பாமக மாணவர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாமக மாணவர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விட்டுகொடுப்பவன் கெட்டுபோவதில்லை : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,

               பா.ம.க. மாணவர் அணி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் தியாகராய நகர், பொங்கு தமிழ் அறக் கட்டளை அலுவலகத்தில் நடந்தது.

அப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்  கூறியது

            ‘’தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு முதலில் 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கிடைத்த தொகுதியை விட்டுக் கொடுப்பது இதுவரை நடந்ததில்லை. ஆனால் நாங்கள் கூட்டணியின் பொதுநலன் கருதி ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்கள் கூட்டணியில் காங்கிரசும் இடம் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விட்டுக் கொடுத்தோம். பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிவாகி அறிவிக்கப்படும்.  

                தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. மற்றும் எங்கள் கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணி தலைவர்களுடன் பிரசாரம் செய்வது குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம்’’ என்று கூறினார்.

தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மூட வேண்டும் ; பாமக மாணவர் சங்கம்

வேலூர்:
 
              வேலூர் மாவட்டம், அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் மூதூரில் நடந்தது.  இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் சங்க செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

               தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அடுத்த மாதம் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷனர் அறிவித்த நாள் முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். டாஸ்மாக் திறந்திருந்தால் தேர்தலின் போது பல தகராறுகள் ஏற்படும்.  இதனால் சட்டம் ஒழுங்கு கெடும். மக்கள் அதிகமான துன்பத்திற்கு ஆளாவர். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் ஓசியில் மதுபானங்களை தரும்.

              இதனால் குடிக்காதவர்கள் கூட அப்பழக்கத்திற்கு ஆளாவார்கள். அதனால் தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றார். அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.

பதிவு மூப்பு முறையில் பணி: பாமக கோரிக்கை

                   மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் தேவை என, பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                   தமிழகத்தில் 1992 முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து முடித்தவர்களும், அதற்குப் பிறகு படித்தவர்களும் வேலை வாய்ப்பில்லாமல் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 45 வயதை கடந்தவர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிலையில் தற்போது, மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்த நிலைக்கு மாறாக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், 50, 55 வயது ஆனாலும் கூட வேலைவாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிடும்.

                    இதற்காக, சம்பந்தப்பட்டவர்கள், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இது இரவு நேரத்திலும் நீடித்து வருகிறது. இவர்களின் பரிதாப நிலையை உணர்ந்து வேலை வாய்ப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். மாநில அளவிலான பதிவு மூப்பு என்பதற்கு நீதிமன்ற காரணம் காட்டி தட்டிக்கழிக்காமல் காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை தொடர அரசு கொள்கை முடிவெடுத்து மீண்டும் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்களும், அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே. மணி கூறியுள்ளார்.

கடலூரில் கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ் வசதி: பாமக மாணவர் சங்கம் கோரிக்கை


கடலூர்:

              கடலூரில் கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பாமக கிழக்கு மாவட்ட மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                   கடலூர் கல்லூரிகளுக்கு கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் நகரப் பஸ்களை இயக்க வேண்டும். கடலூர்- குறிஞ்சிப்பாடி, கடலூர்- பண்ருட்டி இடையே மகளிருக்கு மட்டும் தனிப் பஸ்களை இயக்க வேண்டும். பலமுறை இக்கோரிக்கை முன்வைத்தும் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து விரைவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                    கூட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பா.அருள்பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜ்குமார் நாராயணன் வரவேற்றார். மாநில மாணவர் சங்கச் செயலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். பாமக மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.