தைலாபுரம் தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தைலாபுரம் தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாமக நிறுவனர் ராமதாசுடன் ஜான்பாண்டியன் சந்திப்பு


         பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, பாமக பொதுச்செயலர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என பாமக வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பிறந்த நாளில் அமைச்சரவையை கூட்டி 3 பேரின் தூக்கு தண்டனையை குறைக்க தீர்மானம்: டாக்டர் ராமதாஸ்


திண்டிவனம்:
 
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அளித்த பேட்டி:
 
               ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததே இந்த பிரச்சினைக்கு காரணமாகும். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அமைதியாக அகற்றி இருக்க வேண்டும். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கக்கூடாது.

                பறவைகளை சுடுவதற்கு கூட சட்டப்படி அனுமதி கிடையாது. துப்பாக்கி கையில் வைத்திருக்கிற காவல் துறைக்கு மக்களை சுட்டுபொசுக்க யாரும் அதிகாரம் தரவில்லை. இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்குற்றம் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.

              ஆனால் வழக்கம் போலவே சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்த தீர்மானத்தை முறியடிக்க இந்தியா செயல்படுவதாக செய்திகள் வெளி வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. 7 கோடி தமிழர்களின் உனர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இந்தியா செயல்பட வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோர் தன்டனையை குறைக்க கோரி சட்டசபையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என கட்சி வித்தியாசம் இன்றி தமிழகத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.

            
அண்ணா பிறந்தநாளில் தி.மு.க.-அ.தி.மு.க. 2 கட்சிகளும் கைதிகளுக்கு தண்டனையை குறைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. அண்ணா பிறந்த நாளில் அமைச்சரவையை கூட்டி 3 பேரின் தூக்கு தண்டனையை குறைக்க தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும். இனிவரும் தேர்தல்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். பா.ம.க. தலைமையில் சேரும் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

                புதுவையில் ரங்கசாமி புதிதாக கட்சி தொடங்கினார். மக்கள் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைத்துள்ளார். எனவே இடை தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அங்கு ஆதரவு தரும் வகையில் மற்ற கட்சிகள் எதுவும் கண்ணுக்கு புலப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 

பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 13ஆம் தேதி நேர்காணல்: ஜி.கே.மணி


           பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 13ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என
பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

           தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 13.4.2011 அன்று நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களிலிருந்து வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
       
                 பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெறும். பாமக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ள அனைவரும் இந்த நேர்காணலில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் மட்டுமே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. சார்பில் போட்டியிட 6203 பேர் விருப்ப மனு

விழுப்புரம்:
 
              சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 3-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

              தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் நா.ம.கருணாநிதி தலைமையில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் ஆகியோர் கொண்ட குழுவினர் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர்.

             விருப்ப மனுக்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை 6203 பேர் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர். வேளச்சேரி தொகுதியில் டாக்டர் அன்புமணி போட்டியிட சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் ஜெயராமன் விருப்ப மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அன்புமணி போட்டியிட கோரி இளைஞரணி மாநில துணை செயலாளர் விழுப்புரம் சிவகுமார், கடலூர் தமிழ்வாணன், நாகப்பட்டினம் பழனிசாமி, தஞ்சாவூர் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட பா.ம.க. செயலாளர் ரவி அலெக்ஸ் ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

                  பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி செய்யாறு, புவனகிரி, செஞ்சி தொகுதிகளில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்தனர். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி போட்டியிட உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் மனு கொடுத்தார். ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்க தலைவர் குரு போட்டியிட மாநில துணை பொதுச்செயலாளர் பாலு, ஜெயங்கொண்டம் மாவட்ட செயலாளர் வைத்தி மனு கொடுத்தார்.

பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு நாளை வரை நீட்டிப்பு

சென்னை:
 
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பது:-
 
         பா.ம.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தைலாபுரம் தோட்டத்தில் 7-ந் தேதி வரை விருப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் இந்த காலக் கெடுவுக்குள் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரி தந்தி அனுப்புங்கள்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கட்சியினர் தந்தி அனுப்ப வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற  பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில்  உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தோழமைக் கட்சிகளுக்கு முன்னுரிமை: பாமக பொதுக்குழு

தைலாபுரம்:

        சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நேற்று   காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் நடைபெற்றது.

             இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். கட்சித்தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

             நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கான பணித் திட்டங்கள் குறித்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  தேர்தல் பிரச்சாரத்தின் போது தோழமைக் கட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுடன் இணக்கமாக செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்தில், முதல் அமைச்சராக கலைஞர் 6வது முறையாக பதவி ஏற்க பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என முடிவு செய்யப்பட்டது.

தைலாபுரத்தில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு நாளை நடைபெறுகிறது

தைலாபுரம்:

           பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என,   பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

               சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் நடைபெறுகிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சித்தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார். பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றுகிறார்.

              அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அயராமல் உழைப்பதற்கான பணித் திட்டங்கள் குறித்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். தேர்தல் பிரச்சாரத்தின் போது தோழமைக் கட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுடன் இணக்கமாக செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி அறிக்கையில் கூறியுள்ளார்.

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு விண்ணப்பிக்கலாம்

 பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
          ’’தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தைலாபுரம்  தோட்டத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் 3.3.2011 முதல் 7.3.2011 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கென உரிய படிவத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும்  10 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் தலைமையில் இன்று புதுவை மாநில பாமக பொதுக்குழு கூட்டம்

தைலாபுரம் தோட்டம்:

          பா.ம.க.வின் புதுவை மாநில பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று நடக்கிறது.

             புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று  தைலாபுரத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் புதுவை மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து பா.ம.க.வின் புதுவை மாநில செயலாளர் அனந்தராமன் எம்.எல்.ஏ.  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

                 "புதுவை மாநில பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9-30மணியளவில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், அணி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கும் உரிமை 18 வயதினருக்கு மட்டுமே: ராமதாஸ்

திண்டிவனம்:

           தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் கூட்டணி அறிவிப்பு அமையும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது: 

            தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க.வின் கூட்டணி பற்றி பொங்கலுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அந்த கூட்டணி அறிவிப்பு, தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் அமையும். 16 வயதினருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

              இளைஞர்கள் பொது வாழ்வில் ஈடுபடவேண்டியது தான். ஆனால் இந்த திட்டம் பள்ளி மாணவர்களை அரசியலுக்கு இழுத்து வந்துவிடும். எனவே வாக்களிக்கும் உரிமை 18 வயதினருக்கு மட்டுமே இருக்க வேண்டும்.  வறுமை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் விதத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்கும் திட்டமாக தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் உள்ளது. இதனை செயல்படுத்துவதால் கிராமப்புற மக்கள் பலனடைந்து வருகின்றனர் என்றார்.

ராமதாசின் திட்டங்களை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

திண்டிவனம்:
 
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:

           ‘’ இந்த ஆண்டு இளைஞர் 2009-ம் ஆண்டு நமக்கு சோதனை ஆண்டு, 2010-ம் ஆண்டு படிப்பினை ஆண்டு; பாடம் கற்பிக்கப்பட்ட ஆண்டு. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டோம். நம்மில் குறை இருந்தது. கட்சியில் பெரும்பாலானோர் தேர்தல் பணி செய்யவில்லை.

                இருப்பினும் தோல்வியை நல்லது என்றே கருதுகிறேன்.   அதனை பாடமாக கருதி 2010-ல் கடந்த 6 மாத கால மாக கட்சியில் நல்ல முன்னேற்றம் உள்ளது.  இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்தி கிடைத்தால் பா.ம.க. கட்சி 36 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. திட்டமிட்டு உழைத்தால் வெற்றி கிட்டுவது நிச்சயம். ராமதாசின் திட்டங்களை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் செயல்படுத்த வேண்டும். 25 வயதுக்கு உட்பட்டவர்களை கிளை செயலாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.  

              ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் ஆண்கள், 300 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் பணி யாற்ற வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலின் மூலம் 2011-ம் ஆண்டு பா.ம.க.வின் வெற்றி ஆண்டாக மாற்ற வேண்டும். கூட்டணி குறித்து ராமதாஸ் நல்ல முடிவினை எடுப்பார்’’என்று தெரிவித்தார்.
 

36 தொகுதிகளில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு: ராமதாஸ்

தைலாபுரத்தில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் பேசுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். (வலது படம்) கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர்.
திண்டிவனம்:
             வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 36-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்று  கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். 
            திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம்  கட்சியின் நிறுவனர்  ச.ராமதாஸ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  பொதுக்குழுக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமை தாங்கினார்.   
பொதுக் குழுவில் ராமதாஸ் பேசியது:  
             வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 36-க்கும் மேற்பட்ட இடங்களில் பாமக வெற்றி பெறுவது உறுதி. நாம் அணி மாறுவதாக நம் மீது குற்றச்சாட்டு உள்ளது. 25 ஆண்டுகளாக எந்தக் கட்சியும்  தனியாக நின்று போட்டியிட்டதில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கருணாநிதி ஆட்சி வரை கூட்டணிகளை மாற்றி தான் தேர்தலை சந்தித்துள்ளனர். 1967-ல் ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி அமைத்தார். தனியாக செயல்படுபவர்கள் ஓர் ஆண்டுகூட கூட்டணியில் நிலைக்க மாட்டார்கள். 
            வரும் தேர்தலில் தென் மாவட்டங்களில் தொகுதி கேட்டு பெற உள்ளோம். பொங்கலுக்கு பிறகு மதுரை சென்று கட்சியின் பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளேன் என்றார். 
இளைஞர்களுக்கு தனி ஒதுக்கீடு-அன்புமணி ராமதாஸ்: 
பொதுக்குழுவில் இளைஞர் அணி தலைவரும், முன்னாள்  மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியது:  
                வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட பாமகவில் இளைஞர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2009 நமக்கு சாதனை ஆண்டு.  2010 படிப்பினை ஆண்டு. நாம் அப்போது தோற்கடிக்கப்பட்டோம். ஆனால் நம்மிடமே அப்போது சில குறைகள் இருந்தன. நமது கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் திறம்பட செயல்படவில்லை. தோற்றதும் ஒரு வகையில் நல்லதென்று நினைக்கிறேன். அதையொரு பாடமாக கருத வேண்டும். 
              2010-ல் இருந்த குறையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 6 மாதங்களாக கட்சியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  பேரவைத் தேர்தலுக்கு பிறகு 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்சி பொறுப்புகள் மாற்றப்பட உள்ளன. வரும் தேர்தலில் இளைஞர்கள் ஒத்துழைத்தால் தற்போது நம்மிடம் உள்ள 18 இடங்களை 36-ஆக மாற்ற முடியும். கூட்டணி குறித்து நிறுவனர் தகுந்த நேரத்தில் அறிவிப்பார் என்றார் அன்புமணி ராமதாஸ்.
தீர்மானங்கள்: 
             பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  இலங்கைத் தமிழர்கள் மீது சிங்களப் படையினரின் வெறிச்செயலை கண்டிப்பதுடன், போரின்போது இலங்கை  ராணுவத்தினர் நடத்திய மனித உரிமை மீறல்களையும், அத்துமீறல்களையும் போர்க் குற்றங்களாக கருதி விசாரணை நடத்த பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் முன்வந்திருப்பதை வரவேற்பது. 
              கச்சத் தீவு பிரச்னை தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும்,தமிழக மீனவர்களை காக்க வேண்டுமென்ற குரல் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க செய்யவேண்டும். 
           மருத்துவக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் மாணவர்களை  சேர்ப்பதற்கு தேசிய அளவில் ஒரு பொதுவான நுழைவுத்தேர்வை நடத்துவதென்ற முயற்சியை இந்திய மருத்துவ கவுன்சில் கைவிட வேண்டும். மழை, வெள்ள நிவாரண உதவிகளை மாநில அரசு முழு அளவில் வழங்க முன்வர வேண்டும். 
               விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
            பொதுக் குழுவில் கட்சியின் இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, அ.கி.மூர்த்தி,என்.டி.சண்முகம், கட்சியின் பொதுச் செயலர் வடிவேல் ராவணன்,மாநில பொருளாளர் சையது அலி அகமது, கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஜன.2-ல் பாமக பொதுக்குழு கூட்டம்

சென்னை:

          பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 2-ம் தேதியன்று நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கவும், 2010-ம் ஆண்டின் கட்சி செயல்பாடுகளை ஆய்வுசெய்யவும் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்தார்.

தமிழக இளைஞர்கள் பாமகவில் இணைந்தால் கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் செல்லத் தேவையில்லை: பாமக நிறுவனர் ராமதாஸ்

திண்டிவனம்:

 
            தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் நமது கட்சியில் இணைந்தால் நாம் கூட்டணியில்லாமல் தனித்து நின்று 100 இடங்களில் வெற்றி பெறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் நான் ஏன் கோபாலபுரத்துக்கும், போயஸ் தோட்டத்துக்கும் செல்ல வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

             மரக்காணம் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக, திமுக கட்சியினர் உள்பட தேமுதிக மாவட்ட தொண்டரணிச் செயலர் குமாரசாமி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாûஸ சனிக்கிழமை சந்தித்து பாமகவில் இணைந்து கொண்டனர்.

இவர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் மேலும் கூறியது:

              பல்வேறு கட்சியில் இருந்து தற்போது பாமகவில் சேர்ந்துள்ளனர். இவர்களை நான் வரவேற்கிறேன். 2020-ல் தமிழகம் எப்படி இருக்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையுடன் 2007-ல் ஒரு புத்தகம் வெளியிட்டோம். அதே போல் வறுமை ஒழிப்பு, விவசாயம், அனைத்து குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை என்பதை பற்றியெல்லாம் பாமக சார்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒவ்வொரு ஆண்டும் மாதிரி பட்ஜெட் போடும் ஒரே கட்சி பாமகதான். 

                தமிழக அரசு சார்பில் 26-வது ஆண்டு அறிக்கையை வாணிபக் கழகத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் டாஸ்மாக் விற்பனை பற்றியும் அதன் வருவாய் குறித்தும் உள்ளன. கொள்கையில்லாத கட்சிகளுக்கு வறுமை ஒழிப்பு பற்றிய கவலை இல்லை. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் நமது கட்சியில் இணைந்தால் நாம் தனித்து நின்றாலும் 100 இடங்களில் வெற்றி பெறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் நான் ஏன்  கோபாலபுரத்துக்கும், போயஸ் தோட்டத்துக்கும் செல்ல வேண்டும் என்றார்.

                     நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் ஏழுமலை வரவேற்புரை வழங்கினார். மாநில பொதுச் செயலர் வடிவேல் ராவணன், துணை பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சங்கர், மாவட்டப் பொருளர் சந்தியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் சுந்திரமூர்த்தி, பாமக ஒன்றியச் செயலர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமதாசு முன்னிலையில் பாமகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்


திண்டிவனம்:

         திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாமக நிறுவனர் ராமதாசு முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

           மயிலம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட இளமங்களம் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக இளைஞரணிச் செயலர் பரசுராமன், அவைத்தலைவர் பெரியண்ணன், துணைச் செயலர் தாமோதரன் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமதாசு முன்னிலையில் பாமக இணைந்தனர். அப்போது பாமக உறுப்பினர் அட்டையை ராமதாசுவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் போது, மாவட்டச் செயலர் மணிமாறன் உடனிருந்தார். இதற்கான ஏற்பாட்டை மயிலம் வடக்கு ஒன்றியச் செயலர் வழக்கறிஞர் சம்பத் செய்திருந்தார்.