பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் படி சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பரிந்துரை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்றபோதிலும், இதிலுள்ள உறுப்பினர்களை தேர்வு செய்தது தமிழக அரசுதான். எனவே, தமிழக அரசு நினைத்ததை இக்குழு செய்து முடித்திருக்கிறது. இந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரான தனியார் பள்ளிகளின் முதலாளிகளை உறுப்பினர்களாக நியமித்தபோதே, சமச்சீர் கல்வி முறைக்கு இக்குழு சமாதி கட்டிவிடும் என்று அச்சம் தெரிவித்திருந்தேன். அதன்படியே இப்போது நடந்திருக்கிறது.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவோ, உச்சநீதிமன்றம் சொன்ன பணிகளை செய்யாமல், சொல்லாத விசயங்களை செய்துவிட்டு சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும், அறிக்கைகளையும் ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக வல்லுநர் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
ஆனால், அக்குழு ஆராய்ந்ததாக கூறப்படும் அறிக்கைகளின் பட்டியலில், சமச்சீர் கல்வி தொடர்பான முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தாக்கல் செய்த அறிக்கை இடம்பெறவில்லை. சமச்சீர் கல்வி முறைக்கு அடிப்படையான முத்துக்குமரன் குழுவின் அறிக்கையையே படிக்காமல் வல்லுநர் குழு எப்படி இந்த முடிவுக்கு வந்தது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
வல்லுநர் குழு அறிக்கையை படிக்கும்போது ஒரு விசயம் தெளிவாக புரிகிறது. சமச்சீர் கல்வி வரக்கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியை வல்லுநர் குழு தலையால் செய்து முடித்திருக்கிறது. வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே இருப்பதால், அவற்றை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக