சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் திட்டமிட்டபடியே முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்தே சென்னை மாநகரத்திற்குட்பட்ட எல்லா வாக்குச் சாவடிகளிலும் குண்டர்களின் உதவியுடன் அ.தி.மு.க.வினர் கள்ளவாக்கு போட்டு வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் கந்தன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தியுள்ளார். இதேபோல் சென்னை மாநகரின் எல்லா பகுதிகளிலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ளவாக்குகளை செலுத்திவருகின்றனர். சைதாப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்களிக்க வரும் மக்களை அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று அங்குள்ள முகவர்கள் மிரட்டியுள்ளனர். சிலர் வாக்காளர்களின் கைகளைப் பற்றி அ.தி.மு.க. சின்னத்தில் வாக்களிக்க வைத்துள்ளனர்.
வாக்குச் சாவடியிலிருந்த அதிகாரிகளோ, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களோ இதை கண்டுகொள்ளவில்லை. இந்த முறைகேடுகள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையர் சோ.அய்யர், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாநகராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேடு செய்வார்கள் என்ற ஐயத்தில்தான் தேர்தலை முறையாக நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. சென்னையின் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் வாக்குப்பதிவு படம்பிடிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருப்பது உறுதியாகிறது. மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் நிலையில், மீதமுள்ள நேரத்திலாவது வாக்குப்பதிவு முறையாக நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையரும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் மீது நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக