சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ம.க, வேட்பாளர் நாகவள்ளி தீவிர வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் :

          சிதம்பரம் நகர மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டி போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரமே பரபரப்பாக காணப்படுகிறது. 

            சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவிக்கு பா.ம.க., அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - ம.தி.மு.க.,   - மா.கம்யூ., - வி.சி., லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்களும், 33 வார்டுகளில் 214 பேர் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சுறுசுறுப்படைந்து தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். 

               பா.ம.க., நாகவள்ளிக்கு மாவட்டச் செயலர் வேணுபுவனேஸ்வரன், நகர செயலர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், அ.தி.மு.க., நிர்மலாவிற்கு அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். தி.மு.க., எழில்மதிக்கு நகர செயலர் செந்தில்குமார் தலைமையில் இளைஞரணி ஜவகர், அப்பு சந்திரசேகர், அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்கின்றனர். காங்., செந்தில்வள்ளிக்கு முன்னாள் மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் வழக்கறிஞர் வேல்முருகன், லோக்சபா தொகுதி இளைஞர் காங்., சித்தார்த்தன், சட்டசபை தொகுதி இளைஞர் காங்., ரஜினி உள்ளிட்டோர் நகர வீதிகளில் ஓட்டு சேகரித்தனர். 

             மா.கம்யூ., வேட்பாளருக்கு மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டக் குழு ராமச்சந்திரன், நகர செயலர் நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், ம.தி.மு.க., வேட்பாளர் ஜோதிலட்சுமிக்கு வழக்கறிஞர் மோகனசுந்தர், நகர செயலர் சீனுவாசன் உள்ளிட்டோர் ஓட்டு சேகரித்தனர். அதேப்போன்று கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் போட்டிபோட்டு ஓட்டு சேகரித்து வருவதால் கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் நகரம் பரபரப்பான நிலைக்கு மாறியுள்ளது.


0 கருத்துகள்: