சென்னை,:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி செப்டம்பர் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கை:
69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களின் தலைகளை எண்ணுவதாக அமையாமல், ஒவ்வொருவரின் எழுத்தறிவு, கல்வித் தகுதி உள்ளிட்ட சமூக, பொருளாதார விவரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ராவ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி செப்டம்பர் 28-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே. மணி பங்கேற்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக