ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இது குறித்து பா.ம.கட்சியின் தலைவர் ஜி.கே. மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு 1989-ம் ஆண்டில் தமிழக ஆளுநராக இருந்த அலெக்சாண்டர், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால், சட்டப்பேரவை தேர்தல் வந்துவிட்டதால் அந்தப் பணி நடைபெறவில்லை. எனவே, ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. இந்தியாவில் அதிக அளவில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்கு இடஒதுக்கீடு அவசியமாகிறது. இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த, ஜாதிவாரியாக மக்கள் தொகை எண்ணிக்கையை அறிவது அவசியம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்தியுள்ளன. எனவே, 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் தலைமையில் அரசு பொது மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக