சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

           கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

               இட ஒதுக்கீட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. தமிழகத்தில் 69 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாகக் குறைக்க சில சக்திகள் முயன்றபோது அதனைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று பா.ம.க. போராடியது.தமிழகத்தில் ஓராண்டுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு நீடிக்கும். அதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அளவை இறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. 

             இந்தக் கெடு வரும் ஜூலை 12-ம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடந்த அக்டோபர் 13-ம் தேதி 27 சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்தோம். மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இருப்பதால், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

              ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலம் நடத்தப்படாமல் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை கண்டறிவதுதான் எனவும், ஜாதி விவரங்களை தெரிவிப்பது கட்டாயமில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்தக் கணக்கெடுப்பால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.இந்தச் சூழலில் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டையும், மக்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

           கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ரூ. 10 கோடி வரைதான் செலவாகும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

0 கருத்துகள்: