இடைப்பாடி:
ஜூலை 28 போராட்டத்திற்கு பிறகும் வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு தரவில்லை எனில், 1987ல் நடந்த போராட்டத்தை போன்று தீவிர சாலை மறியல் போராட்டம் நடைபெறும்,'' என, வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குரு எச்சரித்துள்ளார். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சியில் வன்னியர் சங்க கூட்டம், இடைப்பாடி எம்.எல்.ஏ., காவேரி தலைமையில் நடந்தது.
வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாவது:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தான் வன்னிய மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். அப்படி போராடியும் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எவரும் வன்னியராக இல்லை. சட்டசபையில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போது, "ஏன் ஒரு வன்னியர் கூட கலெக்டர் வேலையில் இல்லை' என கேட்டபோது, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் குறுக்கிட்டு, "திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கோவிலில் அர்ச்சகர் வேலை கிடைத்துள்ளது' என, கூறியுள்ளார்.கலெக்டர் வேலை வேண்டும் என கேட்டால் மணியாட்ட வேலை கிடைத்துள்ளது என கூறியுள்ளார். வன்னியர்களை கெடுப்பது வன்னியர்கள் தான். வட தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில், வன்னியர் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் பலம் வன்னியருக்கு உள்ளது. தி.மு.க.,- அ.தி.மு.க., என எந்த கட்சியுடன் பா.ம.க., கூட்டணி சேர்ந்தாலும், கூட்டணி தர்மத்தை மீறாமல் பா.ம.க.,வினர் ஓட்டு போடுகின்றனர். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் பா.ம.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதில்லை.அதனால் தான் நாங்கள் பல இடங்களில் தோற்க நேரிடுகிறது. இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல். ராமதாஸ், வன்னிய மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பயன்படும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.கடந்த 1987ல் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது 21 உயிர்களை காவு கொடுத்து 107 ஜாதியனருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால், 2 கோடி பேர் உள்ள வன்னியருக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பூம்புகாரில் ஜூலை 18ல் வன்னிய பெண்கள் கலந்து கொள்ளும் மகளிர் பெருவிழாவும், ஜூலை 28ல் வன்னியர்களுக்கு தனியாக ஒதுக்கீடு கேட்டு போராட்டமும் நடைபெறும்.
இதில் இங்குள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். ஜூலை 28 போராட்டத்திற்கு பிறகும் வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு தரவில்லை எனில், 1987ல் நடந்த போராட்டத்தை போன்று தீவிர சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். தாரமங்கலம் எம்.எல்.ஏ., கண்ணையன், யூனியன் சேர்மேன்கள் தொப்பகவுண்டன் (இடைப்பாடி), சுமதிமுத்துமசாமி (மகுடஞ்சாவடி), மாவட்ட இளைஞர் சங்க தலைவர் வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக