தரமான இலவசக் கல்வி: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

கிருஷ்ணகிரி:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டி: 

              இப்போது நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் சமச்சீர் கல்வி திட்டம் என்பது முழுமையான சமச்சீர் கல்வி திட்டமல்ல. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது பொது பாடத்திட்டம்தான். இது சமச்சீர் கல்வி திட்டத்திற்கான ஒரு தொடக்கம். அடுத்த ஆண்டிலிருந்து முழுமையாக சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வரவேண்டும்.   பொது பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், மெட்ரிக் கல்வி வாரியமும், ஆங்கிலோ இந்தியன் கல்வியும் தொடர்கிறது.

              இந்த கல்வி வாரியத்தை கலைக்கவேண்டும். பேராசிரியர் முத்துக்குமரன் குழு அளித்த பரிந்துரையில் சமச்சீர் கல்வி என்றால் பாடம் கற்பித்தல், மதிப்பிடுதல், தேர்வு முறை, பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை அனைத்தும் ஒரேசீராக, தரமாக அமைய வேண்டும் என்பதாகும். சமச்சீர் கல்வி குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தரமான கல்வி வேண்டும் என்று கூறியுள்ளது. இலவசமான கட்டாய மற்றும் தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.  

                 காமராஜர் ஆட்சி காலத்தில் 18 மெட்ரிக் பள்ளிகள் இயங்கிவந்தது. ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு 11 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. ஸ்டேட்போர்டு பள்ளிகள் 45 ஆயிரம் உள்ளன. இவற்றில் 1/4 பங்கு மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் உள்ளது. அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தின்படி பார்த்தால் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இருக்கக்கூடாது. அரசு இலவசங்கள் கொடுப்பதை நிறுத்தி கல்வியை இலவசமாகவும் தரமாகவும் தரவேண்டும்.

                  சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க அரசு அனுமதிக்கக்கூடாது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் எந்த திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம். மக்களுக்கான அரசியல் என்ற செயல் திட்டத்தை நாங்கள் இன்னும் ஒருமாதத்தில் சென்னையில் வெளியிடுவோம்.  

           இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்த ஆதர்ஷன் என்ற படத்தில் இடஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தும் விதமாக சில காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் நாளை (இன்று) தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிடவேண்டும். அல்லது அந்த படத்திற்கு தமிழகத்தில் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

0 கருத்துகள்: