திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

திருப்போரூர்:
 
          ""தாழ்த்தப்பட்டவர்களுக்காக 11 சதவீத இடஒதுக்கீட்டை 12 சதவீதமாக உயர்த்தியவர் முதல்வர் கருணாநிதி,'' என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருப்போரூரில் பா.ம.க., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  பேசியது: 

             பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி, இந்த தேர்தலில்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியே காரணம். ராமதாஸ், 20 ஆண்டு கனவு நிறைவேறியதாகக் கூறியுள்ளார். ஒரே அணியாக நாம் உள்ளோம். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தின் முதல்வராக கருணாநிதியை அமர்த்த வேண்டும். யார் எம்.எல்.ஏ., என்பது முக்கியம் அல்ல. யார் முதல்வராகிறார் என்பதே முக்கியம். சட்டம், ஆற்றல், அறிவு, நீண்ட நெடிய அனுபவம் ஆகிய அனைத்தும் கருணாநிதிக்கு மட்டுமே பொருந்தும். 

              அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காக 11 சதவீத இடஒதுக்கீட்டை 12 சதவீதமாக உயர்த்தினார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 107 ஜாதிகளுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளார். சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் வழங்கியுள்ளார். அருந்ததியினருக்கு தனியாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளார். அரவாணிகளையும் அரவணைத்துள்ளார். நாட்டுப்புறக் கலைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பாராட்டப்படக்கூடியவர் கருணாநிதி.
 
             ஜெயலலிதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில், முதல் 5 ஆண்டு சாதனையாகக் கூறப்படுவது, வளர்ப்பு மகனுக்கு 100 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட திருமணம். இரண்டாவது ஐந்தாண்டில் ஒரு சில சாதனைகளை சொல்லலாம். கருணாநிதியை போலீசார் கொடுமைப்படுத்தி நள்ளிரவில் கைது செய்தது, வைகோவை பொடாவில் கைது செய்தது, நெடுமாறனை 18 மாதங்கள் சிறையில் வைத்தது, பா.ம.க., நிறுவனர் ராமதாசை கைது செய்தது, என்னையும் நான்கு நாட்கள் சிறையில் அடைத்தது ஆகியவற்றை சாதனையாகக் கூறலாம். அரசு ஊழியர்களை எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் மூலம் நீக்கியதையும் சொல்லலாம்.
 
             கருணாநிதி ஆட்சியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் குடிநீர் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், செம்மொழி மாநாடு ஆகியவற்றை சாதனையாகக் கூறலாம். 75 ஆண்டு கால அரசியல் அனுபவம் மிக்கவர் கருணாநிதி. அவர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். எதிர்க்கட்சி தலைவர் போல கோடநாட்டில் குறட்டை விடுபவர் இல்லை. குறட்டை விடும் நேரத்திலும் கோப்புகளை பார்ப்பவர். மக்களுக்கு செய்த திட்டங்களை கூறி கருணாநிதி ஓட்டு சேகரிக்கிறார். ஜெயலலிதாவோ, கருணாநிதியை திட்டி, திட்டி பிரசாரம் செய்கிறார். அவரின் பிரசாரம் எடுபடாது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

0 கருத்துகள்: