தி.திருமால்வளவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.திருமால்வளவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பண்ருட்டியில் பா.ம.க.சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் ராமதாஸ்அஞ்சலி


பண்ருட்டி:

            இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

           பாமக சார்பில் இட ஒதுக்கீடு வேண்டி 1987 செப்டம்பர் மாதம் தொடர் சாலை மறியல் நடைபெற்றது. செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற சாலை மறியலின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிர் இழந்தனர். 

              கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுதொண்டமாதேவியை சேர்ந்த தேசிங்கு உயிரிழந்தார். இவரின் நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநிலத் தலைவர் கோ.க.மணி, முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலர் தி.திருமால்வளவன், வன்னிய சங்கத் தலைவர் குரு, சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடலூர் ஒன்றிய பா.ம.க.பொதுக்குழுக் கூட்டம்: மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன் சிறப்புரை

நெல்லிக்குப்பம் : 

            நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் வெள்ளக்கரையில் நடந்தது. தணிகாசலம் தலைமை தாங்கினார். சிவகாசி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன், சண்முகம், அமிர்தலிங்கம், பஞ்சமூர்த்தி சிறப்புரை ஆற்றினர். நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குக் கடுமையாக உழைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

திட்டக்குடி : 

             இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக தர நடவடிக்கை வேண்டும் என பா.ம.க., வலியுறுத்தியுள்ளது. 

               பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலர் திருமால்வளவன், தேர்தல் பணிக்குழு தலைவர் தனபால், வன்னியர் சங்க துணைத் தலைவர் மோகன், திருஞானம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் தங்கவேல் வரவேற்றார். 

        கூட்டத்தில் அம்பிகா சர்க்கரை ஆலை 2011ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை கால தாமதம் செய்யாமல் உடனே வழங்க கேட்டுக் கொள்வது, 

              நடப்பாண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு 3ஆயிரம் ரூபாய் வழங்க கேட்பது. 

           ராஜிவ் கொலை வழக்கில் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

விருத்தாசலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்

விருத்தாசலம் : 

             மங்கலம்பேட்டை அரசு மகளிர் விடுதி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.

             விருத்தாசலத்தில் பா.ம.க., ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாநில சொத்து பாதுகாப்பு குழு செயலர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலர் திருமால்வளவன், மாவட்டச் செயலர் செல்வராசு, திருஞானம், ஒன்றிய செயலர் ராஜவேல் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் வெங்கடேசன் வரவேற்றார். 

            கூட்டத்தில் அம்பிகா மற்றும் ஆரூரான் சர்க்கரை ஆலைகள் 2011ம் ஆண்டிற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை காலதாமதப்படுத்தாமல் உடனே வழங்க கேட்டு கொள்வது. 

           எறுமனூர் - மங்கலம்பேட்டை வரை தார் சாலையை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலைத் துறையை கேட்டுக் கொள்வது. 

             மங்கலம்பேட்டை அரசு மகளிர் விடுதி அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

                ஒன்றியத் தலைவர்கள் பாலமுருகன், பூமாலை, மாவட்ட பொருளாளர் பவுனாம்பாள், கலியபெருமாள், குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் ஆர்வம்

சேத்தியாத்தோப்பு : 

              கடலூர் மாவட்டம் புவனகிரி  சட்டமன்றத் தொகுதியில்  பா.ம.க., போட்டியிட வேண்டும் என    பா.ம.க. தொண்டர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  பா.ம.க.,வில் சீட் பெற கட்சியின் நிர்வாகிகள் மத்தியில்  மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய சட்டசபை தொகுதி புவனகிரி. கடந்த லோக்சபா தேர்தலில் இப்பகுதிகளில் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி கூடுதல் வாக்குகளை பெற்றார்.  கடந்த ஒரு ஆண்டாக பா.ம.க வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வந்தது. 

                 இந்நிலையில் தி.மு.க., கூட்டணியில் 31 தொகுதிகளை பெற்றுள்ள பா.ம.க.நிர்வாகிகள் புவனகிரி தொகுதியில்  போட்டியிட  ஆர்வம் கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் தோல்வியடைந்த தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாவட்டச் செயலர்கள் முதல் ஒன்றிய செயலர்கள் வரை 25க்கும் மேற்பட்டோர் வன்னியர் சங்கத் தலைவர் குரு, வேல்முருகன் எம்.எல்.ஏ., மாநிலத் தலைவர் மணி ஆகியோர் மூலம் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர் 

                 இவர்கள் மட்டுமின்றி துணை பொதுச்செயலர் திருமால்வளவன், மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், கடந்த 2001 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அறிவுச்செல்வன்  ஆகியோரும்   போட்டியிட விருப்பம் கொண்டுள்ளனர்.

பாமக ஆட்சிக்கு வந்தால் அம்மா பெயர் முதல் எழுத்தாகவும், அப்பா பெயர் இரண்டாவதாகவும் போட சட்டம்: ராமதாஸ்

பயிற்சிக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் (இடமிருந்து 2-வது). (வலது படம்) கூட்டத்தில் பங்கேற்றோர்.
   
பண்ருட்டி:

             கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். பா.ம.க.வின் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.  
            தொகுதி பாட்டாளி இளம்பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் தலைமையில் பேர்பெரியான்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது.  

               நாட்டின் விலைமதிக்க முடியாத சக்திகள் இளைஞர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பா.ம.க. இப் பயிற்சிக் கூட்டத்தை நடத்துகிறது. வேறு எந்தக் கட்சிகளும் இதுபோல் கூட்டத்தை நடத்துவதில்லை.  தமிழகத்தில் சினிமா மோகம், இலவசம், சாராயப் புரட்சிதான் நடக்கிறது. மத்திய அமைச்சராக இருந்தபோது உயர்ந்த விருதுகளை பெற்று நமது சமுதாயத்துக்கு பெருமையை சேர்த்துள்ளேன். அமெரிக்காவில் 911 என்ற ஆம்புலன்ஸ் சேவையை பார்த்துதான் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தேன். 

            மேலும் பல்வேறு நல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளேன்.  தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும்போது இடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு தான். இதையெல்லாம் எண்ணிப்பார்த்து இளைஞர்களும், இளம்பெண்களும் பாடுபட வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பாமக தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.  
  
இக் கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியது:  

            பாமக ஆட்சிக்கு வந்தால் அம்மா பெயர் முதல் எழுத்தாகவும், அப்பா பெயர் இரண்டாவதாகவும் போட சட்டம் கொண்டுவரப்படும்.  தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி நெய்வேலி தொகுதி என கூறவேண்டும். 5 பேர் முதல்வராகியே தீருவோம் என கூறுகின்றனர். இவர்கள் கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு செல்ல நினைக்கின்றனர். பெண்களுக்கு சம உரிமை, வாய்ப்பு கொடுத்து சமுதாயத்தை உயர்த்துவோம், அனைவருக்கும் சமச்சீர்க் கல்வி, வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார்.  

             முன்னதாக கூட்டத்தில் கலந்துக்கொண்ட இளம் பெண்கள், இளைஞர்கள் பேசினர். அன்புமணி ராமதாஸ், உறுதிமொழி படிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.   பயிற்சிக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கோ.க.மணி, அமைப்புச் செயலர் தி.வேல்முருகன், சொத்துப் பாதுகாப்பு குழுத் தலைவர் ஆர்.கோவிந்தசாமி, மாவட்டச் செயலர் அ.தர்மலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஒன்றியச் செயலர் டி.சி.முருகன் நன்றி கூறினார்.  

நெய்வேலியில்...  

            பின்னர் பாமக சார்பில் இளம் பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது:  வன்னியர்களுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கும் இல்லை. வன்னியர்களுக்கு தகுதி இல்லையென்றால் வேறுயாருக்கும் தகுதி கிடையாது. கட்டி வா என்றால் வெட்டிக் கொண்டு வரும் சமுதாயம் நம் சமுதாயம்.  

              அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். பாமக தலைமையில் ஆட்சி அமையும்போது, அம்பானி வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற கல்வி நம்மை போன்ற ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்கச் செய்வோம்.   

                தனியாக டியூசன் எடுப்பவர்களை சிறையில் அடைப்போம். வீட்டுப் பாடம் ரத்து செய்யப்படும், தினமும் 2 மணி நேரம் விளையாட்டு. இதுபோன்ற சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.  பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் ஒருவர் கூட உயர் பதவியில் இல்லை. இந்நிறுவனத்தின் தலைவராக ஒரு வன்னியர் வரவேண்டும் அதற்கு பா.ம.க. பாடுபடும். நெய்வேலி தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்டாலும் படுத்துக் கொண்டே வெற்றிபெறுவோம் என்றார் ராமதாஸ்.

சிதம்பரம் நகர பா.ம.க பொதுக்குழு கூட்டம்

சிதம்பரம் : 

           சிதம்பரம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம்  நடந்தது. நகர செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், தேவதாஸ் படையாண்டவர், வேணுபவனேஸ்வரன், சிலம்புச்செல்வி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில்  சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிளைக் கூட்டங்களை நடத்தி, வரும் சட்டசபை தேர்தலில் தனித்தன்மையை நிரூபிப்பது, பா.ம..க.,வை குறி வைத்து தாக்கும் போலீசாரை கண்டிப்பது.  முன்னால் அமைச்சர் அன்புமணி தலைமையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Halloween Comments - http://www.halloweentext.com






கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க பாமக கோரிக்கை

கடலூர்;

                கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட பாமக மகளிரணி கோரிக்கை விடுத்துள்ளது.÷பாமக மகளிரணி தேர்தல் சிறப்புக் கூட்டம் கடலூரில் வியாழக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                 மழைக்காலம் தொடங்கி விட்டதால், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேணடும். கடலூர்  மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சுரங்கப் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, விருத்தாசலம் தொகுதிகளில் மகளிரணியை சிறப்பாக செயல்படவைக்க அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சென்று அணி திரட்டுவது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                 கூட்டத்துக்கு மகளிரணி மாநில துணைப் பொதுச் செயலர் சு.அமராவதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செüபாக்கியம், செயலர் உஷாராணி மற்றும் நிர்வாகிகள் தானாயி அம்மாள், தையல்நாயகி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவசுந்தரி வரவேற்றார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன்,  மாவட்டச் செயலர்கள் அ.தர்மலிங்கம், ரா.பஞ்சமூர்த்தி, அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன், கடலூர் நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர். லதா நன்றி கூறினார்.

கடலூரில் கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ் வசதி: பாமக மாணவர் சங்கம் கோரிக்கை


கடலூர்:

              கடலூரில் கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பாமக கிழக்கு மாவட்ட மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                   கடலூர் கல்லூரிகளுக்கு கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் நகரப் பஸ்களை இயக்க வேண்டும். கடலூர்- குறிஞ்சிப்பாடி, கடலூர்- பண்ருட்டி இடையே மகளிருக்கு மட்டும் தனிப் பஸ்களை இயக்க வேண்டும். பலமுறை இக்கோரிக்கை முன்வைத்தும் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து விரைவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                    கூட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பா.அருள்பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜ்குமார் நாராயணன் வரவேற்றார். மாநில மாணவர் சங்கச் செயலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். பாமக மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

கடலூர் அருகே பாமக கொடிக் கம்பங்கள் சேதம்: ஆட்சியர் தலைமையில் அமைதிப்பேச்சு

கடலூர்:

                 கடலூர் அருகே பாமக கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, இரு தரப்பினரிடையே மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

                   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார். பாமக மாநில இணைப் பொதுச் செயலர் தி.வேல்முருகன் எம்எல்ஏ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சு.திருமாறன் உள்ளிட்ட இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இனி எந்தப் பிரச்னையும் ஏற்படாது, சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்து கொண்டால். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பது:

                                     தலித் மக்கள் பலர் பாமகவில் இணைந்து வருகிறார்கள். இதைச் சகிக்க முடியாத சிலர், சாதிய மோதல்களைத் தூண்டுவது குறித்து, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக மற்றும் வன்னியர்கள் தாழ்த்தப்ட்ட மக்களுக்கு விரோதிகள் என்று சித்தரிப்பதை பாமக முறியடிக்கும். உள்ள தலித் பொறுப்பாளர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்ட காவல் துறை பாமகவுக்கு எதிராகவும் ஒரு குழுவுக்கு ஆதரவாகவும் வழக்குப் பதிவு செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது

சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றிய பாமக நிர்வாகிகள் நியமனம்


சிதம்பரம்:

              சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றிய பாமக செயலராக சா.சந்தானகுமார், பரங்கிப்பேட்டை (தெற்கு) ஒன்றியச் செயலராக சௌ.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாநில பாமக தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜே.குரு, பாமக துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் கடலூர் (தெற்கு) மாவட்டச் செயலர் வழக்கறிஞர் வேணு. புவனேஸ்வரன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடலூர் அருகே தொழிற்சாலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் வெட்டப்படும் மரங்கள்: பாமக கண்டனம்

கடலூர்:

            கடலூர் அருகே தொழிற்சாலைக்கென வாங்கப்பட்ட நிலத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                கடலூர் அருகே நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் அனல்மின் நிலையம் அமைக்க 1100 ஏக்கர் நிலம் வாங்கத் திட்டமிட்டு 500 ஏக்கருக்கு மேலான நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த நிலங்களில் முந்திரி, சவுக்கு, பனை, தென்னை, வேம்பு, யூகலிப்டஸ் மரங்கள், வெட்டி வேர் வயல்கள் அதிகம் உள்ளன. தொழிற்சாலைக்காக வாங்கப்பட்ட நிலத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தொழிற்சாலை அமைக்க இன்னமும் அனுமதி கிடைக்க வில்லை.

                         ஆனால் நிலம் வாங்கிய நிறுவனம் இந்த நிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டத் தொடங்கி உள்ளன. சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அரசிடமும் மக்களிடமும் வாக்குறுதி அளித்து இருக்கும் இந்த நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான முந்திரி மரங்கள் உள்ளிட்டவற்றை வெட்டி விற்கத் தொடங்கி உள்ளன. இதனால் அந்த நிலங்கள் பாலைவனமாக்கப்பட்டு வருகிறது. வேளாண் நிலங்களை தொழிற்சாலைகளுக்காகக் கையகப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களில் வேளாண் நிலங்களை தொழிற்சாலைகள் வாங்கிக் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், சுனாமியின்போது பாதுகாப்பு அரணாக விளங்கிய மரங்களை வெட்டி வீழ்த்துவதை அனுமதிக்க முடியாது.  

                      மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், அப்பகுதி மக்களையும் மனித உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். தொழிற்சாலைக்கு அனுமதி கிடைக்காததால், வாங்கப்பட்ட நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று திருமால்வளவன் தெரிவித்துள்ளார்.