தேர்தல் நேரத்தில் அரசியல் பேரம் பேசுவதில் பா.ம.க.வுக்கு உடன்பாடு இல்லை என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பா.ம.க.வின் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் பேசியதாவது:
மக்களவைத் தேர்தல் தோல்வி மூலம் தேர்தல் நேர பேரம் பேசுவதில் பா.ம.க.வின் செல்வாக்கு குறைந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. பேரம் பேசுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மற்ற கட்சிகளைவிட எங்கள் கட்சிக்கென தனிப்பட்ட கொள்கைகள், செயல் திட்டங்கள் உள்ளன. அதன்படியே எங்கள் செயல்பாடுகள் உள்ளன. பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் உள்கட்சித் தேர்தல் ஆகியவை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டன. மற்றவை பற்றி கூட்டத்தில் பங்கேற்ற யாரும், எதுவும் பேசவில்லை. நிரந்தர எதிரி இல்லை: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை என்று கூறுவார்கள். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தி.மு.க.வை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல நசுக்கி விடுவேன் என்று ராஜாஜி கூறினார். ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தி.மு.க.வினர் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். எனினும் பின்னர் வந்த தேர்தலில், தி.மு.க., ராஜாஜியின் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனை தனது "நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் முதல்வர் கருணாநிதியே குறிப்பிட்டுள்ளார். தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் எங்கள் கட்சியின் பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியை 2 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். கூட்டணி பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். கூட்டணியை ஒரே நாளில் பேசி முடிவு செய்து விட முடியாது. அதற்கு சில நாள்கள் தேவைப்படும். தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எங்களின் நிபந்தனை என்ன என்பது பற்றி பத்திரிகையாளர்களிடம் கூற முடியாது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்த பிரச்னைக்கு நாங்கள் முக்கியத்துவம் தரவில்லை. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலும் அது பற்றி விவாதிக்கப்படவில்லை. 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வுடன் நாங்கள் பேரம் பேசுவதாகக் கூறுவது பத்திரிகையாளர்களின் கற்பனை ஆகும். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இல்லாவிட்டால் எந்த பாதிப்பும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளது பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என்றார்.
அ.தி.மு.க.விடம் இருந்து அழைப்பு:
அ.தி.மு.க.விடம் இருந்து கூட்டணி குறித்து ஏதும் அழைப்பு வந்ததா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அ.தி.மு.க.வுடன் எங்கள் கட்சிக்கு இருந்த உறவு முறிந்த பின்னரே பென்னாகரம் இடைத் தேர்தல் நடைபெற்றது. எனினும், பென்னாகரம் இடைத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அ.தி.மு.க. முன்வந்தது. ஏற்கெனவே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவைத் தேர்தலிலும் எங்களை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். இது குறித்து அக்கட்சியின் தலைவர்கள் சிலர் எங்கள் கட்சித் தலைவர்களுடன் பேசினார்கள். இதை ஏற்கெனவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளோம்' என்றார் ராமதாஸ். பேட்டியின்போது ஜி.கே.மணி, அன்புமணி, ஆர்.வேலு, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பா.ம.க. ஆதரிக்காவிட்டால் மேலவை இல்லை
"தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வருவது என்ற முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் பா.ம.க. அளித்த ஆதரவால்தான் நிறைவேறியுள்ளது. இது குறித்த தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. பா.ம.க. மட்டும் தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்திருந்தால், அந்தத் தீர்மானம் நிச்சயம் நிறைவேறியிருக்காது. எனவே, பா.ம.க. ஆதரவு இல்லாவிட்டால், தமிழகத்தில் மேலவை இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி' என்றார் ராமதாஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக