மாமல்லபுரம்:
தி.மு.க., கூட்டணி வெற்றிக் கூட்டணி மட்டுமல்ல, சமூக நீதி கூட்டணி,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திருப்போரூர் தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து, திருக்கழுக்குன்றத்தில் நேற்று முன்தினம் இரவு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:
தி.மு.க., தலைமையிலான எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி மட்டுமல்ல, சமூக நீதி கூட்டணி. சமுதாயங்கள் இணைந்த கூட்டணி. இப்பகுதியில் சில இளைஞர்களின் விரும்பத்தகாத செயல்களால், பிரச்னை ஏற்பட்டது; அது மறக்கப்பட்டது. பா.ம.க., தோழர்கள், விடுதலை சிறுத்தைகளின் கொடியையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் பா.ம.க., கொடியையும் மாற்றி மாற்றி பிடித்திருப்பதைக் காண்கிறேன். சமூக மாற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக 30 ஆண்டுகளாக பாடுபட்டு வந்தேன். நானும், திருமாவளவனும் இணைந்திருப்பது அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிபெறச் செய்யும்.
நாம் நிறுத்தியவர்களை அவர்கள் வெற்றிபெறச் செய்வர். நாம் சேர்ந்து தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறச் செய்வோம். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெறச் செய்வோம். மிகப்பெரும் வெற்றியும் பெறுவோம்.சில பத்திரிகைகள் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு இருப்பதாக எழுதுகின்றன. இங்கு சேர வேண்டிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்துள்ளோம். தமிழகத்தில் இது போன்ற கூட்டணி இதுவரை அமையவில்லை. இனியும் அமைக்கப்படாது.நான் 30 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தேன். கருணாநிதி முதல்வராவதையே மக்கள் விரும்புவதால், நமக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதுவர். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. எனவே, மகேசனே தீர்ப்பு எழுதப் போகிறார். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக