காடுவெட்டி குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காடுவெட்டி குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் காடுவெட்டி குருவை எதிர்த்து அதிமுக இளவழகன் போட்டி

           திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு ஜெயங்கொண்டம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  பாமக சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்கத்  தலைவர் மாவீரன்  காடுவெட்டி குரு போட்டியிடுகிறார்.

        இந்நிலையில் அதிமுகவின் புதிய பட்டியலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் இளவழகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்படுள்ளது. 2001 -2006ல் அரியலூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் இளவழகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ம.க. சார்பில் போட்டியிட 6203 பேர் விருப்ப மனு

விழுப்புரம்:
 
              சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 3-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

              தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் நா.ம.கருணாநிதி தலைமையில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் ஆகியோர் கொண்ட குழுவினர் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர்.

             விருப்ப மனுக்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை 6203 பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர். வேளச்சேரி தொகுதியில் டாக்டர் அன்புமணி போட்டியிட சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் ஜெயராமன் விருப்ப மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அன்புமணி போட்டியிட கோரி இளைஞரணி மாநில துணை செயலாளர் விழுப்புரம் சிவகுமார், கடலூர் தமிழ்வாணன், நாகப்பட்டினம் பழனிசாமி, தஞ்சாவூர் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட பா.ம.க. செயலாளர் ரவி அலெக்ஸ் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

                  பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி செய்யாறு, புவனகிரி, செஞ்சி தொகுதிகளில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்தனர். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி போட்டியிட உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் மனு கொடுத்தார். ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்க தலைவர் குரு போட்டியிட மாநில துணை பொதுச்செயலாளர் பாலு, ஜெயங்கொண்டம் மாவட்ட செயலாளர் வைத்தி மனு கொடுத்தார்.

வன்னியர் சமுதாயத்தினர் பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் அன்புமணி முதல் அமைச்சராக வருவார்: வன்னியர் சங்க தலைவர் குரு

புதுவை:

             புதுவை மாநில வன்னியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா அரியாங்குப்பத்தில் நடந்தது. 

கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு பேசியது:

             புதுவை மாநிலத்தில் வன்னியர்கள் 60 முதல் 70 சதவீதம் வரை வாழ்கின்றனர். நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் நாம் இன்னும் வளரலாம். பிறருக்கு கொடி பிடித்து, கோஷம் போடும் நிலையை மாற்றி நாம் நாட்டை ஆளவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வில்லை. வன்னியர் சமுதாய மக்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி வன்னியர்களின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்தது.

               இதனால் நாம் அடிமைப்பட்டோம். அதன்பின்பு டாக்டர் ராமதாஸ் வந்தார். நமக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980ல் போராட்டம் அறிவித்தார். இதற்காக 21 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அதன் பின்புதான் இடஒதுக்கீடு கிடைத்தது. இருந்த போதிலும் புதுவையில் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதையும் போராடி பெற்றுத்தந்தார். எத்தனையோ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதல் அமைச்சராகி உள்ளனர். 


             ஆனால் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இன்னும் முதல் அமைச்சர் ஆகவில்லை. இதற்காக டாக்டர் ராமதாஸ் போராடுகிறார். வடதமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். நமது சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் மாம்பழ சின்னத்திற்குதான் என்று முடிவு செய்தால் யார் தயவும் இன்றி நாம் ஆட்சியை பிடிக்க முடியும். புதிய கட்சிகள் தொடங்கும்போது அதற்காக உயிர் தியாகம் செய்பவர்கள் வன்னியர்கள்தான். ஜெயலலிதா கைதான போது பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி தற்போது தூக்கு தண்டனை கைதிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். பல கட்சிகளை நாம் வாழவைத்தோம். நம்மை யாரும் வாழ வைக்கவில்லை.

                தமிழகம்  புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. வன்னிய சமுதாயத்துக்காக டாக்டர் ராமதாஸ் வன்னியர் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க.வுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராக வருவார் என்றார்.

குரு மீது தொடர்ந்துள்ள வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கை: ராமதாஸ்

சென்னை:
 
          வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது காவல் துறை தொடர்ந்துள்ள வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.  பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:  
 
           வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு ஜூலை 28-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய குரு, ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்கள் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடியதையும், அதனால் அவர்கள் தனி இட ஒதுக்கீடு பெற்றதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  ஆனால், வன்னியர் மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடும் வகையில் பேசினார் எனக் கூறி, 4 வெவ்வேறு பிரிவுகளில் குருவின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  குருவை கூலிப்படை மூலம் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், காவல் துறைதான் பொறுப்பேற்க வேண்டும்.  
 
தேர்தல் கூட்டணி:  
 
                   தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது. கூட்டணி குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் முடிவெடுப்பதற்கான அதிகாரம் கடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாகக் குழுவும் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 
 
அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? 
 
 கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் கூறியதாவது:  
 
            குரு மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இதை நாங்கள் பழிவாங்கும் நடவடிக்கை என்றே கருதுகிறோம். குரு மீதான வழக்குகள் காரணமாக தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது பாதிக்குமா என்பது பற்றியெல்லாம் எங்கள் நிர்வாகக்  குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.  அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டால், தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம். 
 
           இங்கு யாரும் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை.  தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு மாற்று அணி அமைய வேண்டும் என்பது அந்தக் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் பலரது கருத்தாக உள்ளது. அதைத்தான் நான் அண்மையில் மதுரையில் குறிப்பிட்டேன்.  தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் உயிர் மூச்சான கொள்கை. 
 
                     வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வர் கருணாநிதி இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ஆவலாக எதிர்பார்க்கிறோம். டாஸ்மாக் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கிறது. அவர்களை அரசு பழிவாங்காமல், அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்.


தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு: ராமதாஸ்


மதுரை:
          தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.
  
மதுரையில்  சனிக்கிழமை பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் அளித்த பேட்டி:
           1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. 1989-ம் ஆண்டு மட்டும் தனித்துப் போட்டியிட்டது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையில் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.1991-தேர்தலிலும், 1996-தேர்தலிலும் சமூக நீதிக் கூட்டணியை பாமக அமைத்தது. கடந்த 91-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாமக ஒரு இடத்திலும், திமுக ஒரு இடத்திலும் வென்றது. 96-ம் ஆண்டு தேர்தலில் பாமகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைத்தன. 
           வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மீண்டும் அதுபோன்ற சமூக நீதி கூட்டணி உருவாகவும் வாய்ப்பு உள்ளது. முன்பு அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தானாக வெளியேறியது. திமுக கூட்டணியில் இருந்தபோது பாமகவை திமுக வெளியேற்றியது. குரு பேசிய பேச்சின் விளைவாகவே இது நடந்தது. பின்னர் திமுக பொதுக்குழு கூடி பாமகவை மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பாமக தலைவர் கோ.க.மணி தலைமையில் ஐவர் குழு திமுக தலைமையுடன் பேச்சு நடத்தியது. ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. மீண்டும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்.
               தேமுதிக இடம்பெறும் அரசியல் கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்றும் திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பு எதிரணியிலிருந்து அழைத்தால் பேசுவீர்களா என்றும் கேட்கிறீர்கள். அதுபற்றி இப்போது நான் ஒன்றும் கூறமுடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதுதான் உண்மை என்றார் ராமதாஸ்.



தண்டவாளங்களை தகர்ப்போம் :காடுவெட்டி குரு எச்சரிக்கை


அரியலூர் :

                ""வன்னியருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் வரை, எங்கள் போராட்டம் ஓயாது,'' என்று வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு தெரிவித்தார். 

           அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 20 சதவீதம் தனி இடம் ஒதுக்க வேண்டி, அரியலூர் காமராஜர் திடலிலிருந்து அரியலூர் தாலுகா அலுவலக வளாகத்துக்கு பேரணி மேற்கொள்ளப்பட்டது.

வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாவது: 

             வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். "ஜாதி இல்லை' என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் பிரித்து தரவில்லை என்றால், கருணாநிதி அரசு, மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். 

            ராஜஸ்தானில் குர்ஜார் இன மக்களைப் போல, ரயில் மறியல் போராட்டம் நடத்தி, தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம் நடத்தப்படும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில், பெரும்பான்மை ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும், கடந்த 63 ஆண்டாக தனி இட ஒதுக்கீடு இல்லை. வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு குரு பேசினார்.

தமிழகம் தாங்காது அன்புமணி எச்சரிக்கை : 

           காஞ்சிபுரம் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில், வன்னியர்களுக்கு20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது: 

               இங்கு நடைபெறுவது முதல் கட்ட போராட்டம். தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகம் தாங்காது. தயவு செய்து எங்களை அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தள்ளாதீர். நாங்கள் கோரிக்கைகளை வலிறுத்தி அமைதியாகப் போராட்டம் நடத்துகிறோம். அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து சொல்ல மாட்டோம். தம்பிகள் எழுச்சி கண்டு ஆங்காங்கே போராட்டம் நடத்தினால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எங்கள் சொந்தங்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளோம். நாங்கள் சலுகை கேட்டு போராடவில்லை. உரிமை கேட்டு போராடுகிறோம். இது ஜாதி போராட்டம் அல்ல; நீதி கேட்டு போராட்டம். எங்கள் உரிமையைப் பெறுவதற்காக தேவைப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை செல்லவும் தயாராக உள்ளோம். கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.


தனி இடஒதுக்கீடு கேட்டு போராடியவர் ராமதாஸ்: காடுவெட்டி குரு பேச்சு



தனி இடஒதுக்கீடு கேட்டு போராடியவர் ராமதாஸ்:
 
 காடுவெட்டி குரு பேச்சு



விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மேல்காரணை கிராமத்தில் வன்னியர் சங்க பொதுக் கூட்டம் நடந்தது. 


கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாவது:
 

               இந்த கூட்டம் பூம்பூகாரில் நடைபெறுகின்ற மகளிர் மாநாட்டை ஒட்டியும், தனி இடஒதுக்கீடு கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகாஅலுவலகம் முன்பு நடைபெறவுள்ள மறியலுக்கான ஆலோசனை கூட்டம். இன்னும் மாநாடு நடைபெற 60 நாட்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியாக இதுபோன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

                இடஒதுக்கீடு போராட்டம் நடைபெற்ற போது நமது சொந்தங்கள் 21 பேர் சுட்டுக் கொன்றது காவல்துறை. அதற்கு உறுதுணை யாக இருந்தது அ.தி.மு.க. அரசாங்கம். நாம் இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய போது எந்த அரசியல் கட்சியும் நமக்கு ஆதரவு அளிக்கவில்லை.

                 இன்றைக்கு வரை நமக்கு சமூக நீதி கிடைக்கவில்லை. இடஒதுக்கீடு கேட்டு போராடிய போது 1989-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி நம் இனத்தை சேர்த்து 107 சாதியினருக்கு இடஒதுக்கீடு கொடுத்தார். அந்த இடஒதுக்கீடு கொடுத்து விட்டு முதல்வர் கருணாநிதி நான் உங்களுக்கு ஒரு கனி அளித்துள்ளேன். அதனை சுவைத்து பார்த்து கூறுங்கள் என்று நமது தலைவர் ராமதாசிடம் கூறினார். ஆனால் அது கனி அல்ல. அழுகிய பழம் என்று ராமதாஸ் கூறினார்.  இவ்வாறு அவர் பேசினார்.

                 முன்னதாக வன்னியர் சங்க மாநில தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணைச்செயலாளர் தனராசு, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மேல் காரணை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

             எம்.எல்.ஏ.க்கள் கலிவரதன், செந்தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், பா.ம.க. மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் ரவி அலெக்ஸ், மாவட்ட அமைப்பாளர் அரிகரன், தேர்தல் பணிக்குழு அம்மன் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் கன்னிகா ராமு, மாவட்ட ஊராட்சி மன்றக்குழு தலைவி வசுந்தராதேவி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் வாழ்த்தி பேசி னார்கள். முன்னதாக மேல்காரணை ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் வரவேற்று பேசினார்.


பாமக கண்டன ஆர்ப்பாட்ட விளக்க பொதுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி:

           வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மற்றும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு பூம்புகாரில் ஜூலை 18-ல் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட விளக்க பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கோயில் அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.

             மகளிர் பெருவிழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வது எனவும், ஜூலை 28-ல் நடக்க உள்ள தனி ஒதுக்கீடு போராட்டம் வெற்றி பெற வேண்டும் எனவும் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாமக மாவட்டச் செயலாளர் கே.பி.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.ஏ.டி.கலிவரதன், மாநில மகளிரணி செயலாளர் காசாம்பு பூமாலை, ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எம்.மணிவண்ணன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலர் எஸ்.டி.இராமு வரவேற்றார். மாநில வன்னியர் சங்கத் தலைவர் செ.குரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பி.ஆர்.குசேலன், மாநில துணைச் செயலாளர் எம்.அன்பழகன், ஆர்.வடிவேல் உள்ளிட்ட பலர் பேசினர்.

கல் வீசியவர் கைது: 

           தண்டலையில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு செ.குரு கள்ளக்குறிச்சி நோக்கி சென்றார். அப்போது பெருவங்கூர் சுடுகாட்டு அருகே சென்றபோது அவரது வேன்மீது மூவர் கல்வீசி தாக்கியதில் வேன் கண்ணாடி உடைந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸôர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பெருவங்கூர் காலனி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜெமினிகணேசன் (36)  கைது செய்யப்பட்டார்.



இலவச கல்வி திட்டத்தை வலியுறுத்தி வருபவர் ராமதாஸ்


திருவண்ணாமலை:
            இலவச கல்வி, கட்டாயக்கல்வி, சமச்சீர் கல்வி திட்டத்தை வலியுறுத்தி வருபவர் ராமதாஸ் என வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு கூறினார். 
 போளூர் வட்டம், கேளூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:  
             வடதமிழகத்தில் 40 சதவீதம் குடிசை வீடுகள் உள்ளன. அதில் வன்னியர்கள்தான் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தமிழகத்தில் 2 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்து வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும்.   கட்டாயக்கல்வி, சமச்சீர் கல்வி திட்டத்தைக் கொண்டுவந்து இலவச கல்வியை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்று கூறி வருபவர் ராமதாஸ்.   காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைக்கும் கட்சியாக பாமக விளங்குகிறது.   அன்புமணி ராமதாஸ், அரங்க வேலு போன்ற சிறப்பு மிக்க தலைவர்கள் பாமகவில் உள்ளனர் என்றார் அவர்.   பாமக மாநில துணைத்தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் எம்எல்ஏ எதிரொலிமணியன், வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலர் இரா.காளிதாஸ், பாமக மாவட்ட தலைவர்கள் ஆ.வேலாயுதம், கி.ஏழுமலை, மாவட்ட செயலர் லா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

காங்கிரஸில் மீண்டும் வன்னியர் குரல்

        கிருஷ்ணசாமி சொல்வதுபோல காங்கிரஸில் வன்னியர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லையா? 

இது குறித்து வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்:

முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன்: 

                வன்னியர் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்து வரும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. வன்னியர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர் ராமசாமி படையாச்சியார். அவர் காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இரண்டு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 

                     மற்றொரு வன்னியர் தலைவரான மாணிக்கவேல் நாயக்கர் ராஜாஜி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்துள்ளார். காமராஜர் மற்றும் பக்தவத்சலம் அமைச்சரவையில் பூவராகன் அமைச்சராக இருந்துள்ளார்.எம்.பி. சுப்பிரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, எம். கிருஷ்ணசாமி ஆகிய நான்கு வன்னியர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளனர். எந்தக் கட்சியிலும் கிடைக்காத வாய்ப்பு இது. ஏராளமான வன்னியர்கள் காங்கிரஸ் கட்சியில் எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர். காங்கிரஸில் மீண்டும் வன்னியர் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான எம். கிருஷ்ணசாமி காங்கிரஸில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா ஜூன் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் முன்னிலையில் பேசிய கிருஷ்ணசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகளை மீறி தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்ததற்கு வன்னியர்கள்தான் காரணம். வன்னியர்கள் இல்லை என்றால் இன்று காங்கிரஸ் இல்லை. ஆனால், அன்றும் இன்றும் காங்கிரஸில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியது

               5 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த மருமகன் அன்புமணிக்கு இப்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகூட கிடைக்கவில்லை. எம்.பி.யாக இருந்தும் கிருஷ்ணசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. எனவே, தனது குடும்பத்தின் ஆதிக்கம் அரசியலில் குறைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் இப்படியெல்லாம் பேசத் தொடங்கியுள்ளார் என்றார்.எம்.சரவணன்.

முன்னாள் எம்.பி.அன்பரசு: 

                காங்கிரஸில் வன்னியர்களுக்கு அவ்வப்போது உரிய. பிரதிநித்துவம் அளிக்கப்பட்டு வந்தது.ஆனால், இப்போது அது படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் 5 முதல் 6 வன்னியர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போது 3 எம்.எல்.ஏ.க்களும். ஒரே ஒரு எம்.பி. மட்டுமே வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று ஒட்டுமொத்தமாக கூறமுடியாது. கிருஷ்ணசாமி கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், சொல்லிய விதம்தான் தவறு.

காங்கிரஸில் வன்னியர்கள் புறக்கணிப்பு: எம். கிருஷ்ணசாமி

              காங்கிரஸ் கட்சியில் தொடக்க காலம் முதலே வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார். வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நூல்களை வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம். கிருஷ்ணசாமி பெற்றுக் கொண்டார். 

நிகழ்ச்சியில் எம்.கிருஷ்ணசாமி பேசியதாவது:  

             1952 பொதுத்தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதைத் தடுத்து, காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க உதவியவர்கள் வன்னியர்கள்தான். வன்னியர்கள் இல்லையெனில், இன்று இங்கு காங்கிரஸ் கட்சி இல்லை.  ஆனால், அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் அன்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை என்றார் கிருஷ்ணசாமி.  முன்னதாக 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியது:  

                   மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, நான் செய்த பணிகளைப் பாராட்டி 3 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. ஐ.நா. சபை பொதுச் செயலர் பான்-கி-மூன், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் போன்றவர்கள் நேரில் பாராட்டினர்.  இன்று தமிழகத்தில் ஓடும் 108 ஆம்புலன்ஸ் வண்டிகள் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டவை. தமிழ்நாடு மட்டுமல்ல, இன்று 14 மாநிலங்களில் ஓடும் 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை அமைச்சராக இருந்தபோது, நான்தான் அறிமுகம் செய்தேன் என்றார்.  இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, மாநில தொல்லியல் துறை முன்னாள் இயக்குநரும், நூலாசிரியருமான நடன காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

வன்னியர்களின் ஒற்றுமையை குலைக்க முயற்சி: ஜெ.​ குரு குற்றச்சாட்டு


தருமபுரி:

                 வன்னியர்களின் ஒற்றுமையைக் குலைக்க திமுக,​​ அதிமுக கட்சிகள் முயற்சித்து வருகின்றன என வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.​ குரு குற்றம் சாட்டினார்.​ ​ 

                  வன்னியர்களுக்கு கல்வி,​​ வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி ஜூலை 28-ம் தேதி மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.​ இதற்கான விளக்கப் பொதுக்கூட்டம் நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.​ 

இதில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.​ குரு பேசியது:​ ​ 

                   வன்னியர்களின் ஒற்றுமையுணர்வை சீர்குலைக்கும் வகையில் திமுக,​​ அதிமுக கட்சிகள் செயலாற்றிவருகின்றன.​ திமுக-வின் வளர்ச்சிக்கும்,​​ ஆட்சி பொறுப்புக்கும் வன்னியர்கள்தான் அதிகமாக பாடுபட்டுள்ளனர்.​ அதிமுக ஆட்சியில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை கைதியாக இருப்பவர்கள் வன்னியர்கள்.​ ​ வாக்குகள் அளிப்பதற்காக மட்டுமே வன்னியர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.​ வரலாற்றுச் சிறப்புமிக்க வன்னிய இனம் ஒன்றிணைந்தால் தமிழகத்தை வன்னியர்கள்தான் ஆட்சி செய்வார்கள்.​ ​​ ​ 

                   
                      இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்னியர்கள் 21 பேர் இறந்தனர்.​ ஆனால்,​​ 107 சாதிகளுக்கும் சேர்த்து 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.​ இவற்றில் வன்னியர்களுக்கு 7 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.​ ​ மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் அதிக பெரும்பான்மையுள்ள வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.​ தற்போது தமிழகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளவர்களின் சாதிகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர்.​ ​ கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் தலைமை தாங்கினார்.​ பாமக மாநில துணைப் பொதுச் செயலர் அ.​ சரவணன்,​​ தருமபுரி எம்எல்ஏ இல.​ வேலுச்சாமி,​​ மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எஸ்.பி.​ வெங்கடேசுவரன்,​​ மாவட்டச் செயலர் வணங்காமுடி,​​ மாவட்டத் தலைவர் அரசாங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு இல்லையெனில் மீண்டும் சாலைமறியல்: காடு வெட்டி குரு





இடைப்பாடி: 

                ஜூலை 28 போராட்டத்திற்கு பிறகும் வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு தரவில்லை எனில், 1987ல் நடந்த போராட்டத்தை போன்று தீவிர சாலை மறியல் போராட்டம் நடைபெறும்,'' என, வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குரு எச்சரித்துள்ளார். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சியில் வன்னியர் சங்க கூட்டம், இடைப்பாடி எம்.எல்.ஏ., காவேரி தலைமையில் நடந்தது. 

வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாவது:

                     பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தான் வன்னிய மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். அப்படி போராடியும் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எவரும் வன்னியராக இல்லை. சட்டசபையில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போது, "ஏன் ஒரு வன்னியர் கூட கலெக்டர் வேலையில் இல்லை' என கேட்டபோது, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் குறுக்கிட்டு, "திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கோவிலில் அர்ச்சகர் வேலை கிடைத்துள்ளது' என, கூறியுள்ளார்.கலெக்டர் வேலை வேண்டும் என கேட்டால் மணியாட்ட வேலை கிடைத்துள்ளது என கூறியுள்ளார். வன்னியர்களை கெடுப்பது வன்னியர்கள் தான். வட தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில், வன்னியர் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும். 

                    தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் பலம் வன்னியருக்கு உள்ளது. தி.மு.க.,- அ.தி.மு.க., என எந்த கட்சியுடன் பா.ம.க., கூட்டணி சேர்ந்தாலும், கூட்டணி தர்மத்தை மீறாமல் பா.ம.க.,வினர் ஓட்டு போடுகின்றனர். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் பா.ம.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதில்லை.அதனால் தான் நாங்கள் பல இடங்களில் தோற்க நேரிடுகிறது. இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல். ராமதாஸ், வன்னிய மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பயன்படும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.கடந்த 1987ல் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது 21 உயிர்களை காவு கொடுத்து 107 ஜாதியனருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால், 2 கோடி பேர் உள்ள வன்னியருக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பூம்புகாரில் ஜூலை 18ல் வன்னிய பெண்கள் கலந்து கொள்ளும் மகளிர் பெருவிழாவும், ஜூலை 28ல் வன்னியர்களுக்கு தனியாக ஒதுக்கீடு கேட்டு போராட்டமும் நடைபெறும். 

                       இதில் இங்குள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். ஜூலை 28 போராட்டத்திற்கு பிறகும் வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு தரவில்லை எனில், 1987ல் நடந்த போராட்டத்தை போன்று தீவிர சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். தாரமங்கலம் எம்.எல்.ஏ., கண்ணையன், யூனியன் சேர்மேன்கள் தொப்பகவுண்டன் (இடைப்பாடி), சுமதிமுத்துமசாமி (மகுடஞ்சாவடி), மாவட்ட இளைஞர் சங்க தலைவர் வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

பேரம் பேசுவதில் உடன்பாடு இல்லை: ராமதாஸ்



                    
                   தேர்தல் நேரத்தில் அரசியல் பேரம் பேசுவதில் பா.ம.க.வுக்கு உடன்பாடு இல்லை என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பா.ம.க.வின் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் பேசியதாவது: 

                        மக்களவைத் தேர்தல் தோல்வி மூலம் தேர்தல் நேர பேரம் பேசுவதில் பா.ம.க.வின் செல்வாக்கு குறைந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. பேரம் பேசுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மற்ற கட்சிகளைவிட எங்கள் கட்சிக்கென தனிப்பட்ட கொள்கைகள், செயல் திட்டங்கள் உள்ளன. அதன்படியே எங்கள் செயல்பாடுகள் உள்ளன. பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் உள்கட்சித் தேர்தல் ஆகியவை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டன. மற்றவை பற்றி கூட்டத்தில் பங்கேற்ற யாரும், எதுவும் பேசவில்லை. நிரந்தர எதிரி இல்லை: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை என்று கூறுவார்கள். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தி.மு.க.வை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல நசுக்கி விடுவேன் என்று ராஜாஜி கூறினார். ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தி.மு.க.வினர் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். எனினும் பின்னர் வந்த தேர்தலில், தி.மு.க., ராஜாஜியின் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனை தனது "நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் முதல்வர் கருணாநிதியே குறிப்பிட்டுள்ளார். தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் எங்கள் கட்சியின் பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியை 2 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். கூட்டணி பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். கூட்டணியை ஒரே நாளில் பேசி முடிவு செய்து விட முடியாது. அதற்கு சில நாள்கள் தேவைப்படும். தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எங்களின் நிபந்தனை என்ன என்பது பற்றி பத்திரிகையாளர்களிடம் கூற முடியாது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்த பிரச்னைக்கு நாங்கள் முக்கியத்துவம் தரவில்லை. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலும் அது பற்றி விவாதிக்கப்படவில்லை. 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வுடன் நாங்கள் பேரம் பேசுவதாகக் கூறுவது பத்திரிகையாளர்களின் கற்பனை ஆகும். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இல்லாவிட்டால் எந்த பாதிப்பும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளது பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என்றார்.  
அ.தி.மு.க.விடம் இருந்து அழைப்பு: 
                  அ.தி.மு.க.விடம் இருந்து கூட்டணி குறித்து ஏதும் அழைப்பு வந்ததா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அ.தி.மு.க.வுடன் எங்கள் கட்சிக்கு இருந்த உறவு முறிந்த பின்னரே பென்னாகரம் இடைத் தேர்தல் நடைபெற்றது. எனினும், பென்னாகரம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அ.தி.மு.க. முன்வந்தது. ஏற்கெனவே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவைத் தேர்தலிலும் எங்களை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். இது குறித்து அக்கட்சியின் தலைவர்கள் சிலர் எங்கள் கட்சித் தலைவர்களுடன் பேசினார்கள். இதை ஏற்கெனவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளோம்' என்றார் ராமதாஸ். பேட்டியின்போது ஜி.கே.மணி, அன்புமணி, ஆர்.வேலு, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 
பா.ம.க. ஆதரிக்காவிட்டால் மேலவை இல்லை 
                      "தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வருவது என்ற முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் பா.ம.க. அளித்த ஆதரவால்தான் நிறைவேறியுள்ளது. இது குறித்த தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. பா.ம.க. மட்டும் தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்திருந்தால், அந்தத் தீர்மானம் நிச்சயம் நிறைவேறியிருக்காது. எனவே, பா.ம.க. ஆதரவு இல்லாவிட்டால், தமிழகத்தில் மேலவை இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி' என்றார் ராமதாஸ்.

முதல்வரை இன்று சந்திக்கிறது பா.ம.க. குழு

திண்டிவனம்:

              திமுக கூட்டணியில் சேருவது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியை  பா.ம.க. சட்டப் பேரவைக் குழு, தலைவர் ஜி.கே. மணி தலைமையில் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது. 

               மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கு இடம் ஒதுக்குமாறு எழுந்த கோரிக்கைபற்றி திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப்பட்டது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க.வையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என்றும், அதற்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஓர் இடம் ஒதுக்குவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை பா.ம.க. ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

                 இதுகுறித்து கருத்தறிய பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட யாரையும் நிருபர்களால் ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொள்ள இயலவில்லை. பா.ம.க. தலைமை இதுகுறித்து உடனடியாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையில் அன்புமணியின் வீட்டில் ஆலோசனை நடத்தினர். 2011-க்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் இடம் என்றாலும், 2013-ல்தான் மாநிலங்களவைக்கு அடுத்து தேர்தல் வரும் என்ற நிலையில், பா.ம.க. அதுவரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

                அதுவரை நாடாளுமன்றத்தில் பா.ம.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்பதால், இப்போதே மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கேட்டுப் பெற முயற்சிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில், பா.ம.க. உயர்நிலைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. திமுக கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக பா.ம.க. என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதை அறிய பத்திரிகையாளர்கள் வெளியில் காத்திருந்தனர். திமுக தீர்மானத்தின் சாதக, பாதகங்கள், இப்போதுள்ள சூழ்நிலையில் பா.ம.க.வுக்கு உள்ள மாற்று வாய்ப்புகள், கட்சியின் எதிர்கால அணுகுமுறை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டணி தொடர்பாக திமுக தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக முதல்வர் கருணாநிதியை பா.ம.க. சட்டப் பேரவைக் குழுவினர் நேரில் சந்தித்து விவாதிக்க அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை, கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அக் குழுவினர் முதல்வரைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

ஜி.கே. மணி மேலும் கூறியதாவது:

                  முதல்வரிடம் பேசிய பிறகு அவர் தெரிவிக்கும் தகவல்களைக் கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் தெரிவிப்போம். அதன் அடிப்படையில் ராமதாஸ் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வது என்று இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று மணி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, முன்னாள் அமைச்சர்கள் ஆர். வேலு, பொன்னுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செந்தமிழ்ச்செல்வன், வேல்முருகன், கலிவரதன், இளவழகன், ராஜா, காவேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.