சமச்சீர் பாட புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை 
 
         தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்ட பாடநூல்களை உடனடியாக வழங்க வேண்டிய தமிழக அரசு, அதை செய்யாதது மட்டுமின்றி, பள்ளிக் கல்வித் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்த பாடநூல்களையும் அகற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  

            கடந்த ஒன்றரை மாதங்களாக பள்ளிக்குச் சென்றும் பாடம் படிக்க முடியாத மாணவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது இணையதளத்தில் உள்ள பாடங்களை படிக்கலாம் என்ற எண்ணத்துடன் இணையதளத்தை பார்த்த போது, அவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றம்தான். சமச்சீர் கல்வி திட்டப்படியான பாட நூல்கள் கடந்த மே மாதத்திற்கு முன்பாகவே அச்சிடப்பட்டு விட்டன. தற்போது அந்தப் புத்தகங்கள் அனைத்தும் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரசு நினைத்தால் அப்பாட நூல்களை ஒரு சில மணி நேரங்களில் மாணவர்களுக்கு வழங்கிட முடியும்.

           சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான விசயத்தில் கவுரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தமிழக அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து சென்னை உயர்நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே மாணவர்களின் பொறுமையை சோதிக்காமல் பாடப் புத்தகங்களை உடனடியாக வழங்கி சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். மது ஒழிப்பு, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, வேளாண்மை புரட்சி, அனைத்து பள்ளிக்கூடமும் அரசுடமை ஆக்குவது, அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது, பெண்கள் முன்னேற்றம், வரதட்சணை ஒழிப்பு & சமஉரிமை, போதை பொருள் ஒழிப்பு, லாட்டரி & கிரிக்கெட் சூதாட்ட ஒழிப்பு, வன்முறை& தீவிரவாதம் ஒழிப்பு, கட்டாய கல்வி. இவற்றை பாமக மட்டுமே நிறைவேற்ற முடியும். வேறு எந்த கட்சியாலும் நிறைவேற்ற முடியாது. ஏன் அவர்களால் பேசக்கூட முடியாது. அவர்கள் வெறும் கவர்ச்சி திட்டங்கள் தான் செய்ய முடியும். முன்னோடி & வளர்ச்சி திட்டங்கள் இருக்காது. தற்போது ஒரு அரசு இருக்கிறதா என்று மக்கள் குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள் எண்ண தோன்றுகிறது. எனவே ஒரு 6 மாதம் பாமகவிடம் ஆட்சியை ஒப்படைப்பது நல்லது. அப்போது தான் மக்கள் நல சரித்திர ஆட்சி அமையும். பாமகவின் ஆற்றல் உலகிற்கு தெரியும்.