கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.என்.சேகரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

 
கும்மிடிப்பூண்டி:

           ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.என்.சேகரை ஆதரித்து கும்மிடிப்பூண்டி பஜாரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பா.ம.க மாவட்ட செயலாளர் க.ஏ.ரமேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
 
                இந்த தொகுதியில் நம்மை எதிர்த்து போட்டியிடும் நடிகர் கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது? என்ன கோட்பாடு இருக்கிறது? நடிகர் தனது கட்சி வேட்பாளரை மேடையில் பளார் பளார் என்று அடிக்கிறார். இந்த நடிகரை கூட்டணியில் ஏன் சேர்த்தோம் என்று அ.தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஓரே மேடையில் பேசுவார்களா?

                10 ஆண்டு காலம் நான் முதலமைச்சராக இருந்தேன். அப்போது இந்த சாதனைகளை செய்தேன் என்று ஜெயலலிதாவால் பட்டியலிட்டு காட்ட முடியுமா? பட்டியல் போட வேண்டாம். ஏதாவது ஒன்றை மட்டுமாவது சொல்ல முடியுமா?. ஆனால் தி.மு.க ஆட்சியில் எனது அருமை நண்பர் கருணாநிதியின் சாதனைகள் ஏராளம். கருணாநிதியின் சாதனைகளை பேச சொன்னால் எதிரே அமர்ந்து இருக்கும் பெண்கள் கூட என்னை விட அருமையாக பேசுவாங்க. எங்கள் அனைவருக்கும் கொள்கை, கோட்பாடு, லட்சியம் இருக்கிறது. 
              மொழி, இனம். நாடு இதைப்பற்றிய கவலை எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. கொள்கை இல்லாத கூட்டணி அ.தி.மு.க கூட்டணி ஆகும். நமது கூட்டணி கொள்கை உள்ள சமூகநீதி கூட்டணி ஆகும். பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே கூட்டணியில் வரவேண்டும் என்ற 20 ஆண்டு கால கனவு இன்றைக்கு நனவாகி உள்ளது.  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

             இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உள்பட்ட ஊத்துக்கோட்டையிலும் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார்.

0 கருத்துகள்: