பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் சட்டப்பேரவையின் அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்திற்கு ராமதாஸ் கண்டனம்

            தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பது, தமிழர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் இழிவுபடுத்தும் செயலாகும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

 இது குறித்து புதன்கிழமை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை

                 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலில் வலியுறுத்தியது. தமிழர்களின் இந்த உணர்வுகளை மதித்து மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

                 இந்தத் தீர்மானத்தை மனித உரிமை ஆர்வலர்களும், மனிதநேயம் மிக்கவர்களும் பாராட்டி வரவேற்றுள்ளனர். ஆனால், இந்தத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இது தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் இழிவுபடுத்தும் செயலாகும்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட எத்தனையோ தீர்மானங்களும், சட்ட முன்வடிவுகளும் மக்களின் உரிமைகளைக் காப்பதில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் நிலையில், இத்தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய அமைச்சர் கூறியிருப்பது சட்டப் பேரவையை அவமதிக்கும் செயலாகும். 

                 அவரின் இந்தக் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது.தமிழக மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை கைவிட்டு, சட்டப்பேரவை தீர்மானத்தை மதித்து மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசும் பரிந்துரை செய்ய வேண்டும். இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அளிக்க வேண்டும். மூவரின் தண்டனையை குறைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி புதிய ஆளுநரிடம் முதல்வர் நேரில் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் புதிய ஆளுநர் ரோசய்யா பிறப்பிக்கும் முதல் உத்தரவே, மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதாகத்தான் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்: