கோ.சீதாராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோ.சீதாராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூட்டணி பற்றி கவலை வேண்டாம்: அன்புமணி ராமதாஸ்


திருவள்ளூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாமில் உரையாற்றுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் -
 
திருவள்ளூர்:
 
               பாமக தொண்டர்கள் யாரும் கூட்டணி பற்றி கவலைப் படவேண்டாம் என அன்புமணி ராமதாஸ் கூறினார். திருவள்ளூரில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை மேற்கு மாவட்டச் செயலர் பாலயோகி தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமதாஸ், அன்புமணி சிறப்புரை ஆற்றினர்.
 
இதில் அன்புமணி ராமதாஸ் பேசியது: 
 
                   பாட்டாளி மக்கள் கட்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதைப் பார்த்து மாற்றுக் கட்சியினர் பொறாமையிலும் கலக்கத்திலும் உள்ளனர். எங்களுக்கு பதவிகள் மீது விருப்பமில்லை. ஆனால் மாற்றுக் கட்சியினர் நமது சமுதாயத்துக்காக இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளுக்காகவும் போராடுவதில்லை. நமக்காக போராடவே நமக்கு பதவிகள் வேண்டும்.
 
                  தற்போதுள்ள இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். சினிமா வாழ்க்கை அல்ல, அது ஒரு பொழுதுபோக்கு என உணர வேண்டும். ஆகையால் சினிமா நடிகர்களை விட்டுவிட்டு சமுதாயத்துக்காக போராட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை தோற்கடித்தனர். ஆனால் எழுச்சியுள்ள இளைஞர்கள் உள்ளவரை பாமகவை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
 
நிறுவனர் ராமதாஸ் பேசியது: 
 
                  பல ஆண்டுகளுக்கு முன்னால் வன்னியர் சமுதாயத்தினர் கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்தனர். 27 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம். இந்த ஒதுக்கீடு மூலம் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் மருத்துவத் துறையிலும், 15 ஆயிரம் பேர் பொறியியல் துறையிலும் சேர்ந்துள்ளனர். இந்த இட ஒதுக்கீடு பெறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த போராட்டங்களை இளைஞர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இப்போராட்டத்தில் இறந்த 21 மாணவர்களின் தியாகங்களையும் நினைவு கூற வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தப்பின் பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். அதற்கு முழு அளவு ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் உள்ள 15 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் பாமகவில் இணைகிறார்களோ அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்றார்.
 
                       இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலு, மாநில துணைப் பொதுச் செயலர்கள் கோவிந்தராசு, ரவிராஜ், மாநில துணைத் தலைவர் சீதாராமன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தினேஷ்குமார், கடம்பத்தூர் ஒன்றியச் செயலர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திருவள்ளூர் நகரச் செயலர் கண்ணன் நன்றி கூறினார்.

பாமக மாநில துணைத் தலைவர் சீதாராமன்

திருவள்ளூர்:
            பாமக மாநில துணைத் தலைவராக கோ.சீதாராமன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாமகவில் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலராக இதுவரை கோ.சீதாராமன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ், கோ.சீதாராமனை மாநில துணைத் தலைவராக பதவி நியமனம் செய்தார்.