சாதிவாரி கணக்கெடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதிவாரி கணக்கெடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கண்டறிவதற்கான ஒரே வழி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

           தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறை தொடரும் என்றும், கிரீமி லேயர்களுக்கும் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத் தக்கதுதான் என்ற போதிலும், அதற்காக தமிழக அரசு கடைப்பிடிக்கும் நடைமுறை தவறு என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது.

             தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலமாக இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று தெளிவாக ஆணையிட்டிருந்தது.

             இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கண்டறிவதற்கான ஒரே வழி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதுதான். ஆனால், அத்தகைய கணக்கெடுப்பை நடத்தாமல் தமிழக அரசிடம் ஏற்கனவே இருந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடரலாம் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

              தமிழக அரசும் அதை ஏற்றுக் கொண்டு அரசாணை வெளியிட்டிருக்கிறது.   ஆனால், தமிழக அரசின் இந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய வினா ஆகும். நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து 2007-ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், எந்த அடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையை முடிவு செய்தீர்கள்? என்று வினா எழுப்பியது.

              1931-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின்படியும் மண்டல் குழு அறிக்கையின்படியும் இந்தியாவில் 54 விழுக்காடு பிற பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாக அப்போது மத்திய அரசின் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அந்த இட ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின் ஓர் ஆண்டு போராடித்தான் அந்த இட ஒதுக்கீட்டை மீண்டும் பெற முடிந்தது.

             69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு வழக்கிலும் இதே வினாவை உச்சநீதிமன்றம் எழுப்பினால் அதற்கு தமிழக அரசால் என்ன பதில் கூற முடியும்? 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்ததைப்போல 69 விழுக் காட்டுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டால், தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிக்கு யார் பொறுப்பேற்பது? எனவே 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை உணர்ந்து இப்போதாவது தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.

           சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமாக மட்டும்தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். எனவே உச்சநீதிமன்றத்திடம் அவகாசம் பெற்று அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

            69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரான நீதிபதி ஜனார்த்தனம் ஒன்றுமே செய்யவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்
வெளியிட்ட அறிக்கையில்,

             திமுக ஆட்சியில் இருந்தபோது 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வலியுறுத்தினேன். கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக, கணக்கெடுப்பு நடத்த ரூ.10 கோடி மட்டுமே செலவாகும் என அப்போது கூறினேன். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.400 கோடி செலவாகும் என்று கூறி அத்தகைய கணக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுத்தவரே நீதிபதி ஜனார்த்தனம்தான்.

                  இப்போது எந்தவிதமான கணக்கெடுப்புமே நடத்தாமல் தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான பல்வேறு விவரங்களை திரட்டி இருப்பதாகக் கூறி அதை முதல்வர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்திருக்கிறார்.

                  இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பில் கிரீமிலேயர் பற்றி உச்ச நீதிமன்றம் எதுவுமே கூறவில்லை. அதுபற்றிய விவரங்களையும் தந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து அரசுக்கு அறிவுரை கூறவேண்டிய கடமை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்ற வகையில் நீதிபதி ஜனார்த்தனத்துக்கு உண்டு. ஆனால், அதற்காக கடந்த ஓராண்டில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத அவர், இப்போது எங்கியிருந்தோ விவரங்களை திரட்டி விட்டதாகக் கூறி வெறும் கையால் முழம் போட்டிருக்கிறார்.

              நீதிபதி ஜனார்த்தனம் அளித்த விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று கோரினால் அதை உச்ச நீதிமன்றம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. இந்த விஷயத்தில் இவரது அறிவுரையை கேட்பதும், இந்த வழக்கில் இடஒதுக்கீட்டு எதிர்பார்ப்பாளர்களுக்கு வெற்றியை அளிப்பதும் ஒன்றுதான்.

சாதிவாரி கணக்கெடுப்பு: 
        
             இப்போதுள்ள நிலையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க ஒரேவழி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதுதான். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்ட போது அதை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான்.

              இப்போது மீண்டும் இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஜெயலலிதாவே முதல்வராக உள்ளார். எனவே, இப்போதும் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்திடம் ஓரிரு மாதங்கள் காலக்கெடு பெற்று, அதற்குள் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இடஒதுக்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு ஜூலை 12 ம் தேதியுடன் முடிவடைகிறது.

                உடனடியாக, இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக ராமதாஸ் கூறியுள்ளார்.


மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்

        சாதிவாரி கணக்கெடுப்பு உண்மையாக நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

துகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

             சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்த மத்திய அரசு தற்போது, சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பு என்ற பெயரில் ஒரு மோசடி கணக்கெடுப்பை நடத்தி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. தொலைபேசி வைத்திருப்பவர்கள், இருசக்கர வாகனம் வைத்திருப்போர் ஏழைகளாக கருதப்பட மாட்டார்கள் என்று கூறியிருப்பதன் மூலம் அவர்ளின் உரிமைகளையும் சலுகைகளையும் மறைமுகமாக பறிக்கப் பார்க்கிறது.ஜாதி கணக்கெடுப்பையும் ஏழ்மை நிலை கணக்கெடுப்பையும் ஒன்றாக நடத்துவது சாத்தியமே அல்ல. 

            எனவே, தற்போதைய கணக்கெடுப்பை உடனடியாக கைவிட வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு


          தமிழகத்தில் டிசம்பரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

           இதற்கான பூர்வாங்க ஆலோசனைகளை தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  இந்த சாதிவாரியான கணக்கெடுப்புடன் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த விவரங்களும் தொகுக்கப்படுகின்றன.  இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதுகுறித்து ஆராய்ந்த மத்திய அரசு இதற்கான ஒப்புதலை அளித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. 


 ஒவ்வொரு மாநிலத்திலும்...

            இந்தக் கணக்கெடுப்பை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையும், இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகமும் இணைந்து மேற்கொள்ள உள்ளது. மாநிலங்கள் வாரியாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.  சாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு முறையான எந்தவொரு சாதிக் கணக்கெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.  இந்த நிலையில், இப்போது சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

 தமிழக அரசு ஊழியர்களைக் கொண்டு... 

              மத்திய அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தைப் பொருத்த அளவில், களத்தில் இறங்கிப் பணியாற்ற உள்ளவர்கள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களாக இருப்பார்கள் எனத் தெரிகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலை காரணமாகவே கணக்கெடுப்பு டிசம்பருக்குத் தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது. 

 பூர்வாங்க ஆலோசனை: 

             சாதிவாரிக் கணக்கெடுப்பு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் குறித்த எண்ணிக்கையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனையில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆகியன பிரதான துறைகளாக இருக்கும். கணக்கெடுப்புப் பணியின் போது இந்த அதிகாரிகளின் பணி முக்கியமாக இருக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.  அண்மையில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சாதிவாரியான கணக்கெடுப்பை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

           கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

               இட ஒதுக்கீட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. தமிழகத்தில் 69 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாகக் குறைக்க சில சக்திகள் முயன்றபோது அதனைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று பா.ம.க. போராடியது.தமிழகத்தில் ஓராண்டுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு நீடிக்கும். அதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அளவை இறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. 

             இந்தக் கெடு வரும் ஜூலை 12-ம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடந்த அக்டோபர் 13-ம் தேதி 27 சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்தோம். மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இருப்பதால், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

              ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலம் நடத்தப்படாமல் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை கண்டறிவதுதான் எனவும், ஜாதி விவரங்களை தெரிவிப்பது கட்டாயமில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்தக் கணக்கெடுப்பால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.இந்தச் சூழலில் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டையும், மக்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

           கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ரூ. 10 கோடி வரைதான் செலவாகும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

         நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

            பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதன் மூலம், மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து தெரியவரும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.  

          மக்கள்தொகை கணக்கெடுக்கும் மாபெரும் பணியில் ஜாதி வாரியாகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும் கணக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  இந்த கணக்கெடுப்பு நடத்துவது முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்காக குறைந்த விலையிலான கையடக்க கம்ப்யூட்டர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

            மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இந்த கையடக்க கம்ப்யூட்டர் அளிக்கப்படும். இந்தக் கருவியை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அடையாள அட்டை வழங்கும் (யுஐடி) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்போது இந்த கணக்கெடுப்பு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைக் கண்டறிய உதவும்.  ஊரக மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு அமைச்சகங்களும் இந்திய பதிவாளர் துறையும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தும்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து  பாமக  நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: 

           நாட்டில் கடைசியாக 1931ம் ஆண்டு, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

            இந்நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கணக்கெடுப்பின் போது, பொதுமக்கள் விரும்பினால் மட்டும் ஜாதியை குறிப்பிடலாம் என அறிவித்துள்ளதை ஏற்க முடியாது. ஜாதி வாரியாக மக்கள் தொகையை அறியத்தான் கணக்கெடுப்பே நடத்தப்படுகிறது. அதற்கேற்ப தான் நலத்திட்டங்களையும் வகுக்க முடியும். எனவே, ஜாதியை குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட கீழ்தட்டு மக்களை மேம்படுத்துவதற்காக கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், பெயரளவில் நடத்தாமல், விரிவாக நடத்தினால் மட்டுமே உரிய பலன் கிடைக்கும். 

            ஜாதி வாரி கணக்கெடுப்பு முடிந்ததும், அதில் தொகுக்கப்பட்ட விவரங்களை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: பாமக வரவேற்ப்பு

          சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாமக வரவேற்கிறது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். 

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

            சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாமக வரவேற்கிறது. தமிழகத்தில் நலிந்த பிரிவினருக்கு அரசின் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் போதிய அளவில் கிடைக்க இந்த கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும்.  நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் மேம்பாட்டுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு, மாத வருமானம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர்வு, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு புதிதாக கல்வி உதவித் தொகை ஆகியவை வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் நலிந்த பிரிவு மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்று ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு - தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்!

            இந்திய அளவில் சாதி வாரிக் கணக்கெடுப்பு, 1951இலேயே இந்திய அரசினரால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். நடுவண் அரசிலும் மாகாண அல்லது மாநில அரசுகளிலும் அப்போது பார்ப்பனர் ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்ததால் அது புறக்கணிக்கப்பட்டது.

             1953இல் காகா கலேல்கர் தலைமையிலும், 01.01.1979இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையிலும் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குழுக்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அவ் இரண்டு குழுக்களும் 1931இல் எடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொருபத்தாண்டிலும் அதன் பிறகு ஏற்பட்டிருக்கக் கூடிய வளர்ச்சியைக் கணக்கிட்டு, அதன்படி பிற்படுத்தப்பட்டோரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தோராயமாக மேற்கொண்டனர்.
அதேபோல், மாநிலங்கள் அளவில் 1970க்குப் பிறகு அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் குழுக்களும், அதே அடிப்படையில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கை எடுத்தன. இப்போது, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதே, இந்தக் கோரிக்கை பலதரப்பிரிவினராலும் முன் வைக்கப்பட்டாலும், பார்ப்பன - மேல் சாதி மேலாதிக்க இந்திய அரசு அடாவடித்தனமாக மறுத்தே வந்தது.

                  பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவண் அரசு உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்ற பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பாயசத் என்கிற மேல்சாதிக்காரரர், “1931 கணக்கை வைத்து சாதிவாரிக்கணக்கை மதிப்பீடு செய்ததை ஏற்க முடியாது” என்று கூறிய பிறகு, எல்லோரும் அதிக விழிப்புணர்வு பெற்றனர். எல்லாச் சாதிச் சங்கத்தினரும், இட ஒதுக்கீட்டில் ஈடுபாடு கொண்ட எல்லாக் கட்சிகளும் இதில் மிகவும் ஆர்வம் காட்டினர்.

                அண்மையில், தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69ரூ இட ஒதுக்கீடு பற்றிய வழக்கை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், வரும் 2011 கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன் - தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் சேர்ந்து 69ரூ மக்கள் உள்ளனர் என்பதை எண்பிக்க வேண்டும் - அப்படி எண் பித்தால் 69ரூ நீடிக்கப்படலாம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. இது ஒரு நல்ல வாய்ப்பு.

                 இதற்கு முன்னரே தமிழ்நாட்டிலுள்ள எல்லாக்கட்சிகளும், சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று மனமாரக்கோரின. 2004 முதல் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - குறிப்பாகத் தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங், முந்தைய சட்ட அமைச்சர் பாரத்வாஜ், மற்றும் உள்ள அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் முதலான மேல் சாதியினரின் ஆதிக்க அரசு இக்கோரிக்கையைச் சட்டை செய்யவில்லை. ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சரும், மற்ற அரசியல் கட்சிகளும், சமூகச் சங்கங்களும், வைத்த கோரிக்கையை ஏற்பதுபோல் நடித்து, “2010 சூன் மாதத்துக்குள் மக்கள் தொகைக் கணக்கை எடுத்து முடித்த பிறகு, 2011 சூன் முதல் செப்டம்பருக்குள் தனியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வோம்” என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இது நனைத்துச் சுமக்கிற மடத்தனமான வேலையாகும்.

                 இப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது சமூகத்திலுள்ள எல்லாப் பிரிவு மக்களின் கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு வளர்ச்சி, வாழ்க்கை நுகர்வு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்று அனைத்துத் துறைகளின் வளர்ச்சி பற்றியும் உள் சாதி குறிப்பிடப்படாமல் எடுக்கப்படுகிற அனைத்து வாழ்க்கைக் கூறுகளையும் காட்டுகிற BIOMETRIC கணக்கெடுப்புக்கு மட்டும் ரூ. 2200 கோடிக்கு மேல் செலவாகும். இந்தக் கணக்குக்கு ஒவ்வொன்றுக்கும் உள்ள பத்தியுடன் “உள்சாதி” என்கிற ஒரு பத்தியும் இப்போதே இணைக்கப்பட்டிருந்தால் தான். ஒவ்வொரு உள்சாதியில் உள்ள உறுப்பினரின் எல்லாத்துறை வளர்ச்சி நிலை பற்றியும் அறிய முடியும். இது மிக மிகத் தேவை.

               அப்படிச் செய்வதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டு, வெறும் தலை எண்ணிக்கையை மட்டும் காட்டுகிற உள் சாதிவாரிக் கணக்கைப் பிறகு எடுப்போம் என்றும், அதற்குத் தனியாக மேலும் ரூ. 2000 கோடி செலவு செய்வோம் என்றும் இந்திய அரசு கூறுவது, சத்துள்ள கோதுமை அடை வேண்டும் என்று கோருவோருக்கு சாணி எரு முட்டை அடையைத் தருகிற ஏமாற்றே ஆகும். அப்படிப்பட்ட சாதிவாரிக்கணக்கு ஒவ்வொரு உள்சாதியினரின் எண்ணிக்கையை மட்டுமே காட்டும்; அந்தந்த உள் சாதியும் ஒவ்வொரு துறையிலும் பெற்றுள்ள வளர்ச்சியின் படி நிலை அளவைக் காட்டாது; பெற்றுள்ள பங்கின் அளவைக் குறிக்காது. அதை வைத்து எந்த உள் சாதியின் வளர்ச்சி நிலையையும் எவரும் அறிய முடியாது.

                இவ்வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு, 2008 முதல் இந்திய அளவிலும், தமிழ்நாட்டு அளவிலும் எடுத்துவரும் முயற்சி பெரிது. அவர் அண்மையில் தமிழக முதல்வரைக் கண்டு, தமிழ்நாட்டுமக்கள் தொகைக் கணக்கை உடனே மேற்கொள்ள வேண்டும் என 27 சாதிச் சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார். அதை மனங்கொண்டு, முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் உயர்நீதிபதி எம்.எல். சனார்த்தனத்தை அழைத்து இது பற்றிக் கலந்துரையாடியுள்ளார். இது நம்பிக்கை யூட்டுவதாக உள்ளது.

                    இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய அரசினர் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு என்று வைத்துள்ள பதிவுப்படிவத்தில் உள்ள எல்லா விவரம் காட்டும் பத்திகளையும் கொண்ட அதே போன்ற படிவத்தில் “உள் சாதி” என்கிற பத்தியையும் புதிதாகச் சேர்த்து, உடனடியாகத், “தமிழ்நாட்டுச் சாதிவாரிக் கணக்கெடுப்பைத்” தொடங்கிட ஆணையிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டிக் கொள்கிறோம். இந்த அரிய நல்ல பணியை அரசினர் நிறை வேற்றுவதற்குத் தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள். அரசு அலுவலர் பெருமக்கள் மற்றும் சமுதாய நலப்பணி ஆர்வலர்கள் மன முவந்து எல்லா வகைகளிலும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என வேண்டுகிறோம்.

                 இப்போது உள்ள தோராயக்கணக்குப்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 70%; பட்டியல் வகுப்பினர் 19%; பழங்குடியினர் 1%; உள்ளனர். இதன்படி மேல் சாதியினர் 10% ஆவர். இந்த 100 விழுக்காட்டு மக்களும் 400 உள் சாதிகளாக உள்ளனர். இந்த ஒவ்வொரு உள் சாதியும் ஒவ்வொரு துறையிலும் 2010 வரையில் பெற்றுள்ள படிநிலை வளர்ச்சி பற்றிய விவரம் இப்போது கட்டாயம் அறியப்பட வேண்டும். இது உடனடித் தேவை.


நன்றி :  கீற்று இணையத்தளம்

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் நிலை ஏமாற்றம் அளிக்கிறது- ராமதாஸ்



சென்னை:

               சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை எதையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

                  அனைத்து சமூக, பொருளாதார விவரங்களையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஓராண்டு காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, நான்கு மாதங்கள் முடிந்து விட்டன.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் நானும், நாற்பதுக்கும் மேற்பட்ட சமுதாயத் தலைவர்களும் முறையீடு செய்தோம். முதல்வர் எங்களிடம் உறுதியளித்தப்படி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவருடன் ஆலோசனை நடத்தினார். 

                 ஆலோசனை நடைபெற்று ஒரு மாதமாகிறது. எனினும், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. இது, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை. முதல்வர் கருணாநிதிக்கும் இதில் உடன்பாடு உள்ளது. எனினும், அதற்கான ஆணையைப் பிறப்பிக்க எது தடையாக உள்ளது என்பது புரியவில்லை. 

                2011 ஜூன் மாதத்தில் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு ஏன் தனியாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்கலாம்.மத்திய அரசின் கணக்கெடுப்பில் ஜாதிவாரியாக தலைகளின் கணக்கு மட்டும்தான் தெரியவரும். ஆனால், மாநிலத்தில் இடஒதுக்கீட்டு சலுகையைப் பெறும் வகுப்பினரை அளவிடும் வகையில், அனைத்து புள்ளி விவரங்களும் அடங்கிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவாகும்.

                    எனவே, இந்த இரண்டு கணக்கெடுப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள், உச்ச நீதிமன்றம் திருப்தியடையும் விதத்தில், தேவையான புள்ளி விவரங்களுடன் கூடிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், 69 சதவீத இடஒதுக்கீட்டுச் சட்டத்துக்கே ஆபத்து ஏற்படலாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றால், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் நமது இடஒதுக்கீட்டிற்கே வேட்டு வைத்து விடுவார்கள். 

                     எனவே தாமதம் இன்றி, அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, புதிய சட்டம் இயற்ற வழிவகுக்க வேண்டும் என்று அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேவைக்கு ஏற்ப இடஒதுக்கீடு: ராமதாஸ் கோரிக்கை

                  இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்து புதிய சட்டம் இயற்றவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

                  தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்கிற நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் இந்த இடஒதுக்கீட்டுச் சலுகையை மேலும் ஓராண்டு காலத்திற்கு மட்டும் நீட்டித்து கடந்த ஜுலை மாதத்தில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

                    அத்துடன் இந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெறும் வகுப்பினரை அளவிடக் கூடிய தெளிவான புள்ளி விவரங்களை தயாரித்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை மறுஆய்வு செய்யலாம் என்றும், தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டின் அளவை மேலும் அதிகரித்து புதிதாக சட்டம் இயற்றி கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

                      உச்சநீதிமன்றத்தின் இந்த அனுமதியின்படி நமது மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்வதற்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது. அதற்காக மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

                       ஆனால் இன்று வரையில் அத்தகைய ஆணை வெளியிடப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இடஒதுக்கீட்டின் எதிரிகள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அதனை எப்படியெல்லாம் முடக்கிப் போடலாம் என்று சிந்திப்பார்கள்.

                                  இந்த ஆபத்தை தடுத்திட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்; அதன் மூலம் மாநிலத்தில் இடஒதுக்கீடு சலுகைப் பெற தகுதி படைத்த வகுப்பினர் 69 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுடன் உணர்த்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நமது தேவைக்கேற்ப அதிகரித்து புதிதாக சட்டம் இயற்ற வேண்டும். இந்தப் பணியை போர்க்கால அடிப்படையில் செய்யத் தவறினால்  முதலுக்கே ஆபத்து' என்பதைப் போல இருக்கின்ற 69 விழுக்காடு சலுகைக்கே ஆபத்து வந்து விடும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

கூட்டணி பற்றி கலைஞரிடம் பேசவில்லை: ராமதாஸ்






                 கூட்டணி பற்றி முதல்வர் கருணாநிதியிடம் எதுவும் பேசவில்லை என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

                    பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். ராமதாசுடன் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் இச்சந்திப்பில் இடம் பெற்றிருந்தனர். இச் சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்

                     முதல்வர் கருணாநிதியுடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சாதிசாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, 27 சமுதாய தலைவர்களுடன் சந்தித்தோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், இதை தானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

                    மிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனிடம் இதுகுறித்து பேசி, நல்ல முடிவை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறத்தினேன். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தெரிவித்தார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு


சென்னை:
               ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.  தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  
அக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:  
             ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லாதது போல பா.ம.க.வினர் கற்பனை செய்து கொண்டு, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு, கிளர்ச்சி செய்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  இதில் எவ்வித கற்பனையும் இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. இதை நாங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறோம்.  
              திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியைப் போல, நானும் இந்த அரசை எப்போதும் போற்றி புகழ்ந்து கொண்டு மட்டும் இருக்க முடியாது. மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்களை பா.ம.க. தொடர்ந்து நடத்தும். அதைத்தான் முதல்வர் கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  ÷2011 பிப்ரவரியில் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தினால்தான், ஒவ்வொரு சமுதாயத்தின் சமூக, பொருளாதார பின்னணியோடு கூடிய விவரங்கள் கிடைக்கும். மாறாக, தனியாக நடத்தினால், ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று தலைகளைக் கணக்கெடுப்பது மட்டும்தான் நடக்கும். 
                   இதனால் எவ்வித பயனும் கிடைக்காது என்று ஏராளமான அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  எனவே, 2011 ஜூன் மாதம் ஜாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்பது கண்துடைப்பு. இது வெறும் நாடகம் என்றார் ராமதாஸ்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து அறிவிப்பு வெளியிடக் கோரி கலைஞரை சந்திப்போம்: ஜி.கே மணி

                   சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து அறிவிப்பு வெளியிடக் கோரி, ராமதாஸ் தலைமையில் முதல்வர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என, பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார். நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைப்பெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டார். 

பின்னர் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி

                   அக்டோபர் 2ஆம் தேதிக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் அக்டோபர் 11ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அனைத்து சமுதாய சங்கங்களின் தலைவர்களை ஒருங்கிணைத்து முதல்வர் கருணாநிதியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழைகள் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சிமெண்ட், ஜல்லி, கம்பி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: 

                  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

                   செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஏகாம்பரம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் வாசு, பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, நகரச் செயலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கோஷமிட்டனர். 

                     மதுராந்தகம் மதுராந்தகம் பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட செயலர் கங்காதரன் தலைமையில் பா.ம.க.,வினர் ஊர்வலமாக தேரடி தெரு, முருகன் கோவில் தெரு, மருத்துவமனை சாலை வழியாக சென்று தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் காஞ்சிபுரத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளூர் திருவள்ளூர் பஜார் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட செயலர் பாலயோகி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சீத்தாராமன், செல்வம், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து ஒன்றிய, நகர கிளை செயலர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மறியல்: ராமதாஸ்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் செவ்வாய்க்கிழமை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் நடத்திய ஆர்பாட்டம் 
சென்னை:

                 தமிழ்நாட்டில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் சாலை மறியல்  போராட்டம் நடத்துவோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, ராமதாஸ் பேசியது: 

                  தமிழகத்தில் அமலில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 40-க்கும் மேற்பட்ட சமுதாயத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 11-ல் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

                   ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார் ராமதாஸ். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, பொன்னுசாமி, வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தொடர் முழக்க போராட்டம்

சிதம்பரம்:

               சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

                   மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்றார், பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், கடலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் இரா.சிலம்புச்செல்வி, நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள், பால்ஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வ.அன்பழகன் நன்றி கூறினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி 28-ல் பாமக ஆர்ப்பாட்டம்: ஜி.கே. மணி

சென்னை,:
 
               ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி செப்டம்பர் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து வெள்ளிக்கிழமை பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கை:
 
               69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களின் தலைகளை எண்ணுவதாக அமையாமல், ஒவ்வொருவரின் எழுத்தறிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட சமூக, பொருளாதார விவரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ராவ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
                        ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி செப்டம்பர் 28-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே. மணி பங்கேற்கிறார்.

தனி இடஒதுக்கீட்டின் மூலமே சமூக மாற்றம்: ராமதாஸ்


கும்மிடிப்பூண்டி:
 
                 ஜாதி வாரியாக தனி இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலமே தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வு மேம்பட்டு சமூக மாற்றம் நிகழும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். கும்மிடிப்பூண்டியில் பாமக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை  தொடங்கி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. 
 
நிறைவு நாளில்  ராமதாஸ் பேசியது:
 
                   ஆறரை கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னிய இனமக்கள் மேம்பாடு அடையாமல் வாழ்ந்து வருகின்றனர். தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி வகை செய்யும். சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடுதான்.
 
                        வன்னியர்கள் மற்றும் தலித்துகள் இணைந்தால் தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால், திராவிடக் கட்சிகள் சூழ்ச்சி செய்து இவ்விரு இனத்தவரிடையே பிரிவினைகளை உருவாக்கி வருகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி, விவசாய முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, இளைஞர் மறுமலர்ச்சி, தமிழ் வளர்ச்சி போன்றவைகள் நிறைவேற்றப்படும். இந்தியாவிலேயே அதிகமான விதவைகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணமான டாஸ்மாக் கடைகள் பாமக ஆட்சிக்கு வந்தால் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார் ராமதாஸ்.
 
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 
 
                   மத்திய அமைச்சராக தான் பதவி வகித்த காலத்தில்  950 கோடி செலவில் திட்டமிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் "108' ஆம்புலன்ஸ் சேவை. ஐ.நா. சபை செயலாளர் பான்-கீ-மூனால் பாராட்டப்பட்ட திட்டம் இது.  பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் தமிழகத்தில் இது வரை 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 500 ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 50 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன என்றார். 
 
மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், 
 
                    அடுத்த தலைமுறையினர் வாழ்வில் மேம்பாடு அடையும் வண்ணம் அடித்தட்டு மக்களுக்காக போராடி வரும் கட்சி என பாமக-வை குறிப்பிட்டார்.முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு பேசுகையில், மத்திய அமைச்சராக இருந்தபோது, கும்மிடிப்பூண்டியில் சுமார்  60 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலத்திற்கான திட்டத்தையும், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர பகுதியான நெல்லூருக்கு கூடுதல் மின் ரயிலையும், அத்திப்பட்டில் இருந்து பெரியபாளையம் ஊத்துக்கோட்டை வழியாக புத்தூர் வரை சுமார்  400 கோடி செலவில் புதிய ரயில் பாதைக்கான திட்டத்தையும் நிறைவேற்றியதாக குறிப்பிட்டார். 
 
                            விழாவில் பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலர் க.ஏ.ரமேஷ் வரவேற்றார். திருத்தணி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கருணாநிதியை சந்திக்கிறார் ராமதாஸ்


ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துச் சமுதாய சங்கத் தலைவர்கள்
சென்னை:

              ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசவுள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து சமுதாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாதவ மகா சபை, கொங்கு நாடு முன்னேற்ற சங்கம், அகில இந்திய தேவர் பேரவை, தமிழ்நாடு நாடார் பேரவை,  நாயுடு மக்கள் சக்தி இயக்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், முத்தரையர் சங்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 

                   ஒரு மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு சலுகை பெற தகுதி படைத்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் மாநிலங்களுக்கு வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு மூலம் இந்த உரிமை மாநில அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டு அளவைத் தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

                    அந்தத் தீர்ப்பின்படி, தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுவிடக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதற்கிடையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், தனியாக நடத்துவது என்ற  முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக, பொருளாதார அந்தஸ்து குறித்த புள்ளி விவரங்களோடு கணக்கெடுப்பு நடத்தினால்தான் உரிய பலன் கிடைக்கும்.  எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

               மத்திய அரசுக்காக காத்திராமல்,  அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முழு விவரங்களோடு கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மாநில அரசு முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-க்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும். இல்லையெனில், டாக்டர் ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய சங்கங்களின் பிரதிநிதிகள் அக்டோபர் 11-ம் தேதி முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து,  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

முன்னதாக கூட்டத்தில் பா.ம.க.  ராமதாஸ் பேசியது: 

                     பிப்ரவரியில் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இல்லாமல், ஜூன் மாதத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறுவதில் சூழ்ச்சி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எந்தெந்த ஜாதியில் எத்தனை பேர் உள்ளனர் என்று வெறும் தலைகளை மட்டும் எண்ணும் கணக்கெடுப்பு அல்ல. அவ்வாறு நடத்துவதால் எந்தப் பலனும் ஏற்படாது. ஒவ்வொருவரின் சமூக, பொருளாதார நிலை குறித்த விவரங்களுடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றார். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, மத்திய முன்னாள் இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்