திண்டிவனம்:
திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான் பாமகவின் தற்போதைய கொள்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் காந்திசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட பிரசாரத்தில் பாமக நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளர் மற்றும் உறுப்பினர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து ராமதாஸ் பேசியது:
""திண்டிவனம்நகரில் இது வரை எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட கட்சிகள் 44 ஆண்டுகள் நகராட்சியை ஆட்சி செய்துள்ளன. நல்ல திட்டங்கள் ஏதேனும் அவர்கள் செயல்படுத்தியிருந்தால் நானும் அவர்களுக்கே வாக்களிப்பேன். ஆனால் இது வரை அவர்களால் ஏமாற்றமே கிடைத்துள்ளது. புதிய திண்டிவனம் நகரத்தை பாமக உருவாக்கும் என நான் பல முறை உங்களுக்கு வாக்குறுதி அளித்தும் வாக்காளர்கள் அதைக் கேட்கவில்லை. இப்போது நகரில் நல்ல குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளன. மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பாமக நகராட்சித் தலைவர் வேட்பாளர் மலர்சேகர் (எ) குணசேகரனை வெற்றி பெற செய்தால் என்னுடைய நேரடி பார்வையில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் துரிதமாக நடைபெறும். உங்களுக்கு பணி செய்ய பாமக சார்பில் நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாமக-வின் தற்போதைய கொள்கை திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான். தமிழ்நாட்டில் 2016-ல் பாமக ஆட்சி அமைக்கும்'' என்றார் ராமதாஸ்.நகரச் செயலர் ஜெயராஜ் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட முன்னாள் பாமக செயலர் ஏழுமலை, மாநில துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக