அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை: தமிழக அரசின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது , ராமதாஸ்


         பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 

          மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு, தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் கருத்து கூற விரும்பவில்லை என்றும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர்கள் மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

   இது தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், மரணத்தின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கும் 3 தமிழர்களையும் காப்பாற்றுவதில் முதல்வருக்கு அக்கறை இல்லை என்பதும், மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் என்பதும் அம்பலமாகியிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அத்துமீறல்: பாமக நிறுவனர் ராமதாஸ்கண்டனம்

சென்னை:

 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

           சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் திட்டமிட்டபடியே முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்தே சென்னை மாநகரத்திற்குட்பட்ட எல்லா வாக்குச் சாவடிகளிலும் குண்டர்களின் உதவியுடன் அ.தி.மு.க.வினர் கள்ளவாக்கு போட்டு வருகின்றனர்.

         சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் கந்தன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குகளை செலுத்தியுள்ளார்.  இதேபோல் சென்னை மாநகரின் எல்லா பகுதிகளிலும் அ.தி.மு.க.வைச்  சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ளவாக்குகளை செலுத்திவருகின்றனர். சைதாப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்களிக்க வரும் மக்களை அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று அங்குள்ள முகவர்கள் மிரட்டியுள்ளனர். சிலர் வாக்காளர்களின் கைகளைப் பற்றி அ.தி.மு.க. சின்னத்தில் வாக்களிக்க வைத்துள்ளனர்.

            வாக்குச் சாவடியிலிருந்த அதிகாரிகளோ, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களோ இதை கண்டுகொள்ளவில்லை. இந்த முறைகேடுகள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையர்  சோ.அய்யர், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாநகராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேடு செய்வார்கள் என்ற ஐயத்தில்தான் தேர்தலை முறையாக நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

            அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. சென்னையின் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் வாக்குப்பதிவு படம்பிடிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருப்பது உறுதியாகிறது. மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் நிலையில், மீதமுள்ள நேரத்திலாவது வாக்குப்பதிவு முறையாக நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையரும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் மீது நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.மக. வேட்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்: ஜி.கே.மணி வேண்டுகோள்

சேலம்:

        உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நேர்மையாக சேவை செய்ய பயிற்சியளித்து அனுப்புவோம். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று மாநில தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 
இது தொடர்பாக மாநில தலைவர் ஜி.கே.மணி  வெளியிட்டு உள்ள அறிக்கை:

           தற்போது நடைபெற உள்ள
தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல் அல்ல. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேர்தலும் அல்ல. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை, அன்றாட பிரச்சினைகளை நிறைவேறுவதற்கு உரிய தேர்தல். மத்திய ஆட்சி, மாநில ஆட்சி ஆகியவற்றை போல் உள்ளாட்சி ஒரு அரசாங்க தகுதியுடன் கூடுதல் அதிகாரம், தேவையான நிதி ஆதாரங்களுடன் செயல்படும் நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும். 
            மத்திய அரசு ஒரு அடுக்கு, மாநில அரசு ஒரு அடுக்கு, உள்ளாட்சி அரசு ஒரு அடுக்கு என்ற மூன்று அடுக்கு அரசு என்ற நிலை உருவானால்தான் உள்ளாட்சியை நல்லாட்சியாக அதிக அதிகாரங்களுடன் போதுமான அளவு நிதி ஆதாரங்களுடன் நிர்வாகம் செய்ய முடியும். அதற்காக குரல் கொடுத்து போராடி வரும் கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. உள்ளாட்சியில் வெற்றி பெறும் பா.ம.க. பிரதிநிதிகளுக்கு தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் தலைமைப்பண்புகள், ஆளுமை பண்புகள், குழு இயக்கவியல், சாதனையாளர் என்பது போன்ற தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்படும். 
           சுருக்கமாக சொன்னால் இது என் நாடு, என் நாட்டு மக்கள், என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் என்னால் இயன்ற அளவு சேவை நோக்கத்துடன், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று பயிற்சி கொடுத்து பொறுப்பேற்க செய்வோம்.   பா.ம.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் உண்மையாகவும், நேர்மையாகவும் சேவை செய்யவும் பயிற்சியளித்து அனுப்புவோம். எனவே கட்சி வித்தியாசம் பாராமல், உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள்.
             ஒரு மாற்றத்தை கொடுங்கள்.  விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள், தொழில்முனைவோர் என எல்லா தரப்பினரும் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

          மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சியில் பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பினை தாருங்கள் என அனைத்து வாக்காளர்களையும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.   

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை:

           உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிகையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக வியாழக்கிழமை  பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: 

             உள்ளாட்சித் தேர்தல்களை துணை ராணுவப் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. இது பற்றிய முடிவை மாநிலத் தேர்தல் ஆணையம் இதுவரை எடுக்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 12 மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் பார்வையாளர்களாக அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு தேர்தல் பார்வையாளர்கூட வெளி மாநிலத்திலிருந்து வரவில்லை. 

             உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. எனவே, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வாக்கு எண்ணிக்கையை விடியோ பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்வையாளர்களாக அமர்த்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்


சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
 

             மனித நாகரீகத்திற்கு சற்றும் ஒவ்வாத வகையில் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடியின மக்கள் மீது 1992-ஆம் ஆண்டு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு நடத்திய வன்கொடுமைகளுக்கு 19 ஆண்டுகளுக்குப் பின் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 215 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

             தாமதமாக நீதி கிடைத்தாலும் பழங்குடியின மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அரசு அதிகாரிகள் என்பதாலும், அவர்களின் உயர் அதிகாரிகளுக்கும் இது தொடர்பு இருந்தது என்பதாலும், இந்த வழக்கு விசாரணையை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

             ஆனால் மலைவாழ் மக்கள் சங்கத்தினரும், நடுவண் புலனாய்வுப் பிரிவினரும் இந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தந்துள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. எனினும், வாச்சாத்தியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மனக்குறை அளிக்கிறது.

            வாச்சாத்தி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதித்துறை உயர் அமைப்புகள் ஏற்கனவே ஆணையிட்டுள்ளன. வாச்சாத்தியில் உள்ள 655 பேர் அதிகாரிகளின் அத்துமீறலால் பல்வேறு கொடுமைகளுக்குள்ளானார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆடு, மாடுகள், கோழிகள் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டன.

           இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு இரண்டு கட்டமாக ரூ.61.96 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கியுள்ளது. 655 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 349 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.  வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு மிகக்குறைந்த இழப்பீடு வழங்குவது மிகப்பெரிய அநீதியாகும்.  
 
           எனவே வாச்சாத்தியில் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஒவ்வொருவருக்கும் முறையே ரூ.2 லட்சமும், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 
 

இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி:பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

             இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த பயிற்சியை தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு பல்வேறு உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

             50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்ததற்காக உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கண் டிக்கத்தக்கது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை அரசுக்கு இந்தியா உதவிகளை வாரி வழங்கி கொண்டிருக்கிறது. காங்கேசன் துறைமுகத்தை பல நூறுகோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வரும் இந்திய அரசு, அடுத்தக் கட்டமாக இலங்கை கடற்படைக்கு பயிற்சியும், பிற உதவிகளையும் வழங்க இருக்கிறது. இலங்கையுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே வலியுறுத்தி வரும் நிலையில் அந்நாட்டு கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது சரியல்ல.

               அப்பாவி தமிழ் மீனவர்களை கொன்று குவித்ததற்கு பரிசாகத்தான் இந்த பயிற்சியை இலங்கைக்கு இந்தியா வழங்குகிறதா என்ற வினா தமிழகத்தில் உள்ள தமிழர்களின் மனதில் எழுந்திருக்கிறது. எனவே தமிழர்களின் உணர்வுகளை மதித்து இலங்கை கடற்படையுடனான கூட்டுப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும். இலங்கையுடனான ராணுவ உறவுகளை முறித்துக் கொண்டு அந்நாட்டு அரசுக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி செப்டம்பர் 19ல் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை:

பாமக தலைவர் கோ. க. மணி வெளியிட்ட அறிக்கை:

            கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

பரமக்குடி துப்பாக்கி சூடு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

          துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

            காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டு, பின்னர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்பது கண்டனத்துக்குரியது. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யாமல் தங்கள் தவறை மறைக்க அப்பாவிகளைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

புகைப் பழக்கத்தினால் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர்: அன்புமணி ராமதாஸ்

சென்னை:
 
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

               புகை பிடித்தல் ஒரு கொடிய உயிர்க்கொல்லும் பழக்கம். இந்திய நாடு முழுவதும் ஆண்டுக்கு பத்து லட்சம் பேர் புகையிலைத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உரிய வயதாகும் முன்பே இறக்கின்றனர். அதாவது ஒவ் வொரு நாளும் 2500 பேருக்கு மேல் சாகிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத் தால் ஏராளமான இளைஞர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

             இந்நிலையில் இலவச பரிசுடன் சிகரெட் விற்பனை செய்யப்படும் அவலம் சென்னையில் நடக்கிறது. இந்த சட்ட விரோத செயலை உடனடியாக தடுத்து நிறுத்தி, குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு தண்டிக்க வேண்டும். சுதந்திர தினத்தினை முன்னிட்டு ரெட் அண்டு வொயிட்  பாக்கெட் சிகரெட் உடனும் ஒரு லைட்டர் இலவசமாகப் பெறுங்கள் எனும் விளம்பரம் சென்னை நகரம் முழுவதிலும் ஏராளமான கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ரெட் அண்டு வொயிட் சிகரெட் விற்கப்படும் கடைகள் அனைத்திலும் ரெட் அண்டு வொயிட் சிகரெட் பாக்கெட்டுடன், ஒரு சிகரெட் லைட்டரும் இலவச இணைப்பாக கொடுக் கப்படுகிறது. இதற்காக சிகரெட் பாக்கெட்டுடன் லைட்டர் கொண்ட சிறப்பு அன்பளிப்பு பாக்கெட் டினை வெளியிட்டு விற்று வருகின்றனர்.

                புகையிலை பொருள் நிறுவனங்கள் எதுவும் அவற்றுடன் இலவச இணைப்புகள் எதையும் அளிக்கக் கூடாது, அவ்வாறு இலவச இணைப்பு அளிப்பதாக விளம்பரமும் செய்யக்கூடாது என இந்திய புகையிலைக் கட்டுப்பாடு சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல கடைகளில் இவ்வாறு சட்ட விரோத விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிகரெட்டுடன் இலவச இணைப்பும் அளிக்கப்படுகிறது.

                இந்த குற்றங்களுக்கு 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்க புகையிலைக் கட்டுப்பாடு சட்டத்தில் இடமிருந்தும் ஒருவர் மீது கூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் சுதந்திர தினத்தை அவமதிப்பது இந்திய தேசிய நன்மதிப் பிற்கு இழுக்கு ஏற்படாமல் தடுக்கும் சட்டத்தின்படியும் தண்டனைக்குரிய குற்றமாகும்  இந்த சட்டத்திற்கு எதிராக இந்திய சுதந்திர நாளை இழிவுபடுத்தும் வகையில் இளைஞர்களை கொலை செய்யும் ஒரு பொருளை சுதந்திர தினம் அன்று முதல் சுதந்திரத்தின் சுவை என விளம்பரம் செய்கின்றனர்.

          இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படு வதாகவும் சிகரெட் நிறு வனங்கள் கூறுகின்றன. ஆந்திர மாநிலத்துக்கு அடுத்த படியாக நாட்டிலேயே அதிக சிகரெட் விற்கும் 2-வது மாநிலம் என்கிற அவப்பெயரை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்தியாவில் விற்கும் மொத்த சிகரெட்டில் 10 சதவீதம் தமிழ்நாட்டில் விற்பதாக கூறப்படுகிறது.

              இத்தகைய விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துவதுடன் இலவச இணைப்புடன் சிகரெட் விற்பனை தடுத்து நிறுத்த வேண்டும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனை தேதி அறிவிப்பு : மூவரையும் காப்பாற்ற ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை:
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

              ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததற்கான அதிகாரப்பூர்வமான ஆணை வேலூர் சிறை நிர்வாகத்திற்கு வந்திருக்கிறது.

               இதைத் தொடர்ந்து அடுத்த 7 நாட்களில் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது மனிதாபிமானமுள்ள அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தடா சட்ட விதிகளுக்கு முரணாக 19 வயதிலேயே கைது செய்யப்பட்டவர். தடா சட்ட விதிகளின்படி சி.பி.ஐ.-யால் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

              முருகன், சாந்தன் ஆகியோருக்கும் இதே முறையில்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தனிமை சிறை கொட்டடியில் கொடுமையை அனுபவித்துள்ளனர்.  அவர்கள் தாக்கல் செய்த கருணை மனு மீது 11 ஆண்டுகள் கழித்து குடியரசு தலைவர் முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே தூக்கு தண்டனையைவிட மிகக் கொடுமையான தனிமை சிறை தண்டனையை அனுபவித்துவிட்ட 3 பேருக்கும் மீண்டும் ஒரு தண்டனை வழங்குவது நீதியாக இருக்காது.

             ஒருவரின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்யப்பட்டால், அவருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எத்தனையோ தீர்ப்புகளை வழங்கியுள்ளது.    பஞ்சாப் மாநிலத்தின் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவீந்தர் சிங்பால் புல்லார் என்பவரின் கருணை மனு மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 23-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது சரியல்ல என்றும், இதை அடிப்படையாக வைத்து அவரது தண்டனையை குறைப்பது குறித்த கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

             உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் நீதி வழங்குவதற்கு பொருந்தும்.  இன்னொருபுறம் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், மாநாடு, மனிதசங்கிலி என பல்வேறு மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

                நாகரிகமான சமுதாயத்தில் தூக்கு தண்டனை என்பது பெரும் களங்கமாக இருக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இம்மூவரும் தண்டிக்கப்பட்ட ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனே, இந்தியாவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.    எந்த நிமிடமும் உயிர் பறிக்கப்படுமோ என்ற வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் 3 பேரையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக அரசுக்கு இருக்கும் நிருவாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களின் தூக்கு தண்டனையை குறைப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் முடியும்.

               எனவே இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காக தமிழகச் சட்டப்பேரவையின் தீர்மானம் நிறைவேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இளம் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு: பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு




சென்னை:
          பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
           2013 -ம் கல்வியாண்டு முதல் இளம் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உயர் கல்வி கனவுகளைப் பொசுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதை கடுமையாக கண்டிக்கிறேன்.
              பொருளாதாரத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துவிட்டதாக மத்திய அரசு மார் தட்டிக் கொண்டபோதிலும், உயர் கல்வியில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. உலகின் மிகச் சிறிய நாடுகளில் எல்லாம் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் கூடுதலாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை வெறும் 12.5 சதவீதமாகவே உள்ளது.அதாவது இந்தியாவில் தொடக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் 87.5 சதவீதம் மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதில்லை. 
               இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில்சிபல் பதவியேற்ற நாளிலிருந்தே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்று சபதம் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தமது அதிகார வரம்பை மீறி பரிந்துரைத்த கபில்சிபல் அடுத்தகட்டமாக தொழில்நுட்ப படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறார். இது போதாது என்று இளநிலை படிப்புகளுக்கும் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வரப்படும் என்று அறிவித்து அடித்தட்டு மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். 
               சமூக நீதியில் அக்கறை கொண்ட எவரும் இந்த முயற்சிகளை அனுமதிக்க மாட்டார்கள்.எனவே பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும்.அனைத்து படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பதன் மூலம் மாநில அரசுகளின் கல்வி உரிமையை கபில்சிபல் பறித்து வருகிறார். இதே நிலை நீடித்தால், கல்வித்துறையையே மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலில் சேர்த்துவிடுவார். எனவே, கபில்சிபலின் இந்த முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசும் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தால் பயன் ஏதும் இல்லை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை,:
 
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறி இருப்பது:-
 
          சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை முதல்கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அது 300 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                 சென்னை மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்க வாய்ப்பில்லாத இத்திட்டத்தை தமிழக அரசு கெளரவம் பார்க்காமல் கைவிட வேண்டும். உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 60 இடங்களில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன. இவற்றில் 48 திட்டங்கள் 3 அல்லது 4 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே உள்ளன.  உலகில் உள்ள மோனோ ரயில் திட்டங்களின் ஒட்டுமொத்த நீளத்தையும் கூட்டினால் அது வெறும் 400 கிலோமீட்டர் மட்டுமே வருகிறது. உலக நிலவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழக அரசு சென்னையில் மட்டும் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் அமைக்கப் போவதாகக் கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது.  இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மத்திய மாவட்ட பா.ம.க.,தலைவர் தமிழ்நேசன் நீக்கம்: ஜி.கே.மணிஅறிவிப்பு

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

             பா.ம.க.,வின் தஞ்சை மத்திய மாவட்ட தலைவர் தமிழ்நேசன், கட்சி கொள்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, சுயநல நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து இன்று (நேற்று) முதல் நீக்கப்படுகிறார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

        ''சமச்சீரகல்வியஅமல்படுத்வேண்டுமஎன்றஉச்ச நீதிமன்றமதீர்ப்பளித்திருப்பதசமூநீதிக்ககிடைத்வெற்றி'' எ‌ன்று ா.ம.நிறுவனரராமதாஸகூறியுள்ளார்.
 

இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல் இதனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பா.ம.க நிறுவனர் ராமதா‌‌ஸ், 


        சமச்சீரகல்விததிட்டத்தாலமாணவர்களுக்கஏற்படுமபயன்களகுறித்த 25 அம்சங்களஆராய்ந்தஇந்தீர்ப்பஉச்ச நீதிமன்றமவழங்கியுள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். இந்தததீர்ப்பின்படி 10 நாட்களுக்குளசமச்சீரகல்விததிட்டத்தஅமல்படுத்வேண்டுமஎன்று‌ம் ராமதாஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் வரவேற்பு: பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

           இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

             இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.

            இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டுடு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.

            இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும், அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒருமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்ப்பட்டனர்.

          ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாற்றப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விவசாய நில‌ங்க‌ளி‌ல் ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ம் அமை‌க்க தடை: பா.ம.க. நிறுவனர் ராமதா‌ஸ் கோரிக்கை

       மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு வரவேற்பு தெரிவி‌த்து‌ள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

            அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கடந்த 5 ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். அதிலும் குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் மறைமுகமான நில வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்தும், இதற்காக ஏழை, எளிய உழவர்களின் வாழ்வாதாரமான நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.


           அரசின் நிலம் எடுப்பு கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் சட்டம் திருத்தப்படும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமை‌ச்ச‌ர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். அதற்கான வரைவு சட்டத்தையும் தயாரித்து அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எக்காரணத்தை முன்னிட்டும் பாசன வசதி பெறும் நிலங்களோ அல்லது பலவகையான பயிர்கள் விளையும் நிலங்களோ கையகப்படுத்தப்படாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


               
            தனியார் நிறுவனங்களுக்காக அரசே நிலத்தை கையகப்படுத்தி தராது என்றும், அரசின் திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், அதனால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களில் 80 சதவீதத்தினரின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும் வரைவு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பா.ம.க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இதை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன்.



            தவிர்க்க முடியாத அவசர திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது, நகர்ப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 2 மடங்காகும், கிராமப்புறங்களாக இருந்தால் சந்தை மதிப்பைவிட 6 மடங்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று வரைவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட 10 மடங்கு கூடுதல் விலை தரவேண்டும். அதுமட்டுமின்றி, நிலம் தருவோரின் குடும்பங்களுக்கு அவர்களது நிலத்தில் தொடங்கப்படும் நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும். லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.

               சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்துவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்தான் பாதிக்கப்படுகிறதே தவிர, எந்த வகையிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. இதை உணர்ந்து விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று ராமதா‌ஸ் வலியுறுத்‌தியு‌ள்ளா‌ர்.

பாமக சார்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி அகஸ்ட் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
             தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்ததும் போராடியதும் பாமகதான். பாமகவின் முயற்சியால்தான் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சமச்சீர்க் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர்க் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பெற்றோரும் மாணவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
            ஆனால், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தாததுடன் புத்தகங்களும் வழங்கப்படாததால் கடந்த 2 மாதங்களாக வகுப்பறைகளில் பாடங்கள் நடத்தப்படவில்லை. பருவத்தேர்வும் நடைபெறவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் காலாண்டு தேர்வு நடத்தப்படவேண்டும். ஆனால், பாடங்கள் நடத்தப்படாததால் மாணவ, மாணவியர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
            ஆசிரியர்களிடையேயும் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கல்வித்துறையில் இப்படிப்பட்டதொருநிலை இதுவரை ஏற்பட்டதில்லை. தமிழகம் முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
 
           எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பாகவும், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் வரும் 2.8.2011 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்திய தூதரகம் மூலமாக ஓமனில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

          ஓமனில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

          கொரியா நாட்டுக்குச் சொந்தமான ஓஷன் ஸ்டார் என்ற கப்பல் பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து ஓமனுக்கு அரிசி ஏற்றிச் சென்றபோது, ஓமன் கடல் பகுதியில் புயலில் சிக்கி கடந்த மாதம் 26ஆம் தேதி மூழ்கிவிட்டது. அக்கப்பலில் இருந்த 10 பணியாளர்களில் 4 பேர் கடலில் குதித்து தப்ப முயன்றபோது அவர்களை துபாய் நாட்டுக் கப்பல் மீட்டது. அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர்.

           மீதமுள்ள 6 பேரையும் ஓமன் நாட்டுக் கடற்படையினர் மீட்டு தங்களது காவலில் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கனராஜ் சேவியர், ஸ்ரீதர் சகாய ராஜ் ஆகிய இருவர் உள்ளிட்ட 4 இந்தியர்களும் அடக்கம்.

          கடந்த 10 நாட்களாக ஓமன் நாட்டு கடற்படையினரின் காவலில் உள்ள அவர்களை மீட்டுத்தரும்படி உறவினர்கள் முறையீடு செய்தும், இன்றுவரை அவர்ள் மீட்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசும், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும் தலையிட்டு ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 4 இந்தியர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கை உள்ளாட்சி தேர்தலில் 18 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி, தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ்

           இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

              இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இலங்கை படையினர் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர் - ஆளும் கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது.
                
               இவற்றையெல்லாம் மீறி வடக்கு மாநிலத்தில் மொத்தமள்ள 20 உள்ளாட்சி அமைப்புகளில் 18ஐ தமிழ் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, பதிவான வாக்குகளில் 75 விழுக்காட்டிற்கும் அதிக வாக்குகளை அக்கூட்டமைப்பு பெற்றுள்ளது. இதன்மூலம் ராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையும், தங்களுக்கென தனித் தமிழ் தலைமை தேவை என்பதையும் ஈழத்தமிழர்கள் உணர்த்தியிருக்கின்றனர். இதை தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான கருத்து கணிப்பு முடிவாகவே உலக நாடுகள் கருத வேண்டும்.

              இலங்கையில் சிங்களர்கள் வாழும் பகுதிகளை பொறுத்தவரை தமிழர்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ராஜபக்சே கட்சிதான் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை உணர்ந்து, தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்து, தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

              இதற்காக ஈழத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகியவற்றிற்கு அடுத்தப்படியாக உலகின் 194ஆவது நாடாக தமிழ் ஈழத்தை ஆறிவிக்க ஐ.நா. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

              இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இலங்கைக்கு வழங்கப்பட இருந்த ரூ.65 கோடி நிதி உதவியையும் அமெரிக்க அரசு ரத்து செய்திருக்கிறது.

           இலங்கைப் போரில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறை மனநிம்மதி அளிக்கிறது. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு கவலையும், வேதனையும் அளிக்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

              இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மத்திய அரசு தவறிவிட்டது. மாறாக இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை பலநூறு கோடி ரூபாய் செலவில் சீரமைத்து தர இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அத்துடன் நிற்காமல் போர்க் குற்றவாளிகள் என்று அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய இலங்கை ராணுவ அதிகாரிகளை தமிழகத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கிறது.

          இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த பயிற்சி இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களிலாவது இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை கைவிட வேண்டும்.

           ஈழத் தமிழர்களின் நலனை பாதுகாப்பதில் அமெரிக்காவை விட இந்தியாவிற்குதான் அதிக பொறுப்பு உள்ளது. இலங்கையில் போர்க் குற்றங்கள் நடைபெற்றது உண்மைதான் என ஐ.நா. வல்லுனர் குழு அறிக்கையில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா இனியும் காத்திருக்காமல் இலங்கை அரசுக்கு எதிராக பன்னாட்டு விசாரணை நடத்தவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             இந்த விசாரணை முடியும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதார தடையால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய நிதியைக் கொண்டு 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.