கொடுமையும், குடித்துவிட்டு வண்டி < ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகள் மற்றும் உறுப்பு இழப்புகள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுவதும் தமிழகத்தில்தான் அதிகம். கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற குற்றங்களுக்கும், அடிதடி, சண்டை சச்சரவு, வன்முறை, சட்டம் ஒழுங்கு போன்றவற்றுக்கும் குடிப்பழக்கம்தான் அடிப்படை காரணமாகும்.

              ஆகவே எல்லா குற்றங்களுக்கும் தாய் மது குடிப்பழக்கமே. இவ்வாறு மனித சமுதாயத்தை சீரழித்து வரும் குடிப்பழகத்திலிருந்து மக்களை விடுவித்து அவர்களின் நலனை காக்க பூரண மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிர்வாகக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  


0 கருத்துகள்: