ஏமன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த செவிலியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
ஏமன் நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில், அங்கு பணியாற்றுவதற்காக சென்றுள்ள தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களையும், கேரளத்தையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் சிக்கித்தவிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏமன் கலவரத்தில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் தமிழகத்தைச்சேர்ந்த செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருவதால் அவர்களை குறிவைத்து கலவரக்காரர்கள் குண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 5 நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்கள் பூட்டப்பட்ட அறைக்குள் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
மின்சாரமும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் அவர்களால் செல்பேசி மூலம் தங்களின் உறவினர்களை கூட தொடர்புகொள்ள முடியவில்லை. தமிழக செவிலியர்களை காப்பாற்ற ஏமன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏமனில் தவித்துவரும் தமிழகத்தை சேர்ந்த செவிலியர்களை காப்பாற்ற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். எகிப்து நாட்டில் புரட்சி வெடித்தபோது அங்கு தவித்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டனர். லிபியாவில் நடைபெற்ற புரட்சியின்போதும் 16 ஆயிரம் இந்தியர்கள் வானூர்திகள் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் மீட்டு தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதேபோல் ஏமனில் தவிக்கும் தமிழகத்தைச்சேர்ந்த செவிலியர்கள் அனைவரையும் மீட்டு தாயகத்திற்கு அழைத்துவர மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக