நெய்வேலி:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள பாமகவினரிடமிருந்து, கட்சியின் நிர்வாகிகள் சனிக்கிழமை விருப்ப மனுவை பெற்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நெய்வேலி பாட்டாளித் தொழிற்சங்க அலுவலகத்தில் பாமக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச்செயலர் ஈச்சங்காடு ப.சண்முகம் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எடுத்துரைத்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திராவிடக் கட்சிகள் துணையின்றி போட்டியிடுவது என்ற முடிவை மேற்கொண்ட நிறுவனர் ராமதாசுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் பெருகி வரும் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கம்மாபுரம் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த பாமகவினரிடமிருந்து விருப்ப மனுவை ஈச்சங்காடு ப.சண்முகம் பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தர்மலிங்கம், நெய்வேலி நகரச் செயலர் சக்கரவர்த்தி மற்றும் பாமக தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக