தி.மு.க.வுடன் கூட்டணி: பா.ம.க. முடிவு நாளை அறிவிப்பு?


          தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது பற்றிய பா.ம.க.வின் முடிவு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
                மேலும், அன்புமணிக்கு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் அக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார் என்று கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் மே 30-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவில், 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி அமைப்பது என்றும், 2011-க்குப் பின்னர் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தி.மு.க.வின் இந்த முடிவு குறித்து திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் மே 31-ம் தேதி நடைபெற்ற பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி சென்னையில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர். 
                இப்போதைய மாநிலங்களவைத் தேர்தலிலேயே அன்புமணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் பா.ம.க.வினர் வலியுறுத்தியதாகவும், இதனை ஏற்க தி.மு.க. மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால், மாநிலங்களவைத் தேர்தல் குறித்து முதல்வரிடம் எதுவும் பேசவில்லை என்று பா.மக. தலைவர் ஜி.கே.மணி மறுத்தார். தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவின் முடிவு குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க பா.ம.க.வினர் தொடர்ந்து முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் அல்லது 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு எத்தனை இடம் அளிக்கப்படும் என்று இப்போதே உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பதை முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்த பா.ம.க.வினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
                எனினும், முதல்வர் கருணாநிதியை சந்திக்க பா.ம.க.வினருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விடாமல் முயற்சி செய்து வரும் பா.ம.க.வினர் கருணாநிதியை திங்கள்கிழமை சந்திக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாகப் பேசப்படுகிறது. இதற்கிடையே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.சைதாப்பேட்டை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மற்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின் ராமதாûஸ சந்தித்த செய்தியாளர்களிடம், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை பற்றி தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை  நடைபெறுகிறது. அக்கூட்டத்துக்குப் பின்னர் "நடந்தது என்ன?' என்பது பற்றி தெரிவிப்பதாக ராமதாஸ் கூறினார். எனவே, தி.மு.க. - பா.ம.க. கூட்டணி பற்றி தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய பா.ம.க.வின் முடிவு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: