பா.ம.க. தொடர் போராட்டங்கள் அறிவிப்பு


              
                 வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து 3 போராட்டங்களை பா.ம.க. அறிவித்துள்ளது. தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
தீர்மானங்கள்:
                 சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட சாதியினர் அனைவருக்கும் அவரவர் விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு மிக அவசியம். எனவே, நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தவாறு 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதி வாரியாக மேற்கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 15-ம் தேதி அனைத்து மாவட்ட, வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரிலும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். வன்னியர்களுக்கு தமிழக அரசு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 

தமிழில் பெயர் பலகை: 
                    செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு முன்பு, தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், தொழில் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி புதன்கிழமை (ஜூன் 9) சென்னையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ந்து இதே கோரிக்கைக்காக ஜூன் 21-ம் தேதி அனைத்து மாவட்ட, வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜூன் 10-ம் தேதி பா.ம.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், பெரும் தொழில் நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் நுழைவதற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும். 

வறட்சி மாவட்டங்களாக... 
                        வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு குறுகிய கால அளவிலான காலக் கெடுவை அறிவித்து, அதற்குள்ளாக தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதனை இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: