சென்னை:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லாதது போல பா.ம.க.வினர் கற்பனை செய்து கொண்டு, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு, கிளர்ச்சி செய்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதில் எவ்வித கற்பனையும் இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. இதை நாங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியைப் போல, நானும் இந்த அரசை எப்போதும் போற்றி புகழ்ந்து கொண்டு மட்டும் இருக்க முடியாது. மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்களை பா.ம.க. தொடர்ந்து நடத்தும். அதைத்தான் முதல்வர் கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ÷2011 பிப்ரவரியில் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தினால்தான், ஒவ்வொரு சமுதாயத்தின் சமூக, பொருளாதார பின்னணியோடு கூடிய விவரங்கள் கிடைக்கும். மாறாக, தனியாக நடத்தினால், ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று தலைகளைக் கணக்கெடுப்பது மட்டும்தான் நடக்கும்.
இதனால் எவ்வித பயனும் கிடைக்காது என்று ஏராளமான அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, 2011 ஜூன் மாதம் ஜாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்பது கண்துடைப்பு. இது வெறும் நாடகம் என்றார் ராமதாஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக